இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள பல கோடி குழந்தைகளுக்கு போசாக்கு மிக்க உணவோ, ஆரோக்கியமான பராமரிப்போ கிடைப்பதில்லை என யுனிசெப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘மூளையின் விருத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு இன்று (01.09.18) யாழில் நடைபெற்றது.
வட.மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தச் செயலமர்வினை வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் பிரதம அதிகாரி பவூலா புலென்சியா ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.இச்செயலமர்வில், இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் பல கோடி குழந்தைகளிற்கு உச்ச மூளை விருத்திக்கான பல்வேறு தூண்டல்கள் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ள யுனிசெப் குறிப்பாக இந்த நாடுகளில் போசாக்கு மிக்க உணவோ, ஆரோக்கியமான பராமரிப்போ கிடைப்பதில்லை எனவும், வன்முறை, தீவிர மன அழுத்தம், சூழல் மாசடைதல், உள்ளிட்ட முரண்பாடுகளிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவதில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளது.
இவற்றின் விளைவாக பிள்ளையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகின்ற நிலையில், பொருத்தமான தூண்டல்களை வழங்கக்கூடிய வகையில், குழந்தைகளை பராமரிக்கும் பெரியவர்களினால் கவனிக்கப்படுவதில்லை எனவும் யுனிசெப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. வன்முறைகள், துஸ்பிரயோகம், கைவிடுதல் போன்றவற்றிற்கு முகம் கொடுப்பதை தவிர்ப்பதற்கு பல நாடுகளில் பல செயற்திட்டங்களை யுனிசெப் நிறுவனம் முன்னெடுத்து வரும் ஒரு பகுதியாக இந்த செயலமர்வினை இலங்கையில் வட.மாகாணத்தில் முதன் முதலாக ஆரம்பித்துள்ளமை நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Add Comment