Home இந்தியா எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவின் அணுகு முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் கருணாநிதி….

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவின் அணுகு முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் கருணாநிதி….

by admin

இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவராக அறியப்படும் கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமையன்று (07.08.2018) காலமானார். இந்நிலையில் மூத்த ஊடகவியலாளர் மற்றும் ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் பிபிசி தமிழிடம் பேசியபோது கருணாநிதியின் அரசியல் ஆதிக்கம், தனிச்சிறப்புகள், இலங்கை விவகாரம் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு தனது பதிலை பகிர்ந்துகொண்டார்.

getty images
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சமூக நீதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தவரா கருணாநிதி?

சமூக நீதிதான் கருணாநிதியின் உயிர். 80 வருட காலம் அவர் சமூக நீதிக்காக செயல்பட்டிருக்கிறார். முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா இறந்தபிறகு திமுக தலைவராக பொறுப்பேற்று 50 ஆண்டுகளாக செயல்பட்டிருக்கிறார் கருணாநிதி. இது மிகப்பெரும் சாதனை. ஐம்பது ஆண்டுகாலம் ஒரு கட்சி தலைவராக இருந்திருப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்!

13 முறை அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஜெயலலிதா ஒரு முறை தேர்தலில் தோல்வி கண்டவர். ஆனால் கருணாநிதி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்ததே இல்லை.

அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் சரி சமூக நீதி குறித்துச் செயல்படுவதில் அவருக்கு முழு அர்ப்பணிப்பு இருந்தது. எந்த ஒரு விவகாரத்திலும் அவர் சமூக நீதி குறித்து சிந்திப்பவராக இருந்தார்.

பிராமணரல்லாதோர் இயக்கத்தின் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், அவருக்கு பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டும் பழக்கம் இருந்ததே இல்லை. அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். மூத்த நண்பர் என்றே கருதவேண்டும். அவர் சித்தாந்த ரீதியாக எதிர்த்தாரே தவிர பிராமணர்கள் மீதும் சரி எந்தவொரு குழு மீதும் சரி பாரபட்சம் காட்டியதே கிடையாது.

கருணாநிதி

அவர் கடவுள் மறுப்பாளர் மற்றும் பகுத்தறிவாதி. அதை எந்தவொரு காரணத்துக்காவும் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கியதே இல்லை. அதேசமயம் எந்தவொரு மதத்தின் மீதும் குறிவைத்து பாரபட்சம் காட்டியதில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கு பிரத்யேக தனி ஆதரவை காலம் முழுவதும் வழங்கிவந்தார்.

இந்தியாவில் பொதுநல திட்டங்களை செயல்படுத்துவதை பொருத்தவரையில் தமிழகம் எப்போதுமே முன்னணி 2 மாநிலங்களில் ஒன்றாக விளங்கியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கருணாநிதி. இந்த விஷயத்தில் அதிமுகவுக்கும் பங்கு இருக்கிறது. இப்போது இருக்கும் அதிமுகவுக்கு அல்ல… எம்ஜிஆர், ஜெயலலிதா கால அதிமுகவை நான் குறிப்பிடுகிறேன். இரு கட்சிகளுக்கும் இடையே எவ்வளவு வேற்றுமை இருந்தாலும் இந்த ஒரு விவகாரத்தில் இரு கட்சிகளும் ஆர்வமாக செயல்பட்டன. பொதுநல திட்டங்களைச் செயல்படுத்துவதில் இரு கட்சிகளுக்கும் போட்டியே இருந்தது.

கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்று குடிசை மாற்று வாரியத்தை தொடங்கினார். அரிசிக்கு மானியம் தருவது உள்ளிட்ட திட்டங்களின் மூலம் பொது விநியோக திட்டத்தை வலுவாக்கினார். அதே போல ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது கவனம் செலுத்தினார். சில சர்ச்சைகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் அவரது வாழ்க்கை முழுவதும் நிரம்பியிருந்தது. எனினும் எவ்வித அதிர்ச்சியில் இருந்தும் குதித்தெழுந்து மீண்டுவரும் ஆற்றல் அவருக்கிருந்தது.

