உலகம் பிரதான செய்திகள்

சீனாவில் தன்னாட்சி உரிமை பெற்ற நிங்சியாவில், மசூதி இடிப்பிற்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டம்..


சீனாவில் தன்னாட்சி உரிமை பெற்ற நிங்சியா பகுதியில் கட்டப்பட்டுள்ள மசூதியை இடிப்பதில் இருந்து காப்பாற்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண், பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 கோடி பேரும், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் உய்குர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் 1 கோடி பேரும் அடங்குவர்.

இவர்கள் வழிபாட்டுக்காக நாடு முழுவதும் பிரம்மாண்டமான பல மசூதிகள் உள்ளன. அவற்றில் தன்னாட்சி உரிமை பெற்ற நிங்சியா பகுதியில் உள்ள உசோங் நகரில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த வெய்சூங் பெரிய மசூதியும் ஒன்றாகும்.


இந்த மசூதியை புணரமைக்கும் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டுவாக்கில் தொடங்கின. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள இந்த மசூதியின் உச்சியில் உள்ள கோபுரங்கள் (மினராக்கள்) தொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் மசூதி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

இந்த மினராக்கள் சீன கட்டிட வடிவமைப்பின்படி இல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மசூதிகளின் கட்டிட வடிவமைப்பு போல் காணப்படுவதால் இவற்றை இடித்துவிட்டு, சீன பாரம்பரிய கட்டிடக்கலையின்படி மாற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு எதிராக நிங்சியா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கடந்த வியாழனன்று இந்த மசூதியை இடிப்பதற்கு அதிகாரிகள் தயாரான நிலையில், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண், பெண்கள் மசூதி வளாகத்தில் முகாமிட்டனர். அவர்களில் பலர் மசூதிக்குள் அமர்ந்தபடி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வரும் இந்த முற்றுகை போராட்டம் இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கலாம் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers