Home இலங்கை பந்து இப்பொழுது சம்பந்தரின் பக்கத்திலா? நிலாந்தன்…

பந்து இப்பொழுது சம்பந்தரின் பக்கத்திலா? நிலாந்தன்…

by admin


யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின் மூலமாகவே விற்பனைப் பரப்பைக் கூட்டிக்கொள்ளும். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை இதுவரை பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதன் விற்பனை மட்டம் இன்று வரையிலும் லாப இலக்கை எட்டவில்லை. மிக விசித்திரமான ஓர் ஊடகவியல் யதார்த்தம் இது. அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் ‘மின்னல்’ என்ற பெயரில் எழுதும் பத்திகளை பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாலையிலேயே வாசித்து விடுகிறார்கள். இப்பத்தியில்தான் கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்ற செய்தி வெளிவந்தது. அதன் பின்னர்தான் முன்னணிச் சிங்கள ஊடகங்கள் அச்செய்தியைக் கையிலெடுத்தன. அது போலவே கூட்டமைப்பின் உள்விவகாரங்களை அப்பத்திதான் அதிகம் வெளியே கொண்டு வந்தது.

கடந்த 24ம் திகதி அப்பத்திரிகையில் வெளியான தலைப்புச்செய்தியில் சம்பந்தரும், விக்னேஸ்வரனும் சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதனை பின்னர் சம்பந்தரும் உறுதிப்படுத்தினார். அப்படியொரு சந்திப்பு இடம்பெறவிருந்த ஒரு பின்னணியில் விக்னேஸ்வரன் சில நாட்களுக்கு முன்பு சம்பந்தருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர் அரசுத் தலைவரின் அபிவிருத்திக்கான செயலணியில் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றக் கூடாது என்று கேட்டிருக்கிறார். இக்கடிதத்திற்கான கூட்டமைப்பின் எதிர்வினையானது முன்பு எதிர்பார்க்கப்பட்ட விக்கி – சம்பந்தர் சந்திப்பை கேள்விக்குள்ளாக்கி விட்டது. ஒரு புறம் சந்திப்புக்கு நாள் கேட்டுவிட்டு இன்னொருபுறம் சந்திப்பை சாத்தியமற்றதாக்கும் ஒரு கடிதத்தை ஏன் விக்னேஸ்வரன் எழுதினார்? சந்திப்புக்குத் தயார் என்று அறிவித்ததன் மூலம் அவர் தானாகக் கூட்டமைப்பை விட்டு வெளியில் வரமாட்டார் என்பதனைத் தெரியப்படுத்தியுள்ளார். அதே சமயம் சந்திப்புக்கு நிபந்தனை விதிப்பதைப் போல சந்திப்புக்கிடையில் ஒரு கடிதத்தை எழுதியதன் மூலம் வீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியலுக்கு தான் தயாரில்லை என்பதனையும் தெரியப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இணக்க அரசியல் என்ற அடிப்படையில் கூட்டமைப்பின் தலைமை முடிவெடுத்தால் விக்னேஸ்வரன் அதற்குள் நிற்கமாட்டார் என்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. இப்பொழுது பந்து கூட்டமைப்பின் பக்கம் வீசப்பட்டிருக்கிறது.

காலைக்கதிரில் வந்த செய்தி மற்றும் தினக்குரலில் வந்த செய்தி போன்றவற்றின் அடிப்படையில் விக்கிக்கும் சம்பந்தருக்குமிடையில் ஏதோ ஒரு நெருக்கம் நிலவுவதாகவே ஊகிக்கப்பட்டது. இந்த ஊகத்தின் அடிப்படையில் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் விக்கி எந்த முடிவை எடுக்கக்கூடும் என்பது பலருக்கும் குழப்பமாக இருந்தது. சில சமயம் சம்பந்தர் அவரை மறுபடியும் முதல்வருக்கான வேட்பாளராக நியமித்தால் அவர் என்ன முடிவை எடுப்பார் என்பது தொடர்பாகவும் ஒருவித குழப்பமான நிலமை காணப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மக்கள் பேரவையைக் கட்டியெழுப்பி அதன் மூலம் அவர் சேகரித்து வைத்திருக்கும் உறவுகள் பெயர் பிம்பம் எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு அவர் தனியனாகவே சம்பந்தரோடு போய் ஒட்ட வேண்டியிருக்குமென்று ஒரு மூத்த அரசியல் விமர்சகர் தெரிவித்தார். அப்படிப்போய் ஒட்டினாலும் தமிழரசுக்கட்சிக்குள் அவரை இணக்கமாகப் பார்க்கும் ஆட்கள் பெருமளவிற்கு இல்லையென்பதும் ஒரு பொதுவான அபிப்பிராயமாகும்.