கட்சி – ஆட்சி நிர்வாகத்தில் கருணாநிதியின் அணுகுமுறை எத்தகையது?

அவர் முற்றிலும் அணுகக் கூடியவராகவே இருந்தார். இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அணுகு முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் கருணாநிதி. கட்சி அலுவலகத்துக்குச் சென்றால் குறிப்பிட்ட நேரங்களில் அவரை நிச்சயம் பார்க்கமுடியும். அவரை நான் பலமுறை தொலைபேசியில் அழைத்திருக்கிறேன். சில விவகாரங்கள் தொடர்பாக அதிகாலை வேளையில் அவரே என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார்; உடனே அவரை நேரில் பார்க்கவும் முடிந்தது. வெளிப்படைத்தன்மையுடையவராக அவர் எப்போதுமே இருந்திருக்கிறார். இது இன்றைய அரசியல்வாதிகள் பலரிடம் பார்க்கவே முடியாத ஒன்று.

நிர்வாகம் செய்வதை பொருத்தவரையில் பல விஷயங்களில் அவர் தீர்மானகரமாக முடிவு எடுப்பவராக அறியப்பட்டு வந்தார். விரைவாக முடிவு எடுப்பது மட்டுமின்றி அதில் உறுதியாக இருப்பதிலும் தனித்துவம் மிக்கவராக விளங்கினார். குடிமை பணியியல் அதிகாரிகள் அவருடன் வேலை செய்ய எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள். உண்டு …இல்லை என்பதை தீர்க்கமாகச் சொல்லும் பார்வையும் அறிவும் அவருக்கிருந்தது.

ஜெயலலிதாவுக்கும் அவருக்கும் விரோதம் இருந்ததெனினும், எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி இருவருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் பரஸ்பர மரியாதை இருந்தது. எம்ஜிஆர் முன்பு ஒருமுறை ஜேப்பியார், கலைஞர் எனச் சொல்வதற்கு பதிலாக கருணாநிதி என அழைத்துவிட்டார் என்பதற்காக ஜேப்பியாரை திட்டி தனது காரில் இருந்து இறக்கிவிட்டு நடக்கவைத்தார். ஏனெனில் கருணாநிதி மீது அவருக்கு மதிப்பிருந்தது. அதேபோல எம்ஜிஆர் இறந்ததும் விரைவாக நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் திமுக தலைவர்.

என்.ராம்

கருணாநிதி இதழியலில் மிளிர்ந்தது எப்படி? அவருக்கும் செய்தியாளருக்குமான உறவு எப்படி இருந்தது?

கடைசி சில வருடங்களை தவிர்த்து அவர் தினமும் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். பத்திரிகைக்கு எழுதுவது, பாட்டு எழுதுவது, வசனம் எழுதுவது, திரைக்கதை எழுதுவது என எதையாவது எழுதிக்கொண்டே இருப்பார். யோகா செய்வதை போல தினமும் எழுதுவதையும் வழக்கமாக்கிக்கொண்டவர்.

இந்தியாவில் வேறு எந்த அரசியல்வாதிக்கும் எழுத்து கருணாநிதி அளவுக்கு கைகூடியதில்லை. உலகிலேயே கூட கருணாநிதி போன்று லாவகமாக சொற்களை கையாண்டவர்கள் மிக அரிது. பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட ஒருவர் இவ்வளவுதூரம் எழுதுவது சிறப்பான ஒன்று.

கருணாநிதி ஒரு கண்டிப்பான பத்திரிகை ஆசிரியர். அவருக்கு எதாவதொரு இடத்தில் தவறு வந்தாலும் பிடிக்காது. உடனடியாக திருத்தச் சொல்வார்.

