இலங்கை கட்டுரைகள்

பனை மான்மியம். வடக்கு மாகாண பனை எழுச்சி வாரமும் நாமும்….

கணபதி சர்வானந்தா


பனை எங்கள் சூழல். பனை எங்கள் பண்பாடு.பனை எங்கள் பொருளாதாரம்.

கடந்த மாதம் , யூலை 22 ஆம் திகதி தொட்டு 28ஆம் திகதிவரை பனை மான்மியம் என்னும் தலைப்பில் வட மாகாண பனை எழுச்சி வாரம் என்னும் ஒரு நிகழ்வு யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், பனை அபிவிருத்திச் சபை, பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்கள், பேரிணையங்கள் , கொத்தணிகள், பனைசார் உற்பத்திக் குழுக்கள் எனப் பல நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன. ஒவ்வொரு நாள் நிகழ்வும் மங்கல விளக்கேற்றல், நடன நாடக நிகழ்வுகளோடு ஆரம்பமானது. தமிழ்ப் பாரம்பரிய வாத்தியமான பறை முழக்கத்தை அங்கு கேட்டோம். மாணவ மாணவிகளின் இசைக் கச்சேரிகளைக் கேட்டோம். அத்துடன் சமூக நாடகம், சமூக நடனம், வில்லுப்பாட்டு, நாடக அரங்கேற்றம், சிறப்புப் பட்டி மன்றம், சிறுவர் நாட்டார் பாடல்கள் என்பன அரங்கேறி நிகழ்வுக்கு வந்த மக்கள் மகிழ்விக்கப்பட்டனர். அங்கத்தவர்கள் கௌரவிக்கப் பட்டனர். பரிசில்கள் வழங்கப்பட்டன.“தாலம்” என்ற ஆண்டுச் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. எல்லா நாள் நிகழ்வுகளிலும் அனுசரணையாளர்களும், அவர்களது பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர். . இறுதி நாள் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களும், அத் துறைசார் அமைச்சரும் மற்றும் அத் துறைசார் புலமையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். பனம் பொருட்களாலான பலவித உணவுப் பண்டங்கள் தொட்டு பலவிதமான கைவினைப் பொருட்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பொதியிடலில் நவீன தொழில் நுட்பம் நன்றாக வேரூன்றியிருப்பதைக் கண்டோம். பல வழிகளிலும் இயல்பு மறைக்கப்பட்டிருந்தது. இயற்கையை மறைக்கும் ஒரு “பேஷியல்” உலகத்தை நோக்கி நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம் என்றதற்கு இது ஒரு உதாரணமாகலாம்.

ஏனோ இந்தப் பனை தொடர்பான நிகழ்வில் அதன் வேர் மூலங்களை காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படவில்லை.கிராமியப் பண்பாட்டோடு பனைக்கு இருக்கக் கூடிய தொடர்பை ஒரு ஒலி – ஒளி ஆவணமாகப் படைத்திருந்தால் அது பற்றி அறியாத பலருக்கு இதுபோன்ற விடயங்கள் பல தகவல்களைச் சொல்லி இருக்கும். பனை தொடர்பில் நாம் கொண்டிருந்த பண்டைய பழக்க வழக்கங்கள் இன்றைய நாட்களில் எவ்வாறு மாறுபடுகின்றன என்ற தகவல்களும், விளக்கங்களும் அடங்கிய தகவல் நிலையத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இயல்பைத்தான் அங்கு கொண்டு வர முடியவில்லை என்றாலும் அவை தொடர்பான ஒரு புகைப்பட மற்றும் காணொளிக் காட்சியையாவது ஏற்படுத்தியிருக்கலாம். பனை தொடர்பான கிராமத்து வாழ்க்கை முறைகள் பற்றிப் பேசுவதற்கு எத்தனை விடயங்கள் உண்டு. பனையோடு பின்னிப் பிணைந்ததே பண்டைய வாழ்க்கை முறை என்று சொல்லுமளவுக்கு பனையின் முக்கியத்துவம் உணரப்பட்டிருந்தது. சாதாரணமாகப் பனாட்டு உற்பத்தியை எடுத்துக் கொண்டால் அதில் கைக்கொள்ளப்படுகின்ற இயற்கைத்தொழில் நுட்பங்கள் என்ன லேசானவையா? அதன் பின்னணியிலுள்ள விஞ்ஞான விளக்கங்கள் பற்றிப் பக்கம் பக்கமாகக் கட்டுரையும் எழுதலாம். விரும்பினால் அதில் கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வினையும் மேற்கொள்ளலாம்.