கடந்த வாரம் அமைச்சர் ராஜித யாழ்ப்பாணத்தில் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் விக்கி உரையாற்றினார். அப்பொழுது அவருக்கு எதிரான ஒரு கூட்டமைப்புப் பிரமுகர் ‘இப்படியெல்லாம் பேசிவிட்டு இவர் இன்னுமொரு மாதத்தில் வீட்டை போகப் போறவர்தானே’ என்ற தொனிப்பட அருகிலிருந்த மற்றொரு கூட்டமைப்புப் பிரமுகரிடம் கூறியிருக்கிறார். அதாவது கூட்டமைப்பால் வெளித்தள்ளப்படுமிடத்து ஒன்றில் அவர் மாற்று அணியைக் கட்டியெழுப்ப வேண்டும். அல்லது அரசியலை விட்டு ஒதுங்கி வீட்டிற்குப் போக வேண்டும் என்று பொருள்.

ஆனால் ஜனாதிபதியின் செயலணி குறித்து அவர் எடுத்த முடிவு அவர் அப்படியெல்லாம் அரசியலை விட்டு ஒதுங்கி வீட்டிற்குப் போய்விடுவார் என்று நம்பத்தக்கதாக இல்லை. சம்பந்தருக்கு அவர் முதலில் எழுதிய கடிதமும் அதற்கு கூட்டமைப்பினர் எதிர்வினையாற்றியபின் அவர் வெளியிட்ட கேள்வி பதிற் குறிப்பும் அதைத்தான் காட்டுகின்றன. அதாவது விக்னேஸ்வரன் ஒரு தெளிவான பிரிகோட்டை வரைந்திருக்கிறார். அபிவிருத்தி மைய அரசியல் அல்லது தீர்வுமைய அரசியல் என்ற இரண்டு தெரிவுகளை அவர் கூட்டமைப்பின் முன் வைத்திருக்கிறார். இதன் மூலம் இணக்க அரசியலா இல்லையா என்று கூட்டமைப்பே முடிவெடுத்து விட்டு விக்னேஸ்வரனை வெளித்தள்ளலாம். அவ்வாறு வெளித்தள்ளப்படுமிடத்து அவர் தன்னுடைய அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும். மாகாண சபையின் காலம் முடிவதற்கு மிகக்குறுகிய காலமே இருக்கும் ஒரு பின்னணியில் கூட்டமைப்பின் முன்பு ஒரு முக்கியமான கேள்வி வீசப்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்காக கடந்த சில ஆண்டுகளாக சம்பந்தர் வழங்கி வந்த வாக்குறுதிகள் காலக்கெடுக்கள் போன்றவற்றின் பின்னணியில் ஓர் அரசியல் தீர்வைப் புறந்தள்ளிவிட்டு அபிவிருத்தி அரசியலுக்குள் மூழ்கிவிட முடியாது என்று விக்னேஸ்வரன் கருதுகிறார். தீர்வற்ற வெற்றிடத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியானது ஒரு மாயைதான். இதை அதன் பிரயோக வடிவத்தில் சொன்னால் வலி நிவாரணியே நோய் நிவாரணி ஆகிவிடாது.

கடந்த சில மாதங்களாக வடக்கு – கிழக்கிற்கு அரசுத்தலைவரும் பிரதமரும், அமைச்சர்களும் வரிசைகட்டி வருகிறார்கள். புதிது புதிதாக கட்டடங்கள் திறக்கப்படுகின்றன. அல்லது புதிய கட்டடங்களுக்குரிய அடிக்கற்கள் நாட்டப்படுகின்றன. இவை தவிர மேலும் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடக்கி வைக்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இருக்கும் ஒரு பின்னணியில் அபிவிருத்தியை முடுக்கிவிடுவது என்பது வடக்கு கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் அரசாங்கத்தின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும்.

