குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று புதன் கிழமை (15) காலை 6.30 மணியளவில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகையின் அழைப்பின் பேரில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திரு நாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, குருநாகல் மறைமாவட்ட ஆயர் கெரல்ட் அன்ரனி பெர்னாண்டோ , காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க , கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சல் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவணியும்,திருச் சொரூப ஆசியும் வழங்கப்பட்ட நிலையில் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவிற்காக கிறிஸ்தவ அமைச்சினால் வழங்கப்பட்ட நிதி உதவியினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னார் ஆயரிடம் கையளித்தார்.
இதே வேளை மடு திருத்தலத்தின் புதிய பரிபாலகராக அருட்தந்தை பொப்பி சோசை அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெனான்டோ ஆண்டகை மக்கள் மத்தியில் அறிவிப்பை வழங்கினார்.மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் இடம் பெற்று வந்தது.
இன்று புதன் கிழமை (15) காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add Comment