Home இலங்கை ஒரு விசியத்தைப் பற்றிக் கதைக்கேக்கை நல்லது கெட்டது எண்டு எல்லாத்தையும் கதைக்க வேணும்…

ஒரு விசியத்தைப் பற்றிக் கதைக்கேக்கை நல்லது கெட்டது எண்டு எல்லாத்தையும் கதைக்க வேணும்…

by admin

சனி முழுக்கு 5 – “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

படம் – சிரித்திரன் சுந்தர்…

ஒரு விசியத்தைப் பற்றிக் கதைக்கேக்கை நல்லது கெட்டது எண்டு எல்லாத்தையும் கதைக்க வேணும். அது தான் ஒரு ஜென்ரில்மேனுக்கு அழகு. அதைவிட்டிட்டு கெட்டதை மட்டும் கதைச்சிட்டு விடப்பிடாது. அதிலை  நல்லதைக் கதைச்சு அவையளைப்பற்றிப்  புழுகிப்போட்டு விடவும் பிடாது. இரண்டும் வில்லங்கமான விசியம்.கெட்டதை மட்டும் கதைச்சிட்டு விட்டால் அவையின்ரை மனம் நொந்து போம். செய்யிறதையும் செய்யாமல் விடடிடுவினம்.  நல்லதைமட்டும் சொல்லிப் போட்டு விட்டால் அவை கண்விண் தெரியாமல் போய் எங்கையாச்சும் மோதிக் கீதி இருக்கிறதையும் துலைச்சுப்போட்டு நடுச்சந்தியிலை நிப்பினம். உதிலை எனக்கு நல்ல அனுபவம் இருக்கு.

வெளிநாட்டிலை இருக்கிற தமிழ் ஆக்களுக்கை நல்லவையும் வருகினம். அவை நல்லதைச் செய்திட்டுப் போகினம்.  சிலர் வந்து இஞ்சை உள்ளவையளைக் குட்டிச் சுவராக்கிப்போட்டுப் போறவையும்  இருக்கினம். இப்ப கிட்டடியிலை அம்பலவாணி வாத்தியாற்றை மேன் கனடாவிலை இருந்து வந்தவன். வாத்தியாற்றை மேனெண்டால் சின்ன வயசெண்டு நினைக்காதையுங்கோ. அவனுக்கும் இப்ப ஐம்பத்தெட்டைத் தாண்டீட்டுது. கட்டினது வெள்ளைக்காரியை. வாத்தியார் இருக்கும்வரைக்கும் இந்தப் பக்கம் எட்டிப் பாக்காதவன் வாத்தியார் செத்தாப் பிறகு தாயைப் பாக்க எண்டு இரண்டொருதடவை வந்து போய்  இப்ப மூண்டாம் முறையா வாத்தியாற்றை துவசத்திக்கு வந்திருக்கிறான்.  வந்தவன் வெள்ளையையும் கூட்டிக் கொண்டுதான் வந்திருக்கிறான். அவளும் தெற்றித் தெற்றிக் கொஞ்சம் தமிழ் கதைக்கிறாள். சீலை உடுத்துக் கும்குமப்பொட்டும் வைச்சு அவள் நல்லாத் தமிழ் பண்பாட்டோடை சேந்திட்டாள். இரண்டு பேருமாச் சேந்து தங்கடை தங்கடை உழைப்பிலை கொஞ்சம் கொண்டு வந்தவை. துவசத்துக்கு எல்லாரையும் வரச்சொல்லி நல்ல சாப்பாடு போட்டிட்டு தன்ரை தாயின்ரை ஆக்களையும் தேப்பன்ரை ஆக்களையும் நிக்கச் சொன்னவன். வந்த மற்றெல்லாரும் போனாப் பிறகு, எல்லாரையும் கூப்பிட்டு வட்டமாக் கதிரையைப் போடச் சொல்லி முத்தத்திலை இருத்தினான். பொக்கற்றுக்காலை ஒரு துண்டை எடுத்துப் படிக்கத்துவங்க எல்லாருக்கும் முகம் கறுத்துப் போச்சுது. அவன்  அங்கை நிண்ட தன்ரை சொந்தக்காரற்றை போக்கு வரவு எல்லாத்தையும் சொல்லி அவையின்ரை  செலவு சித்தாயத்தை எல்லாம் துல்லியமா வாசிச்சவன். ஆர்  வீட்டை மோட்டச் சைக்கிள் இருக்கு.ஆர் வீட்டை இரண்டு சில்லுச் சைக்கிள் இருக்கு. ஆற்றை பிள்ளையள் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போறவை. ஆற்றை பிள்ளை படிக்கிது. ஆற்றை றோட்டிலை அலையிது  எண்டு அவை சம்பந்தப்பட்ட எல்லாக் காரியத்தையும் அக்கு வேறா ஆணி வேறா ச் சொல்லிப்போட்டு உங்களுக்கு என்ன உதவி செய்தால் கொஞ்சம் சந்தோஷமா ச் சீவியத்தைக் கொண்டு போவியள்? எண்டு கேக்க ஒருத்தரும் வாய் திறக்கேல்லை. என்னெண்டு திறக்கிறது. பிறகு அவன் அதிலை உண்மையாக் கஸ்டப்பட்டவை கொஞ்சப்பேருக்கு உதவி செய்தவன். காசாக் குடுக்கேல்லை. படிக்கக் கூடிய பிள்ளையளுக்கு மாதா மாதம் வரக் கூடியமாதிரி ஒரு உதவி. பெரியவைக்குத் தொழில் செய்யக்கூடிய முறையிலை அதுக்குரிய சாமான்களை வாங்கிக் குடுத்தவன்.