தெற்கில் ஒரு தேர்தலை வைத்தால் பெரும்பாலும் அது மகிந்தவோடான பலப்பரீட்சைக்களமாகவே அமையும். உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் நடந்தது போல மகிந்தவின் பலத்தை நிரூபிக்கத்தக்க தேர்தல்களை தெற்கில் நடாத்துவதற்கு அரசாங்கம் தயங்கும். ஆனால் மகிந்தவின் செல்வாக்கு வலயத்திற்கு வெளியே வரும் வடக்கு கிழக்கில் அப்படிப் பயப்படத் தேவையில்லை. கிழக்கில் மகிந்த சிறிதளவிற்குத் தலையைக் காட்டலாம். ஆனால் வடக்கில் அதுவும் கடினம். எனவே மகிந்தவின் செல்வாக்கு வலயத்திற்கு வெளியே தேர்தல்களை நடத்திப் பார்க்கலாம் என்று அரசாங்கம் சிந்தி;த்தால் வட – கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கான வாய்ப்புக்கள் உண்டு. அத் தேர்தல் களத்தைக் குறிவைத்தே அரசாங்கம் அபிவிருத்தி அரசியலை முடுக்கிவிட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தென்னிலங்கைமையக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் அரசாங்கத்திற்கு உற்சாகமூட்டக்கூடியவை. இவ்வாறாகக் தீர்வைக் கொண்டு வராமல் அபிவிருத்தியைக் கொண்டு வரும் ஒரு நிகழ்;ச்சி நிரலுக்கு கூட்டமைப்பு பங்காளியாகக் கூடாது என்று விக்னேஸ்வரன் கேட்கிறார். ஆயின்,அதை எதிர்த்து கூட்டமைப்பு அபிவிருத்தி அரசியலின் பங்காளிகளாக மாறினால் அதற்கு எதிராண அணி ஒரு புதிய கூட்டை உருவாக்க வேண்டியிருக்குமா?

கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்பு அப்படியொரு கூட்டுக்கான ஏதுநிலைகள் காணப்பட்டன. ஆனால் விக்னேஸ்வரன் அப்பொழுது தயாராக இருக்கவில்லை. அதனால் அக்கூட்டு சிதறிப்போயிற்று. இப்பொழுது மறுபடியும் அப்படியொரு கூட்டை உருவாக்க முடியுமா என்பது கேள்வியாக உள்ளது. கஜேந்திரகுமார் அணியானது விக்னேஸ்வரனோடு இணையத் தயாராகக் காணப்படுகிறது. ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியோடு இணைவதற்கு அவர்கள் தயாரில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளையும் ஒரே கூட்டுக்குள் வைத்திருப்பதற்கு விக்னேஸ்வரனால்தான் முடியும். அதற்கும் கூட கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இது தவிர விக்னேஸ்வரனுக்கென்று ஓர் அணியுண்டு. ஐங்கரநேசன், அனந்தி, அருந்தவபாலன் போன்றவர்கள் அந்த அணிக்குள் வருவர். இவர்கள் அனைவரையும் திரட்டி கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு புதிய அணியை உருவாக்க விக்னேஸ்வரன் தயாரா? வழமையாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் புதிய கூட்டுக்கள்; பற்றிய உரையாடல்கள் சூடு பிடிப்பதுண்டு. இப்பொழுது விக்னேஸ்வரன் தனது கடிதம் மூலம் தேர்தல் அறிவிக்கப் பட முன்னரே குறிப்பாக மாகாண சபையின் காலம் முடியவிருக்கும் ஒரு பின்னணியில் அதைத் தூண்டிவிட்டிருக்கிறாரா?

தமிழ்க்கட்சிகளில் பெரும்பாலானவை சிறுதிரள் எதிர்ப்பைக் காட்டும் கட்சிகள்தான். பெருந்திரள் மக்கள் மைய அரசியலை முன்னெடுக்க முடியாத கட்சிகள்தான். அது மட்டுமல்ல எல்லாக்கட்சிகளுமே தேர்தல் மையக்கட்சிகள் தான். எனவே கொள்கைப்பிடிப்புள்ள கட்சிகளும், இலட்சியப்பாங்கான கட்சிகளும் பெருந்திரள் மக்கள் மைய அரசியலை முன்னெடுக்கும் விதத்தில் பெரிய கூட்டுக்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ் வாக்குகள் சிதறிப்போய்விடும். தமிழ் வாக்குகள் சிதறுவது குடாநாட்டைவிட வவுனியாவின் எல்லைப்புறங்களிலும் கிழக்கிலும் பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

விக்னேஸ்வரன் தலைமையிலான ஒரு புதிய அணி பற்றிய எதிர்பார்ப்புக்கள் வடக்கு மையச் சிந்தனைகளாகச் சுருங்கக் கூடாது. தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியலைச் சிந்திக்கும் போது ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட முடியாத தாயகம் என்ற அடிப்படையில் சிந்திப்பது அவசியம். அதாவது கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு புதிய தலைமையை அல்லது ஒரு புதிய அணியைக் குறித்து சிந்திக்கும் எவரும் வடக்கையும், கிழக்கையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். வடமாகாண சபையின் காலம் முடியவிருக்கும் ஒரு பின்னணியில் அடுத்த கட்ட அரசியலைக் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆனால் கிழக்கு மாகாண சபையின் காலம் முடிந்த பின் அந்தளவிற்கு விவாதங்கள் நடக்கவில்லை. கிழக்கை தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து வென்றெடுப்பதற்கான தெளிவான ஒரு வழி வரைபடம் வேண்டும். முதலில் வடக்கைப் பார்க்கலாம். பிறகு கிழக்கைப் பற்றி யோசிக்கலாம் என்பது தாயக ஒருமைப்பாட்டிற்குப் பாதகமானது.
எனவே அபிவிருத்தி அரசியலுக்கு முன்பு தீர்வைக் கொண்டு வரவேண்டும். என்று கேட்கும் தரப்புக்கள் இரண்டு விடயங்களில் தெளிவாக இருக்க வேண்டும். முதலாவது பிரிக்கப்படவியலாத தாயகம். இரண்டாவது நோய் நிவாரணி கொடுக்கப்படும் வரையிலுமான வலி நிவாரணி அரசியலை எந்தளவிற்கு ஏற்றுக்கொள்வது என்பது.

தமிழ் அரசியல்வாதிகளும், கட்சித் தலைவர்களும், கருத்துருவாக்கிகளும், புத்திஜீவிகளும் ஊடக முதலாளிகளும் அநேகமாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மிக அருந்தலான புறநடைகள் தவிர இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்க வசதிகளோடு வாழ்க்கையில் ‘செற்றில்ட்’ ஆனவர்கள். ஆனால் இப்பொழுதும் உளவியல் ரீதியாக மீளக்குடியமராத ஒரு பெரிய தொகுதி மக்கள் உண்டு. நிரந்தரமற்ற வீடுகளில் வீட்டுத்திட்டங்களுக்காக காத்திருக்கும் மக்கள் உண்டு. கைவிடப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள் உண்டு. காணாமல் போனவர்களின் உறவினர்கள் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நிவாரணமின்றித் தத்தளிக்கிறார்கள். இவர்கள் எல்லாருக்கும் வலிநிவாரணி தேவைப்படுகிறது. எனவே அடுத்த கட்டத் தமிழ் அரசியலைப்பற்றிச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்களும் மேற்கண்ட இரண்டு விடயங்களிலும் தெளிவான வழி வரைபடங்களை வைத்திருத்தல் வேண்டும்.

விக்னேஸ்வரை மையப்படுத்திச் சிந்திப்பவர்கள் மேற்கண்ட இருவிடயங்கள் தொடர்பாகவும் தெளிவான வழிவரைபடங்களை முன்வைக்க வேண்டும். விக்னேஸ்வரனை மையப்படுத்திச் சிந்திப்பது என்பது ஒரு தனிமனிதனை மையப்படுத்தும் சிந்தனையல்ல. அது மிகத் தெளிவான ஓர் அரசியற் செயல்வழியை மையப்படுத்திய சிந்தனைதான். விக்னேஸ்வரனைக் குறித்து முடிவெடுப்பதை சம்பந்தர் நரசிம்மராவ் பாணியில் ஒத்திவைத்து வந்தார் ஆனால் இப்பொழுது விக்னேஸ்வரன் தன்னைப் பற்றி முடிவெடுப்பது என்பது ஓர் அரசியற் செயல் வழியைக் குறித்தும் முடிவெடுப்பதுதான் எனற ஒரு பொறிக்குள் சம்பந்தரைச் சிக்க வைத்துவிட்டாரா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More