தமிழ் மீது அவருக்கு பற்று அதிகம். தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது மட்டுமின்றி அதற்கு பாடலும் எழுதியவர் கருணாநிதி. மத்தியில் இருந்து வீம்புடன் இந்தி திணிப்பு செய்யப்பட்டதை எதிர்த்தவர் என்றாலும் கூட இந்தி மீது அவருக்கு வெறுப்பு இருந்ததில்லை.

அவருக்கு எப்போதுமே பத்திரிகையாளர்கள் நெருக்கம்தான். பத்திரிகையாளர்கள் மற்றும் இதழியல் மீது அவருக்கு நல்ல உறவு இருந்தது. நாங்கள் அரசின் செயல்களை கண்டிக்கும்போது அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார்.

கருணாநிதி

ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் பண்பு கொண்டவர்களுக்கு மத்தியில் கருணாநிதி வித்தியசமானவர். அரசியல், முதல்வர் ஆகியவற்றுக்கு அப்பால் அவர் எழுத்தையும் இதழியலையும் கைவிட்டதில்லை.

கருணாநிதி எப்போதுமே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வந்திருந்தார். அவர் ஆட்சியில் இருக்கும்போது சற்று கடுமையான விமர்சனங்களை முன் வைக்க முடியும். அவர்கள் அரசு விளம்பரங்களை தரமாட்டார்கள் ஆனால் ஜெயலலிதா போல 200 அவதூறு வழக்குகளை எல்லாம் போட்டது கிடையாது. சகிப்புத்தன்மை மிக்கவர் அவர்.

கருணாநிதியுடனான உங்களது பிரத்யேக உறவு ?

நானும் அவரும் எதாவது கூட்டங்களில் சந்தித்துக்கொள்ளும்போது, ”இங்கே இரண்டு பேருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது” என என்னையும் சேர்த்துச் சொல்வார். சில நேரங்களில் கிரிக்கெட் குறித்து நாங்கள் அதிகம் பேசுவோம். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது சிரிப்பூட்டும் வகையில் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் அவர் வர்ணனை செய்து காண்பிப்பார்.

அவரை பார்க்கும்போது நான் பூங்கொத்து எடுத்துச் செல்லமாட்டேன் புத்தகம்தான் எடுத்துச் செல்வேன். அதை அவர் வாங்கிப் படிக்கும் வழக்கமும் கொண்டிருந்தார்.

தேசிய அரசியலில் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

1969-71 களில் காங்கிரஸ் பிளவுபட்டபோது திமுக ஆதரவு இல்லாவிடில் இந்திராகாந்தி ஆட்சி தப்பித்திருக்காது. தேசிய அரசியலில் கருணாநிதியின் கூட்டணி எப்போதுமே முக்கியப்பங்கு வகித்திருக்கிறது.

அதே சமயம், எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபடி கடுமையாக எதிர்த்த ஒரே கட்சி திமுக. எமெர்ஜென்சியின்போது திமுகவின் ஆட்சி கூட டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்போது இந்திரா காந்தியுடன் இணங்கி ஆட்சியில் இருந்திருக்கலாம். ஆனால் மக்களாட்சி குறித்து நம்பிக்கை கொண்டு தெளிவான, ஒரு கடுமையாக எதிர்ப்பு நிலையை எடுத்தார் கருணாநிதி.

கருணாநிதி

திமுகவினர் பலர் சிறை வைக்கப்பட்டனர். அப்போது சிறையில் கருணாநிதி மகன் ஸ்டாலின் மிகக்கடுமையாக அடித்து உதைக்கப்பட்டிருந்தார்.

காலம் உருண்டோட, ஒரு கட்டத்தில் திமுக தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்தது. திமுக ஒரு சந்தர்ப்பவாத நிலையை எடுத்தது என்று சொல்லலாம். ஏனெனில் திமுகவின் நோக்கம் எப்போதும் மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது.