அவன் ஒரு பகுதிக்குத் தையல் மெஷினை வேண்டிக் குடுத்துத் துவக்கிவிட்டதாலை அந்தப் பெடிச்சி இன்னும் இரண்டு மூண்டு பெடிச்சியளோடை சேந்து சங்கக்கடைக்குப் பக்கத்திலை கிடந்த கடையை மாதம் ஆயிரம் ரூபாவுக்கு வாடகைக்கு எடுத்துத் தையல் கடை போட்டிருக்கிறாள். மற்றொரு பெடிச்சி இரண்டு ஆடு வாங்கியிருக்கிறாள். இன்னுமொருத்தனுக்கு வாட்டர் பம்ப் , வயர் எண்டு வேண்டிக்குடுத்து ஊரிலை இருக்கி கிணறுகளை இறைக்கிற தொழில். இப்பிடிப் பல விசியத்திலை அம்பலவாணியின்ரை பெடி சொந்தக்காருக்கு உதவி செய்திருக்கு. அவன் மனுசன்.

இப்ப பொன்னம்பல அண்ணை என்ன சொல்லவாறன் எண்டால் ஒரு தனி  மனுசனாலை இவ்வளவையும் செய்யேலுமெண்டால் உலகம் முழுக்க இருக்கிற கிட்டத்தட்ட வசதியான யாழ்ப்பாணத்துத் தமிழ் ஆக்கள் எவ்வளவத்தைச் செய்யலாம்?கொஞ்சம் யோசியுங்கோ.  தயவு செய்து வந்து எங்கடை மண்ணுக்கு ஏதேனும் செய்யுங்கோ. அம்பலவாணி வாத்தியாற்றை மேன் செய்தமாதிரித்தான் செய்யுங்கோ. மறந்துபோயும் காசாக் குடுத்திடாதையுங்கோ. அதாலை  சிலதுகள் செடில்குத்திக் காவடி எடுக்கத் துவங்கிவிடுவினம். ஆனால் உங்கடை காலிலை விழுந்து மன்றாடிச் சொல்லுறன்  கோடி கோடியாக் கொட்டி கோயிலுக்கு எடுப்பெடாதையுங்கோ. நீங்கள் கோயிலுக்குச் செய்தது காணும். அப்பிடிக் கோயிலுக்குத்தான் செய்ய வேணும் எண்டால் எங்கையேன் தூந்து போயிருக்கிற கோயிலாப் பாத்துப் போய் அதுக்குச் செய்யுங்கோ. ஒண்டையே திருப்பித் திருப்பி இடிச்சுக் கட்டாதையுங்கோ. இப்ப கிட்டடியிலை ஒரு பேப்பரிலை பாத்தனான். வெளி நாட்டிலை இருந்து வந்தவை கோயிலுக்குப் போய் அரிச்சனை செய்தாப் பிறகு  அந்தக் கோயிலுக்குப் பொறுப்பான ஐயரிட்டை “நாங்கள் கன நாளைக்குப் பிறகு ஊருக்கு வந்திருக்கிறம். இந்தக் கோயிலிலை என்ன குறை