இலங்கை பிரதான செய்திகள்

ஆவாவுக்கு சவால் விடும் புதிய குழு ஒன்றும் “ஆவா”(வந்தது)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்ப்பாணம் கொக்குவில், இணுவில், தாவடி ஆகிய இடங்களில் 3 வீடுகள், தேனீர் கடை, கராஜ் ஆகிய இடங்களில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆவா குழுவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் துண்டுப்பரசுரம் வழங்கியுள்ள இந்தக் குழு தமது அடாவடித்தனங்களை வீடியோ அழைப்பில் நேரலையாக ஒருவருக்கு காண்பித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் நேற்று புதன்கிழமை மாலை 3.45 மணி தொடக்கம் 4.30 மணிக்குள் 45 நிமிடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன என காவற்துறையினர் தெரிவித்தனர்.

இலக்கத்தகடுகள் அற்ற 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட குழுவே இந்த அடாவடித்தனங்களில் ஈடுபட்டதாகவும் அவர்களிடம் மிகப் பெரியளவில் வாள்கள் இருந்தமை தெரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வந்தவர்களில் ஒருவர் தனது அலைபேசியின் ஊடாக வீடியோ அழைப்பை ஒருவருக்கு எடுத்து தமது அடாவடிகளை நேரலையாகக் காண்பித்தார் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி லேன் மற்றும் புகையிர நிலையத்தடியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதுடன்  உடமைகளைச் சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது.  அந்த இரண்டு வீடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இணுவில் சந்திக்கு அண்மையாகவுள்ள தேனீ்ர் கடை மற்றும் கராஜ் என்பன தாக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து தாவடி பாடசாலை லேனில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் கும்பல் செயற்பட்டது. இணுவில் மற்றும் தாவடிப் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுடைய வீடுகள் உடமைகளே சேதமாக்கப்பட்டன என காவற்துறையினர் தெரிவித்தனர். சம்பவங்கள் இடங்கள் சுன்னாகம், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று காவற்துறை நிலையங்களும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.