கிராமியம் தொடர்பான இது போன்ற விழாவிற்கென ஒரு கலாசாரமிருக்கிறது. ஒரு ஒழுங்கு இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே இத்தகைய விழாக்கள் திட்டமிடப்படுகின்றன. சிங்கள கலாசாரத்தையோ அல்லது பண்பாட்டையோ பிரதிபலிக்கின்ற விழாக்களை நடத்துகின்ற அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயன்றளவு கிராமத்தை அப்படியே பிரதிபலிக்கக் கூடிய முறையில் ஒழுங்குகளை மேற்கொள்வர். தமது உற்பத்திகளை இயற்கையாகக் காட்சிப் படுத்துவர். விசேடமாக அவர்களின் உணவுத் திரு விழாக்களிலே இதனை நீங்கள் பார்க்கலாம். கித்துள் பற்றியதான விழா ஒன்றினை ஏற்பாடு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கித்துள் பயிரிடப்படுகின்ற கிராமத்துச் சூழலிலே கித்துள் எப்படி பரிமாறப்படுகின்றதோ, அப்படியே அதே நடை, உடை, பாவனை என்றெல்லாம் கிராமிய மணம் கமழுகின்ற விதத்தில் இயல்பு நிலை மாறாது கித்துள் வரலாறு படைக்கப்படும். கித்துள் பற்றி முதல் தடவையாக அறிய விரும்புகிற ஒருவருக்குக் கித்துள் தொடர்பான அத்தனை விபரங்களும் துண்டுப் பிரசுரமாகவோ அல்லது சிறிய நூல்வடிவமாகவோ அங்கே கிடைக்கும்.


ஏறத்தாழ எட்டு நிறுவனங்களின் பங்களிப்போடு நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத் திலே ஒருவருக்காவது இது போன்றதொரு முன்மாதிரியான சிந்தனை எழவில்லையே என்றது வேதனைக்குரிய விடயம். இப்படியான எண்ணங்கள் எம்மிடத்தில் இல்லையா? அல்லது அது சார்ந்த கல்வித் துறையில் இது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையா? பனை மான்மியம் என்ற பெயரை வைத்துக் கொண்டு பல லட்ச ரூபா செலவில் நடத்தப்படும் இவ்வகையான விழாக்களும், கொண்டாட்டங்களும் தாம் கொண்ட நோக்கத்தை சென்றடையாது போனால் விழாக்களை நடத்துவதில் எதுவித பயனுமில்லை. அங்கு நின்றவர்கள் தமது சீருடைகளில் காட்டிய அக்கறையையும்,அரங்க அமைப்பில் காட்டிய முக்கியத்துவத்தையும், விழாவுக்கு வந்த முக்கியஸ்தர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்றதில் கொண்ட கடமைப்பாட்டையும் பனை மான்மியத்தில் காட்டவில்லயே என்ற ஆதங்கம் எழுகிறது.அழைப்பிதழில் மிகவும் முக்கிய விடயத்திலேயே கோளாறு ஏற்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. ஊடகச் செய்திக்காக அக் கண்காட்சி தொடர்பான விபரக் கொத்து ஏதாவது உண்டா என்று கேட்டபோது, அப்படி ஒன்றும் இல்லை என்ற பதிலே முதல் வந்தது. பின்னர் அழைப்பிதழ் போட்டோ பிரதி ஒன்றைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்தார் ஒரு அன்பர். பனை தொடர்பில் தனக்கிருக்கின்ற வேதனையை கீழ் கண்டவாறு வெளியிட்டார் அங்கு நின்ற ஒரு பார்வையாளர்.


இன்றும் வட மாகாணத்திலுள்ள பனை வளம் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டு வருகின்றன. பனங் காணிகள் அழிக்கப்பட்டுத் தோட்டங்களாகவும், இருப்பிடங் களாகவும் மாற்றப்பட்டுக் கொண்டு வருவதோடு, தமது அன்றாடத் தேவைகளுக்கா கவும்,பணத் தேவைகளுக்காகவும் பனையைத் தறித்து வருகின்றனர் மக்கள். ஒரு ஊரின் வளம் அழிக்கப்படுமாயின் மறைமுகமாக அவ்வூர் மக்கள் சார்ந்த சமூக வரலாறும், பண்பாடுகளும் அழிக்கப்படுவதாகவே கருதலாம். முன்னொரு காலத்தில் வாழ்வோடு பின்னிப் பிணைத்திருந்த பனையும், அது சார்ந்த செயற்பாடுகளும் இன்று மக்களை விட்டு விலகி வெகுதூரம் சென்றுவிட்டதை நாம் கண் கூடாகக் காணலாம். அவை அனைத்தும் காரியாலயச் செயற்பாடுகள் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளும், சட்டத்திற்குள்ளும் முடங்கிப் போய்விட்ட அவல நிலையே இன்று காணப்படுகிறது. மனித மேம்பாடுகளோடு பிணைந்து காணப்படும் கலை, கலாசாரம், பண்பாடு என்பன எப்பொழுது சட்ட வரையறைக்குள் கொண்டு செல்லப்படுகின்றதோ அன்றே அதன் தனித்துவத்தை மக்களாகிய நாம் இழந்துபோகிறோம். மக்கள் கைகளிலும், அவர்கள் செயற்பாட்டிலும் இருந்த பல விடயங்கள் அரசியலாக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட சாரார்களின் வாழ்வை மேம்படுத்தவும் , ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு உதவியிருக்கிறதேயன்றி வேறொன்றும் புதுமையாக நிகழ்ந்துவிடவில்லை. பனை தென்னைக்கு இப்படி ஒரு அரச செயற்பாடுகள் வந்திருக்காவிட்டாலும் அதன் தொழில் ஏதோ ஒருவகையில் இதைவிடதச் சிறப்பாக நடைபெற்றுத்தானிருக்கும். இதற்குப் பல துறைகளில் தற்போது நடைபெற்றுவரும் தனி நபர் செயற்பாடுகள் சான்றாகின்றன. அபிவிருத்தியில் மக்கள் பங்களிக்க வேண்டும். அரசு அது தொடர்பான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி அவர்களை வழி நடத்தலாம். அவற்றின் உயிர்ப்பை அழித்தொழித்திருக்கத் தேவை இல்லை என்று தான் சொல்ல வருகிறேன். அவைகளை மக்களுடனேயே இருக்கவிட்டு அபிவிருத்திகளை மேற்கொண்டிருக்கலாம். தற்போது அவற்றின் வேர் மூலம் அழிக்கப்பட்டு மக்களிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, பிடுங்கியெறியப்பட்ட நிலையே காணப்படுகிறது. இப்போது நடைபெறுகின்ற செயற்பாடுகள் எல்லாம் பொறுப்பென்ற அடிப்படையிலிருந்து நகர்ந்து, ஒரு கடமை என்ற சட்ட வரையறைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பனை தொடர்பில்,- “இதைக் கொண்டுதான் எமது வாழ்வாதாரம் நகரவேண்டும்” – என்ற நிலை இன்று இருந்திருந்தால் மக்கள் மரங்களைத் தறிக்க மாட்டார்கள். அவற்றைப் பேணிப்பாதுகாத்திருப்பர். அவற்றை பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அரச அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாகவே அவ்வகையான விழிப்புணர்வு மக்களிடம் இருந்திருக்கும். முன்ளைய நாட்களில் அப்படி ஒரு நிலைமை இருந்ததை நாம் கண்ணாராக் கட்டிருக்கிறோம். “நீங்கள் விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் ,” என்று எப்போது அரசு புறப்பட்டதோ,“ உங்களுடைய வீட்டு முற்றத்திலுள்ள மரங்கள் உங்களுடையதல்ல அது எமது என்று” – எப்போது அரசு சொல்லப் புறப்பட்டதோ அன்றே தமது பொறுப்பையும் கை நழுவவிட்டுவிட்டனர் மக்கள். இது 1970 களில் ஸ்ரீ மாவோ அரசு பதவிக்கு வந்தபோது ஆரம்பித்த விடயம். பின்பு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் பல குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன – என்று தனது மன வேதனையை வெளியிட்ட அவரது கருத்துக்கள் நியாயமானதாகத் தென்பட்டது. அதுவே எமது கருத்தாகவும் இருந்ததனால் அதை அப்படியே தந்திருக்கிறோம்.

இந்தக் கட்டுரையிலே ஒட்டு மொத்தமாக அரச நடவடிக்கைளையும், பல நோக்குக் கூட்டுறவுச் சிந்தைனைகளையும் குறை கூறுவதாகக் கொள்ள வேண்டாம். பல நோக்குக் கூட்டுறவுச் சிந்தனைகள் வெற்றியளித்திருக்கின்ற இடங்கள் பல உண்டு. அங்கே காணப்பட்ட இயல்பை மாற்றாது அந்தத் திட்டங்கள் அங்குள்ள மக்களுக்கேற்றவாறு நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதே அதன் வெற்றி எனலாம். பங்களாதேஷிலே வெற்றியளித்த நுண் கடன் திட்டம் இலங்கையில் அதுவும் வடக்குக் கிழக்கில் பல தற்கொலைகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது.பல குடும்பச் சிதைவுகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. பல சமூகப் பிளவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் அத்திட்டங்களை அமுல்படுத்திய நிறுவனங்கள் எந்தவித பொறுப்பற்ற தன்மையோடு மக்கள் நலனை முன்நிறுத்தி செயற்படாததே முக்கிய காரணம் எனலாம்.ஒரு லட்ச ரூபாவுக்கு ஒரு வருடத்தில் அறுபதினாயிரம் ரூபாவை வட்டியாகப் பெறும் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளில் மக்களை மேம்படுத்த வேண்டும் என்ற பொறுப்பு இருக்கும் என்றதை எப்படி எதிர்பார்க்கலாம்? நன்மையளிக்க வேண்டிய திட்டங்கள் கூட மக்கள் மயப்படுத்தவதில் கொள்ளும் சமூகப் பொறுப்பற்ற தன்மையினால் அவை மக்களுக்கு உதவாத திட்டங்களாக மாறிவிடும். நடைபெற்ற பனை எழுச்சி வார நிகழ்வும் இதற்கு விதிவிலக்கல்ல.அது மக்களைச் சென்றடைந்தாதா என்றதும் சந்தேகமே!

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.