இருக்குச் செய்ய?” எண்டு கேட்டினமாம். அதுக்கு ஐயர் சொன்னாராம்  செய்ய வேண்டிய எல்லாம் திருப்தியாச்  செய்திட்டம். உந்தக் கொடித் தம்பத்துக்குப் பவுண் முலாம் பூசினால் நல்லது எண்டு பாக்கிறம் எண்டு. அப்ப பாருங்கோ அவனாரோ சென்ன மாதிரி “ சந்தனம் கூடினால்……… அங்கை தடவச் சொல்லி” எண்ட மாதிரிக் கதை கிடக்கு. முந்தின மாதிரிக் கோயிலாலை இப்ப சனத்துக்கு ஒரு சுகமும் இல்லை. கடைசி ஒரு பிரசங்கம், வில்லுப்பாட்டுக் கச்சேரி. தமிழ் கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்திற நாட்டியம், நாடகம் எண்டு ஒண்டும் நடக்கேல்லை. கோயிலைச் சேந்திருக்கிற ஆக்கள்தான் கோயிலை வைச்சு உழைச்சுச் சொத்துச் சுகத்தோடை இருக்கினம். அப்பிடிச்  சனத்தை வருத்திக் கொஞ்சச் சோம்பேறியளை வளக்கிறதுக்கு விருப்பம் எண்டால் கோயிலை மாடி மாடியாக் கட்டுங்கோ. அதுக்கு லிப்ட் வசதியும் போட்டு விட்டால் சனம் நோகாமல் ஏறிக் கும்பிட்டிட்டுப் போகும். கோயிலடியிலைதான் செய்ய வேணும் எண்டால் ,சனம் நல்லா இருக்க வேணும் எண்டு நீங்கள் நினைச்சா  அந்தக் கோயில்களுக்குக் கிட்டவா கடைசி தண்ணி தேங்கக் கூடிய மாதிரி ஒரு குளத்தை வெட்டுங்கோ. அப்ப அயலிலை இருக்கிற கிணறுகளிலை தண்ணி நிக்கும். சனம் கன காலத்துக்கு நின்மதியா  நல்ல தண்ணியாவது குடிக்கும். ஒரு மனுசனுக்கு என்னத்தைக் குடுக்கலாம். என்ன செய்தால் அவன் நல்லா வருவன் எண்டு கணிச்சுச் செய்ய வேணும். அப்பிடித்தான் ஊருக்கும் செய்ய வேணும். சனத்துக்கு நல்ல மனசு.  என்னத்தைக் குடுத்தாலும் வேண்டாம் எண்டு சொல்லாமல் வேண்டுவினம். “பாத்திரம் அறிஞ்சு பிச்சை போடு”எண்டு..! உதைத்தான் எங்கடை மூதாதையர் சொன்னவையள் எண்டு அப்பு அடிக்கடி சொல்லுறவர்.

  • “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More