இலங்கை பிரதான செய்திகள்

“என் அன்புள்ள சாம்” “அரசியல் தீர்வு முதலில் பொருளாதார முன்னேற்றம் அதன் பின்னர்’ எனக் கூறுவதே உசிதம்”

கௌரவ இரா.சம்பந்தன்
எதிர்கட்சித் தலைவர்
தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
கொழும்பு
22.08.2018

என் அன்புள்ள சாம் அவர்களுக்கு!
ஜனாதிபதி செயலணி

வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றம் பற்றிய ஜனாதிபதி செயலணியில் பங்குபற்ற வடமாகாணத்தில் இருந்து கௌரவ ஆளுநரைத் தவிர நானும் எமது பிரதம செயலாளருமே அழைக்கப்பட்டமை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

கூட்டத்திற்கு நான் செல்லவில்லை. இது சம்பந்தமாக நான் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் அனுப்பி வைக்கின்றேன். குறித்த கூட்டத்தில் நான் பங்குபற்றியிருந்தால் நான் அரசியல் ரீதியாக பல நன்மைகளைப் பெற்றிருப்பேன். ஆனால் தமிழர்கள் தங்கள் பிரச்சினைக்கான தக்க தீர்வொன்றை பெறமுடியாதே இருக்கும். தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற அங்கத்தவர்கள் 16 பேருக்கும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் குறித்த செயலணிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.  பொருளாதார ஊக்கிகளே அரசியல் தீர்விலும் பார்க்க தமிழர்களுக்கு இத்தருணத்தில் முக்கியத்துவம் அளிக்கக் கூடியவை என்று நீங்கள் நினைத்தால் குறித்த கூட்டத்தில் பங்கு பற்ற நீங்கள் முடிவெடுக்கலாம்.

ஆனால் அரசாங்கமானது பொருளாதார ரீதியாக எங்களுக்கு பல நன்மைகளைக் கொடுக்க எப்பொழுதும் ஆயத்தமாகவே உள்ளதென்றாலும் அரசியல் ரீதியாக ஒரு தீர்வைக் கொடுக்க மறுக்கின்றது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆகவே எமது 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த செயலணி கூட்டங்களில் பங்குபற்றாது ‘அரசியல் தீர்வு முதலில் பொருளாதார முன்னேற்றம் அதன் பின்னர்’ எனக் கூறுவதே உசிதம் என நான் கருதுகின்றேன். மத்திய அமைச்சர்கள் சுமார் 12 பேரும் அவர்களுடைய செயலாளர்களும் இன்னும் சிலரும் படையினரில் உயரதிகாரிகளுந் தான் குறித்த செயலணியில் அங்கம் வகிக்கின்றார்கள். இவ்வாறான கூட்டங்களில் படையினருக்கு என்ன பங்கு என நான் கேட்டிருக்கின்றேன்.
உங்களுடைய கருத்தை எனக்குத் அறியத்தரவும். நன்றி
இங்ஙனம்
அன்புடன்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

2 Comments

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.