இலங்கை பிரதான செய்திகள்

முன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வடமாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் தற்போதைய அரசால் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மக்களின் முழு ஒத்துழைப்புடன்தான் நாம் ஆட்சியை அமைத்தோம். அந்த அடிப்படையில் வடபகுதி மக்களின் தேவைகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் கவனமாக செயற்பட்டுவருகின்றோம். கடந்த முப்பது ஆண்டுகளில் எப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் தற்போது வடக்கில் உள்ளது. கடந்த ஆட்சியில் காணப்பட்ட இறுக்கமான கண்காணிப்புக்கள் எதுவும் தற்போது இல்லை. அத்தோடு தாம் விரும்பியவாறு சகலவற்றையும் செய்துகொள்ளும்வகையில் முழு உரிமையையும் நாம் வடக்குக்கு வழங்கியுள்ளோம்.

தற்போது பல காரணங்களுக்காக வடக்கிலுள்ளவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள். முன்னைய ஆட்சி காலங்களில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் கண்காணிக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது வடக்கில் இடம்பெறும் போராட்டங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். உதாரணத்திற்கு வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தாம் விரும்பியவற்றையெல்லாம் செய்யுமளவிற்கு தற்போது நிலமை உள்ளது. அதிகாரப் பகிர்வொன்றின் மூலமே பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என நாம் நம்புகின்றோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகின்றோம்.

புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறைமை, அதிகாரப்பகிர்வு என்பன இவற்றிற்கு அவசியமானவை. ஆனால் அதை ஏற்பதுத்துவது இலகுவான காரியமாக இல்லை. அனைவரையும் இணைத்து செயற்படவே நாம் விரும்புகின்றோம். இங்குள்ளவர்களும் வந்து எம்முடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல உதவ வேண்டும் என நான் கேட்கின்றேன் என்றார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் புதிய விற்பனை கிளை இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் வருகை தந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் புதிய விற்பனை கிளையை திறந்து வைத்ததுடன் அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றினார்.

இதைத் தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டடத்துக்கான கட்டட வேலைகளை ஆரம்பித்து வைத்து, வைத்தியசாலையில் நோயாளர் விடுதி போன்றவற்றை பார்வையிட்டதுடன் தாதியர் விடுதியினையும் திறந்து வைத்து அங்கு இடம்பெற்ற நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதி சுகாதர அமைச்சர், வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, விஜயகலா மகேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் சயந்தன், சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.