இலங்கை பிரதான செய்திகள்

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்த, பிரேரனை ஏகமனதாக நிறைவேற்றம்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


வடமாகாணத்தில் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொண்டுவந்த பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 130வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி பிரேரணையை ரவிகரன் சபைக்கு கொண்டுவந்தார்.

பிரேரணையை முன்வைத்து ரவிகரன் உரையாற்றுகையில், தமிழர் நிலங்களில் குறிப்பாக வடமாகாணத்தில் இதுவரை சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட சிங்களமயமாக்கல் முன்னெடுப்புகளையும் தற்போது முல்லைத்தீவு உட்பட ஏனைய நான்கு மாவட்டங்களிலும் நிகழ்த்தப்படும் சிங்களமயமாக்கல் முன்னெடுப்புகளையும் தகுந்த வல்லுநர் குழாம் ஒன்றை நிறுவி அவர்களின் ஊடாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவ்வாவணப்படுத்தல் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சிங்களமயமாக்கல் தொடர்பான வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ ஆவணமாக இருத்தல் வேண்டும்.

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் இக்குடியேற்றங்களை உடன் நிறுத்தவேண்டும் என்ற எமது அழுத்தமான கருத்தினை அரசாங்கத்துக்கு உரிய வகையில் தெரியப்படுத்துதல். தற்போது முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படவிருக்கும் சட்டத்திற்கு புறம்பான மாயபுர குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் முகமாக வடமாகாணசபையை சார்பாக்கும் அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் குறித்த இடத்திற்கு வருகைதந்து தொடரும் சிங்களமயமாக்கலை எதிர்த்து வலிமையான கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் ஒருநாள் கவனயீர்ப்பை மேற்கொள்ளவேண்டும் என மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறித்த விடயம் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் தொடர்ச்சியாக அரசுடன் பேசி வருகிறார்கள். ஆகவே ஆக்கபூர்வமான தீர்வு கிடைக்கும் என கூறினார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers