இந்தியா இலங்கை பிரதான செய்திகள்

புலிகள் மீதான தடையை எதிர்த்து வழக்கு தொடர, வைகோவிற்கு உரிமை இல்லை…

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை என சென்னை உயர் நீதிமன்றில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும்.

அந்த தீர்ப்பாயம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விசாரணை நடத்தி, விடுதலைப்புலிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து, தடையை நீட்டிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும். அதன்படி மத்திய அரசு இறுதி உத்தரவு பிறப்பிக்கும்.

இதன்படி, கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உத்தரவிட்டது. இதன்படி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வைகோ நீதிமன்றில் முன்னிலையானார். . அதன்போது மத்திய அரசின் சட்டத்தரணி வி.டி.பாலாஜி முன்னிலையாகி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை. இந்த உத்தரவை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கம்தான் வழக்கு தொடர முடியும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்கை எதிர் வரும் 14-ந் திகதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.