Home இலங்கை முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்- நிலாந்தன்….

முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்- நிலாந்தன்….

by admin


மாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகமும் தமிழ்ச் சிவில் சமூகங்களும் இணைந்து அவ் வார்ப்பாட்டத்தினை ஒழுங்குபடுத்தின. அதிலிருந்து தொடங்கி இரண்டு எழுக தமிழ்கள் ஒரு முழு அளவிலான கடையடைப்பு ஆண்டு தோறும் நிகழும் நினைவுகூர்தல் போன்ற அதிகரித்த அளவு பொதுமக்கள் பங்குபற்றும் நிகழ்வுகளில் ஆகப்பிந்தியதாக முல்லைத்தீவு ஆர்ப்பாட்டத்தைச் சொல்லலாம்.

ஆட்சிமாற்றத்திற்கு முன்னரும் ஆங்காங்கே எதிர்ப்புக்கள் காட்டப்பட்டதுண்டு. அவற்றில் பெரும்பாலானவை சிறுதிரள் எதிர்ப்புக்கள்தான். ஏதாவது ஒரு பிரதான தமிழ் நகரத்தில் சிலபத்துப்பேர் கூடி எதிர்ப்பைக் காட்டுவார்கள். ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இவ்வாறான எதிர்ப்புக்களின் போது குறைந்தளவு ஆர்ப்பாட்டக்காரர்களையும், கூடுதலான அளவு புலனாய்வாளர்களையும், ஊடகவியலாளர்களையும் காண முடியும். இவை பெரும்பாலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்தான்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இது போன்ற கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றை பெரும்பாலும் ஏதாவதொரு கட்சி அல்லது ஒரு செயற்பாட்டியக்கம் அல்லது சிவில் அமைப்புக்கள் போன்றன ஒழுங்குபடுத்துகின்றன. இக்கவனயீர்ப்புப் போராட்டங்கள் அடுத்தநாள் பத்திரிகையில் செய்தியாக வருவதற்குமப்பால் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் முல்லைத்தீவில் நடந்தது போன்ற ஆர்ப்பாட்டங்கள் அப்படிப்பட்டவையல்ல. அவை அரசாங்கத்தையோ அனைத்துலக சமூகத்தையோ எந்தளவிற்கு அசைக்கும் என்பதற்குமப்பால் தமிழ் மக்கள் மத்தியில் அவை ஏற்படுத்தும் கிளர்ச்சியுணர்வு, கூட்டு மனோநிலை என்பன மிகவும் முக்கியமானவை. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் ஒருகட்சி ஆர்;ப்பாட்டங்கள் அல்ல. அவை பல கட்சி ஆர்ப்பாட்டங்கள். பெரும்பாலும் எல்லாக் கட்சிகளையும் அரவணைத்தும் ஒரு பொதுப்பரப்பில் இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. இங்கு கட்சிக் குறுக்கங்களுக்கு இடமில்லை. கறுப்பு வெள்ளை அணுகுமுறைக்கும் இடமில்லை. எதிரெதிரான போக்குகளைக் கொண்ட கட்சிகளும் இதில் ஒரு திரளாகின்றன. அரசியல் ரீதியாக பகைவர்களாகக் காணப்படும் தலைவர்கள் இங்கே ஒரு திரளாகின்றனர். அப்படிப் பார்த்தால் அதன் மெய்யான பொருளில் இவைதான் பெருந்திரள் மக்கள் மைய போராட்டங்களாகும். ஆனால் இவற்றை அடுத்தடுத்து தொடர்ச்சியாகச் செய்ய முடியாது. இடைக்கிடை எப்போதாவது அதிகம் உணர்ச்சிகரமான விவகாரத்தின் மீது ஏற்படும் கூட்டுக்கோபத்தை ஒன்று திரட்டும் பொழுது அது இவ்வாறு கூட்டு எதிர்ப்பாக மாறுகிறது. 2009 மேக்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பு என்று பார்க்கும் பொழுது இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பலவுண்டு.

2009 மே வரையிலும் தமிழ் எதிர்ப்பு எனப்படுவது ஒரு துலக்கமான இராணுவ வழிமுறையாக இருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் ஒரு தெளிவான இராணுவ மூலோபாயம் இருந்தது. 2009 மே வரையிலும் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகம் செயல்பூர்வமானதாக இருந்தது. அது எதிர்த்தரப்பையும், வெளித்தரப்புக்களையும் தனது செயல்களுக்கு எதிர்வினையாற்றத் தூண்டுமளவிற்கு தாக்கமுடையதாகவும் இருந்தது. ஆனால் 2009 மேக்குப் பின் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் தேர்தல்மைய அரசியலாகவே சுருங்கி விட்டது. அரசாங்கம் மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிர்வினையாற்றும் ஓர் அரசியலாகவும் சுருங்கி விட்டது. தனது நகர்வுகளின் மூலம் அரசாங்கத்தையும் வெளித்தரப்புக்களையும் பதில்வினையாற்றத் தூண்டும் அளவிற்கு சக்திமிக்கதாக அது இல்லை. இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் 2009 மேக்குப்பின்னரான தமிழ் எதிர்ப்பு எனப்படுவது இன்று வரையிலும் அதற்கேயான ஒரு புதிய செய்முறை வடிவத்தை கண்டுபிடிக்கவில்லை.

எல்லாக்கட்சித் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராடுவோம் போராடுவோம் என்று கூவுகிறார்கள். வன்முறையற்ற வழிகளில் அகிம்சைப் போராட்டம் வெடிக்குமென்று பிரகடனம் செய்கிறார்கள். ஆனால் யாராலும் இதுவரையிலும் புதிய எதிர்ப்பு வடிவத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறான ஒரு வெற்றிடத்தில்தான் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போhராட்டமும், காணிக்காக நடாத்தப்படும் போராட்டங்களும் 500 நாட்களைக்கடந்து தேங்கி நிற்கின்றன. வீதியோரங்களில் வெயிலில், மழையில், பனியில் கிடந்து போராடும் அந்த மக்களால் அரசாங்கத்தையோ வெளியுலகத்தையோ தீர்க்கமான வழிகளில் தம்மை நோக்கித் திருப்ப முடியவில்லை.

கடந்த வியாழக்கிழமை காணாமல் ஆக்கப்படடவர்களுக்கான அனைத்துலகத் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வழமையாக இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றும் ஒரு மதகுரு இம்முறை இது தொடர்பான நிகழ்வுகளில் பங்குபற்றவில்லை. ஏனென்று கேட்ட போது அவர் சலிப்போடு சொன்னார் ‘சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை. ஒவ்வொரு பகுதியும் மற்றைய பகுதியை வெட்டிக்கொண்டோட முயற்சிக்கின்றது. வௌ;வேறு தரப்புக்கள் பின்னாலிருந்து கொண்டு போராடும் மக்களை வழிநடத்த முயற்சிக்கின்றன. ஜெனீவாவிற்குப் போவதுதான் போராடும் மக்களின் இறுதி இலட்சியமா? என்று கேட்கத் தோன்றுகிறது. இதில் ஒரு பொம்மை போல வந்து நின்று முகம் காட்டுவதை விடவும் வராமலே விடுவது என்று தீர்மானித்தேன்’ என்று.

இது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்திற்கு மட்டுமல்ல ஏனைய எல்லாப் போராட்டங்களுக்கும் பொருந்தும் 2009 மேக்குப் பின்னரான தமிழ்ப் போராட்டக்களத்தின் பரிதாபகரமான ஒரு குறுக்குவெட்டுமுகத் தோற்றம் இது. ஒரு புதிய தமிழ் எதிர்ப்பு வடிவத்தைக் கண்டு பிடிக்கும் வரை இந்த நிலமையே தொடரும்.

கடந்த 9 ஆண்டுகளாக தமிழ் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏன் போதிய வெற்றியைப் பெறவில்லை என்பது தொடர்பாக ஒரு முறையான ஆய்வு முக்கியம். செல்ஃ;பி யுகத்திற்குப் பொருத்தமான புதிய போராட்ட வடிவங்களைக் குறித்து கருத்துருவாக்கிகளும், புத்திஜீவிகளும், செயற்பாட்டாளர்களும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தமிழ் எதிர்ப்பை ஏன் அரசாங்கமும், வெளியுலகமும் பொருட்படுத்தவில்லை என்ற கேள்விக்கு விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஏனைய தலைவர்களும், பேரவையும், செயற்பாட்டியக்கங்களும் பதில் கண்டுபிடிக்க வேண்டும்.

விக்னேஸ்வரன் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டத்தில் பின்வருமாறு கூறுகிறார்….’கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்துப் பெற முயற்சிப்பது’ என்று. அனால் அவரிடம் அதற்குரிய செயல் வடிவம் எதும் உண்டா?

