இலங்கை பிரதான செய்திகள் முஸ்லீம்கள்

ஆயுதக் கொள்வனவு – முஸ்லிம் அமைச்சர்களுக்கு அவசியம் ஏற்பட்டதா?

விளக்கம் கேட்கின்றது அமைச்சர் ரிஷாட்டின் ஊடகப்பிரிவு!

புலிகளிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம்கள் வசமே இருப்பதாகவும், இதனை வைத்துக்கொண்டே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் அரசாங்கத்தை அச்சுறுத்தவும், அடிபணியவைக்கவும் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் கருத்துக்கள் தொடர்பில், அரசாங்கம் ஆழமான பார்வையுடன் அக்கறை செலுத்தி, உரிய விசாரணை நடாத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் ஊடகப் பிரிவு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

நல்லாட்சி அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள அதிக பட்ச கருத்துச் சுதந்திரம்,  ஊடகச்சுதந்திரங்களைப் பயன்படுத்தி எவரும் கருத்துக்களை வெளியிட முடியும். எனினும்,இவ்வாறான நாட்டின் ஆள்புல எல்லை,பாதுகாப்புகளுக்கு அச்சுறுத்தலாகவுள்ள கருத்துக்களின் பின்னணிகள் பற்றி அரசாங்கம் மட்டுமன்றி பொதுமக்களும் அறிவதற்கு உரித்துடையோராக உள்ளனர். அரச படைகள் அன்றி வேறு எவரும் ஆயுதங்கள் வைத்திருப்பது பயங்கரவாதச் செயற்பாடுகளாகவே ஜனநாயக நாடுகளில் நோக்கப்படுகின்றன.

இந்த வகையில், புலிகளின் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான நோக்கம், குறித்த அமைச்சர்கள் அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்கான அவசியம் பற்றியும் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் குறிப்பிட்ட முக்கியஸ்தரிடமிருந்து அறிந்துகொள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி, நாட்டின் பாதுகாப்பில் அக்கறையுள்ள அனைவரும் எதிர்பார்ப்பதாகவும் ஊடகப்பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரலாற்றுக் காலந்தொட்டு நாட்டின் அமைதி, பாதுகாப்புக்கு ஒத்துழைத்து வரும் முஸ்லிம்கள் மீது ஆங்காங்கே கட்டவிழ்த்து விடப்பட்ட இவ்வாறான கற்பனைக் கதைகள், புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் பொய்ப்பித்துப் போனதே வரலாறு.  அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம்களைப்பிரித்து பயங்கரவாதமாகக் காட்டமுனையும் இவ்வாறான சில தீய சக்திகளை வெளிநாடுகள் இயக்குகின்றதா? அல்லது உள்ளூர் கடும்போக்காளர்களின் பிரித்தாளும் தந்திரங்களுக்கு சிலர் பலிக்கடாக்களாகியுள்ளனரா? என்று சந்தேகிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட்டின் ஊடகப்பிரிவு ஐயம் வெளியிட்டுள்ளது.

வடக்கில் முஸ்லிம்களின் ஆதரவை மட்டுமல்ல, தமிழர்களின் கணிசமான ஆதரவையும் பெற்றுவரும் அமைச்சர் ரிஷாட்டின் அரசியல் எழுச்சிப் பயணத்தில் தடைகள் போட முனையும் சில சமூக சீர்கேடர்களின் முயற்சிகளுக்கு, இவ்வாறானவர்கள் இரையாவது மீண்டும் இனவாத சிந்தனைகளையே மக்கள் மத்தியில் வளர்க்கும் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்வதே, நல்லாட்சி அரசில் சிறுபான்மைச்சமூகங்கள் வைத்துள்ள நம்பிக்கையை தொடர்ந்து பாதுகாக்க உதவும்.

எனவே, குறித்த நபரின் குற்றச்சாட்டுகள் பற்றி ஆராய்ந்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.

இறுதி யுத்தத்தில்கடுமையாகப் பலமிழந்த புலிகள், கனரக ஆயுதங்களை கைவிட்டுத் தப்பிப்பிழைத்து ஓடுகையில் ஆயுதவியாபாரத்தில் ஈடுபட நேரம் கிடைத்திருக்குமா? என்பதை யோசித்தால் குறித்த நபர் அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்லது இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இயைந்து செயற்பட்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுவதாகவும் அமைச்சரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers