இலங்கை பிரதான செய்திகள்

தொழிலோடு தானம். சிறப்புமிக்க பணி – சிறந்த ஆசானுக்கு முன்னுதாரணமானவர் இரா.அருட்செல்வம்….

கணபதி சர்வானந்தா

“அருட் செல்வம் மாஸ்டரை நினைத்தால் அவரின் சிரித்த முகமும், சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை  அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும். கணித  பாடத்தையும், விஞ்ஞான பாடத்தையும் சொல்லிக் கொடுப்பார். சோக்கட்டியால் அவர் கீறி விளக்கும்  மனித உறுப்புக்களைக் கரும்பலகையில் பார்த்தால் ஏதோ ஒரு ஓவியக் கண்காட்சியிலுள்ள ஒவியத்தைப் போல இருக்கும். அவ்வளவு அழகு. எனக்கென்றொரு சுயசரிதம் எழுதப்படு மேயானால் அது அருட்செல்வம் மாஸ்டரை விலத்தி எழுதப்படாது.” என்று தனது இணையத்தில் பதிவொன்றைச் செய்தியிருக்கிறார், அவுஸ்திரேலியா  தமிழ் ஒலிபரப்புச் சேவைவையின் பகுதிநேர நிகழ்சித்தயாரிப்பாளரும்  ஒலிபரப்பாளருமாகிய  கானா பிரபா. அவர் ஆரம்பந்தொட்டு அருட்செல்வ மாஸ்டரிடத்தில்  கல்வி கற்றவர்.

அருட்செல்வம் மாஸ்டர் – அவர் தனது சேவையினால் இணுவிலின் அடையாளமானவர்.  இணுவிலில் யாரைக் கேட்டாலும் அவர் கல்வி நிலையத்தை இலகுவில் அடையாளம் காட்டுமளவுக்கு அவர் பிரபலமானவர். கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தக் கல்வி நிலையத்தை நடத்தி வருபவர். பணம் என்று யாரையும் வற்புறுத்திக் கேட்டது கிடையாது. பணம் இல்லையென்று யாரையும் படிப்பிக்காமல் விட்டதும் கிடையாது. அதுவே இவரது பெருமையுங் கூட. வித்தியா தானம் நடைபெறுகின்ற ஒரு அறச் சாலையாகவே இவரது கல்வி நிலையத்தைக் கருதலாம். பிற  கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர்களின் சொத்துச் சுகங்களோடு  இவரை ஒப்பிட்டுப் பார்த்தால் இவர் இன்னும் தொடக்க நிலையிலே நிற்பதைக் காணலாம்.

கடந்த 19.08.2018 ஞாயிற்றுக் கிழமை அவரது மணி விழாவும்  அவரது கல்வி நிறுவனத்தின் நாற்பதாவது ஆண்டு விழாவும் நடைபெற்றது. அவரிடம் கல்வி கற்று உள்ளூரிலும் சர்வதேசத்திலும் வாழுகின்றவர்கள் தாமாக ஒன்றிணைந்து அவருக்கு விழா எடுத்திருந்தனர். ஊர் கூடி விழா எடுத்த சிறப்பை நான் கண்டேன். படிக்கின்றபோது பணம் கொடுக்க வசதியற்றிருந்த பலர் இன்று உச்சத்தைத் தொட்டிருக்கின்றனர். அவரிடம் கற்றவர்கள் அனைவரும் ஒன்றுகூடி  அவருக்கு  விழா எடுக்குமளவுக்கு அவரது கல்விச் சேவை அமைந்திருக்கின்ற  மகத்துவத்தை நான் கண்டேன்.

கே. கே. எஸ் வீதிவழியாகக் கோண்டாவில் கிராமத்தைத் தாண்டி சுன்னாகம் நோக்கிச்  செல்வோர் எவரையாவது துரை வீதி எங்கே? என்று கேட்டால் இலகுவாக அடையாளங்காட்டி விடுவார்கள். அந்த வீதி அத்தனை பிரபலம். இணுவில் கிராமத்திற்குரிய முக்கியமான பஸ் தரிப்புக்களில் அதுவும் ஒன்று. துரை வீதி யினூடாகக் கிராமத்துக்குள் பயணிக்கும்போது, சற்றுத்தொலைவில், பிள்ளையார் கோயிலை நோக்கி, செல்லுகின்ற அந்த வளைவையொட்டி பல துவிச்சக்கர வண்டிகள் அடிக்கிவிடப்பட்டிருக்கும்.  அருட்செல்வம் மாஸ்டரின் ஏ.ரீ.சீ கல்வி நிறுவனம் அங்குதான் இருக்கிறது. மிகவும் எளிமையான சூழலில் கல்வி புகட்டப்படுகின்றது. இணுவில் கிராமவாசிகள் மட்டுமல்ல, அயற்கிராமங்களான உடுவில், தாவடி, மானிப்பாய், கோண்டாவில் பிரதேசவாசிகள் பலரின் பிள்ளைகள் அங்குதான் பயிற்றப்பட்டவர்கள். இன்றும் பயின்று கொண்டிருக்கிறார்கள். அந்த நிறுவனத்திற்கு  ஏ.ரீ.சீ அதாவது அருள் ரியூசன் சென்ரர் என்று பெயர் சூட்டியவர்கள்  அவரது மாணவர்களே.

“ க பொ த உயர்தரத்தின் பின்னர் அரச சேவையில் ஆசிரியராக இணைவதற்குரிய முயற்சியை மேற்கொண்டேன். அதற்கு விண்ணப்பித்தேன். எனது முயற்சிகள்  பலனளிக்காது போகவே, நம்பிக்கையோடு வீட்டிலேயே எனது முயற்சியை ஆரப்பித்தேன். 1977 ஆம் ஆண்டு மூன்று மாணவர்களோடு கற்பித்தலைத் தொடங்கினேன்.   அந்த மூன்று பிள்ளைகளும் விசேட சித்தியெய்தினர். அவர்களது சாதாரணதர பெறுபேறுகள் சமூகத்தில் ஒருவித  அதிர்வையும், நம்பிக்கையும் ஏற்ப்படுத்தியது.  1978 – 1979 ஆம் ஆண்டுகளில் க. பொ. தா சாதாரணத்தில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை முப்பதாக உயர்ந்தது.  நான் போதித்த கணிதம்  மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் அவர்கள் அதி விஷேட சித்தியைப் பெற்றனர். கற்பித்தலில் எனக்கு உறுதுணையாக எனது சக நண்பரொருவரும் இணைந்து கொண்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் றேடியோலஜித் துறையில் முன்னணி வகிக்கும் வைத்திய கலாநிதி கேதீஸ்வரி எமது நிறுவனத்தில் கற்றவர்.1982 இல் அவர்  எட்டுப் பாடங்களிலும் விசேட சித்தியைப் பெற்றார். அதற்கு பின்னர்  எமது நிறுவனம்  பிரபலமடைந்தது. மாணவர் தொகை அதிகரிப்பால்  தரம் 6 தொட்டு 11வரை  வகுப்புக்களை நடாத்த வேண்டியேற்பட்டது. இன்று எமது நிறுவனத்தில் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 11 வரை 450 மாணவர்களுக்கு மேல் கல்வி கற்கிறார்கள்  இந்த நிறுவனத்தில் என்னுடன் சேர்ந்து பல ஆசிரியர்கள் பணியாற்றுகின் றனர்.  இங்கு பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் அனைவரும் தமது உழைப்பிற்கு  ஏற்ற ஊதியத்தை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் ஒத்தாசையுடன் எமது நிறுவனம்  இலவச கல்வித் திட்டங்களையும் அமுல்படுத்துகின்றது. இதன்படி 1977 காலப் பகுதி தொடக்கம் எமது கிராமங்களிலும்,அயல் கிராமங்களிலும்  இருந்து வரும் , வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுருமை அளித்துச் சிறந்த கல்வியை வழங்கி வருகிறோம். அதனூடாகப் பயனடைந்தவர்கள் பலர், இன்று அரசு மற்றும் அரசு சார்பற்ற  நிறுவனங்களில் உயர் பதவிகளை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது எமக்கு ஆன்ம திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கு கல்வி கற்கும் மொத்த மாணவர் தொகையில் 30 சதவீத மாணவர்கள் எமது இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பயடைகிறார்கள்.  இந்த நிறுவனத்தை ஆரம்பித்தது தொடக்கம் இன்றுவரை கடந்த 40ஆண்டு காலப் பகுதியில், எந்த ஒரு மாணவனையும் பணம் கட்டவில்லை  என்று திருப்பி அனுப்பியதில்லை.  ஒவ்வொரு தடவையும் க.பொ.த சாதாரணத்திற்குத் தோற்றுகின்ற எமது நிறுவன மாணவர்களில் 95 சத வீதமானோர் பரீட்சையில் சித்தியடைகின்றனர்.  இதற்கு எந்த வொரு விளம்பரங்களையும்  இதுவரை, நாங்கள்  செய்ததில்லை  எமது நிறுவனத்தை நோக்கி மாணவர் தொகை  அதிகரிப்பதற்குக் காரணம் பணம் என்பதற்கப்பால் கற்பித்தலை பெரும்பாலும் சேவை யாகக்  கொண்டிருக்கிறோம். இங்கு வருகின்ற மாணவர்களுக்கு  கல்வியுடன், ஒழுக்கத்தையும் போதிக்கின்றோம்.”  என்கிறார் அருட்செல்வம் மாஸ்டர்.

பணத்தைச் சேர்க்கக் கூடிய வாய்ப்பிலிருந்து விலகி அதனைச் சேவையாக்கி பல வசதியற்றவர்களுக்கு கல்வி கற்க வாய்ப்பைக் கொடுத்து அவர்கள் கல்வி மேம்பாட்டிற்கு உதவுகின்ற அருட்செல்வத்தின் பணி மகத்தானதே.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.