இலங்கை பிரதான செய்திகள்

ஒலுமடு வெடுக்குநாரி மலையில் வழிபாட்டு உரிமைகோரி நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்


வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாரி மலை பகுதியில் பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம் மலையினை தொல்பொருள் திணைக்களத்திலிருந்து மீட்டுத்தருமாறு கோரியும் இன்று  வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது.வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்ககுநாரி மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய இலிங்கம் காணப்படுவதுடன் தமிழ் மக்களுடைய நாகர்களின் புராதான பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றமை இதன் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் கடந்தவாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இத்தடையினை தற்காலிகமாக தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேனி பொலிஸார் நீக்கி வழிபாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன் ஆலயத்தினை புனரமைப்பு செய்வதற்கும் புதிய கட்டிட நிர்மாணப்பணிகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இந்நிலையில் ஆலயத்தினை முழுமையாக மீ்ட்டுத்தருமாறு கோரி வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினருடன் கிராமமக்கள் , பொது அமைப்புக்கள்,  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் , சாந்தி சிறிஸ்கந்தராஜா ,  வடமாகான சபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராஜா , ஐீ.ரீ.லிங்கநாதன் , பத்மநாதன் சத்தியலிங்கம் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் , வினோதரலிங்கம் , முன்னாள் வடமாகான சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் , பிரதேச சபை உறுப்பினர்கள் , பல கட்சிகளின் பிரதிநிதிகள் , அகில இலங்கை சைவ மகா சபையினர் என பலரும் கலந்து கொண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது நிலம் எமது மலை, இந்துக்களை அவமதிக்காதே , வழிபாட்டுச் சுதந்திரத்தில் வாலாட்டாதே , இந்துக்கள் வழிபாட்டில் இடையூறு செய்யாதே , ஆதி லிங்கேஸ்வரர் ஆக்கிரமிப்பு இந்துக்கள் அவமதிப்பு , தொல்பொருள் திணைக்களமே மலையை தோண்டி எடுக்கவா? , தெற்கின் சுதந்திரம் வடக்கில் இல்லை , வடக்கு என்றைக்குமே மாற்றான் வீட்டுப்பிள்ளை , மன்டியிடாது வடக்கின் மானம் , சைவநீதிக்கு சாவுமணி , இலங்கை அரசே எங்கே நீதி போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐனாதிபதிக்கு அனுப்புவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மகஐரை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களிடம் ஒப்படைத்தனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து பேரூந்து மூலம் வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.