தனது அரசியல் செயல்வழிக்குரிய பிரயோக வழிவரைபடம் விக்கியிடமும் இல்லை. தமிழ் எதிர்ப்பை தாக்கமுடைய ஒரு புதிய வடிவத்தில் படைப்புத்திறனோடு வெளிப்படுத்தும் பரிசோதனை வடிவம் எதுவும் விக்னேஸ்வரனிடமோ அல்லது பேரவையிடமோ இல்லை.

சம்பந்தரைப் போலவே விக்கியும் ஒரு தேர்தல் மைய அரசியல்வாதிதான். தேர்தல் மூலம் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விளையும் ஒரு தலைவர்தான். 2009ற்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆனால் செயலுக்குப் போகாத பிரகடனங்களோடும், தீர்மானங்களோடும் காணப்படுகிறார். புலிகள் இயக்கத்திற்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பின் புதிய போராட்ட வடிவமொன்று கண்டுபிடிக்கப்படாத வரையிலும் விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் முழுமையடையாது.

எனினும் ஒரு தேர்தல் மைய அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவருக்கு இருக்கக்கூடிய வரையறைகளோடும் இப்பொழுது தமிழ் எதிர்ப்பின் ஒப்பீட்டளவில் பெரிய திரளுக்கு தலைமை தாங்கக் கூடியவராக அவரே காணப்படுகிறார். முல்லைத்தீவில் நடந்த போராட்டத்தை ஒத்த போராட்டங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளும் எவரும் இப்படியொரு முடிவிற்கே வரமுடியும். குறைந்தபட்சம் தேர்தல் மைய அரசியலிலாவது ஆகக்கூடியபட்சம் பொதுமக்களை அணிதிரட்டக்கூடிய ஒரு பரந்த பொதுத்தளத்திற்கு தலைமை தாங்குவதற்கு விக்னேஸ்வரனைப் போல ஒருவரே தேவை. கட்சிக் குறுக்கங்களுக்கப்பால் எதிரும் புதிருமாக நிற்கும் எல்லாத் தரப்புக்களையும் அரவணைக்கத் தக்க தலைமைகள் தமிழ் மக்களுக்குத் தேவை. 2009 மேக்குப் பின்னரான ஒரு புதிய எதிர்ப்பு வடிவம் கண்டு பிடிக்கப்பட்டிராத ஒரு வெற்றிடத்தில் குறைந்த பட்சம் தேர்தல் மைய அரசியலிலாவது ஒரு பரந்த பொது எதிர்ப்புத் தளத்தை உருவாக்க வேண்டும். ஆகக்குறைந்த பட்சம் அடிப்படை இலட்சியத்தோடு ஒத்துப் போகும் எல்லாத்தரப்புக்களையும் ஒரு பொதுத் தளத்தில் திரட்ட வேண்டும். இல்லையென்றால் மேற்கத்தைய நாடுகளில் பயிலப்படுவது போன்ற இருகட்சியோட்டமானது தமிழ் வாக்குகளைச் சிதறிடித்து விடும். அது யாழ்ப்பாணத்திற்கு அதிகம் சேதாரத்தைத் தராது. ஆனால் வவுனியா முல்லைத்தீவின் எல்லைப்புறங்களிலும் கிழக்கிலும் அது தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தி விடும். எனவே தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒப்பீட்டளவில் ஆகப்பெரிய ஓர் எதிர்ப்பு அரசியற் தளத்திற்கு தலைமை தாங்கவல்ல ஒரு மூத்த ஆளுமைதான். கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் உட்பட எல்லாத் தரப்புக்களையும் வசப்படுத்தி அரவணைத்துக் கொண்டு போக்கத்தக்க ஓரு மூத்த ஆளுமைதான் 2009 மேக்குப் பின்னிருந்து தமிழரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அநேகமாக எல்லாப் பெருந்திரள் மக்கள் போராட்டங்களும் ஒரு பொதுப்பரப்பில் அனைத்துத் தரப்புக்களையும் இணைத்து ஏற்பாடு செய்யப்பட்டவைதான். அவை ஒரு கட்சிப் போராட்டங்கள் அல்ல. அவை பலகட்சிப் போராட்டங்கள். எனவே பல கட்சிகளை இணைத்த ஒரு பொதுக்கூட்டு அவசியம். தீர்வற்ற அபிவிருத்தி என்ற மாய மானின் பின்னோடும் நிகழ்ச்சிநிரலை முறியடிப்பதற்கு பெருந்திரள் அரசியலே தேவை. அப்படியொரு பெருந்திரள் அரசியலுக்கு தலைமை தாங்கி எல்லாத் தரப்புக்களையும் அரவணைக்கவல்ல ஒரு மூத்த ஆளுமையாக விக்னேஸ்வரன் மேலெழுவாரா?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More