ஜெயலலிதா ஒரு ஸ்திரத்தன்மையற்ற போக்கை கொண்டவர் என விமர்சனங்கள் இருந்தன ஆனால் கருணாநிதி தேசிய அரசியலில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாண்டார். காங்கிரஸ் , பாஜக என இரு கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஆதிக்கம் செலுத்துபவராக இருந்திருக்கிறார்.

கருணாநிதி ஆட்சியிலும் கட்சியிலும் சறுக்கிய இடங்கள் எவை?

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் கொல்லப்பட்ட விவகாரத்தை ஒழுங்காக கையாளவில்லை. மேலும் விடுதலைபுலிகளுக்கு இடங்கொடுத்தது முக்கியமானது.

2 ஜி விவகாரத்தில் இப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த விவகாரத்தை அவர்கள் வேறு மாதிரி அணுகியிருந்திருக்கலாம். இதைத்தவிர சில சிறு சிறு விவகாரங்களிலும் சறுக்கலை சந்தித்திருக்கிறார்கள்.

திமுகவில் வம்சாவளியாக பதவி தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். ஸ்டாலின் தொண்டராக வாழ்க்கைய துவங்கியவர். மிசாவில் அவர் மிக கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார். ஆரம்பகாலங்களில் அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. கருணாநிதிதான் ஆதிக்கம் செலுத்தும் தலைவராக இருந்தார்.

இந்திராகாந்தி இறந்த பிறகு ராஜீவ்காந்தி வந்தது போல திடீரென வந்தவரல்ல ஸ்டாலின்.

கருணாநிதி
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

திராவிட அரசியலுக்கு மாற்று அரசியல் இப்போது தீவிரமாக விவாதிக்கப்படுகிறது…

இது குறித்த பேச்சுக்கள் தொடர்ந்தாலும், சில நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் மாற்று அரசியலை விட திராவிட கட்சிகள் ஆதிக்கம் தொடரும் என்றே நினைக்கிறேன். சமீபத்திய கருத்துக்கணிப்புகள் கூட திமுக கூட்டணி வெல்லும் என்றே தெரிவிக்கின்றன ஏனெனில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பலவீனமாக தெரிகிறது.

கட்டமைப்பு ரீதியாக திமுக வலுவானதாக உள்ளது என்பதே எனது கருத்து.

கலைஞர் மறைவு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

14 வயதில் அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர், 80 வருடத்தை அதில் செலவிட்டிருக்கிறார். ஐம்பது வருடங்கள் அவர் ஒரு கட்சியின் தலைவராக பணியாற்றியிருக்கிறார். 13 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி கண்டுள்ளார், ஐந்து முறை முதல்வர் பதவி வகித்துள்ளார். ஆகவே இது ஒரு சகாப்தத்தின் முடிவு.

ஒரு புதிய தொடக்கத்துக்கு கலைஞரின் மறைவு வித்திடுகிறது. கலைஞர் உடல்நிலை ஒன்றரை வருடங்களாக சரி இல்லை என்பது மக்களுக்குத் தெரியும். அவரது எழுத்துகள், திட்டங்கள் அவர் பெயரைச் சொல்லும். திராவிடத்தின் வீச்சு தொடரும்.

இந்தியாவின் பெரும் அத்தியாயம் கருணாநிதி. ஒரு இடதுசாரி போல தனது வாழ்க்கையை துவங்கினார். அவருக்கு பொதுவுடைமைதான் பிடிக்கும். ஆனால் பிற்காலத்தில் அவை மாறின. தன்னுடைய உழைப்பால்… பண்பால்… அணுகுமுறையால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே தனித்துவமான இடத்தை பிடித்திருக்கிறார்.

பிரபாகரனையும் புலிகளையும் திமுக காப்பாற்றியிருக்க முடியுமா?  – என். ராம்…

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More