இந்தியா இலங்கை ஒலி வடிவம் பிரதான செய்திகள்

”இந்தியா எங்கள் தந்தையர் நாடு என பாலா அண்ணர் அடிக்கடி சொல்வார்” (ஒலிவடிவம் இணைப்பு)

காலம்சென்ற தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாரத பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ் இந்திய துணை தூதுவர் திரு.சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர், மறைந்த கலைஞர் கருணாநிதி, பாரத பிரதமர் வாஜ்பாய் தொடர்பிலான நினைவுரைகளை நிகழ்த்தினார்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றுகையில்,

அன்னை இந்திராகாந்தி 1974ஆம் ஆண்டு பாரத பாராளுமன்றிலே அண்ணன் வை கோபாலசாமியிடம் கூறியிருந்தார் இலங்கையிலே ஒருமுறை இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளலாமா? என யோசிக்கிறோம் என்று. அதனுடைய அர்த்தம், நான் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான பிரிப்பு தீர்வை வழங்கலாமா, என்று தான் சிந்திப்பதாக வைக்கோ அண்ணனிடம் கூறியதாக அவர் என்னிடம் நேரடியாகவே குறிப்பிட்டு இருந்தார். அவ்வாறான சிந்தனைகள் கூட ஒரு காலக்கட்டத்தில் அன்னை இந்திராவிடம் இருந்தது. அதனால் அவரை இன்றும் அன்னையாக போற்றுகிறோம்.

அது போல் அன்னை ஜெயலலிதா தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், இறுதிக்காலக்கட்டத்திலே நடந்த எம்மீதான இனப் படுகொலைகளை, மிகத் தீவிரமாக எதிர்த்திருந்தார். அதனாலேயே இலங்கை மீதான பொருளாதார தடை குறித்தும், இலங்கையிலே ஒரு இனப்படுகொலை நடைபெற்றது என்பது தொடர்பாகவும், சட்ட சபையிலே தீர்மானங்களை கொண்டு வந்திருந்தார். அது ஒரு கால கட்டத்திலே எமக்கு தென்பாக இருந்தது.

அவ்வாறான தலைவர்கள் மத்தியேிலே அடர்பிகாரி வாஸ்பாய் பாரத தேசத்திலே 3 முறை பிரதமராக இருந்தார். அதில் இரன்டாவது தடவையாக 13 மாதங்கள் இருந்த போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்தார் என்பதன் அடிப்படையிலேயே பதவி பறிக்கப்பட்டது. அதன் பின் 5 வருடங்கள் பிரதமராக இருந்த போது ஜோர்ஜ் பெர்னான்டஸ் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றய போது ஈழதேசத்தின் மீதான கரிசனையும், ஈழத் தமிழர்கள் மீதான ஈடுபாடும் அதிகரித்திருந்தது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க விசேட பிரதிநிதியை கொழும்புக்கு அனுப்பி இருந்தார். ஆனால் அந்தப் பிரதிநிதியை இலங்கை அரசாங்கம் திருப்பி அனுப்பியது.

இதேபோல் அரசியலுக்கு அப்பால் கலைஞர் கருணாநிதியை நினைக்கிறேன் அவர் தமிழ்மொழியை செம்மொழியாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சியில் இருந்து தமிழிற்காக அவர் ஆற்றிய பங்களிப்புகளை உலத் தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

அண்ணன் தமிழ்ச் செல்வன் இந்த மண்ணிலே வீரச்சாவடைந்த போது கண்ணீரோடு கவிதை வடித்திருந்தார். சில தவறுகள் இருக்கலாம, தலைவர்கள் வாழுகிறபோது அவர்களிடம் மாற்று கருத்துக்கள் இருக்கலாம். அல்லது அவை காலத்தினுடைய கோலங்களாகவும் இருக்கலாம். அவைகளுக்கு அப்பால் இந்த மண்ணிலே அவர்கள் செய்த நன்மைகளையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

1954ல் இலங்கையில் சிங்கள மொழிச் சட்டம் கொண்டு வந்த போது கலைஞர் கருணாநிதிக்கு 35 வயது. அப்போது சிங்கள சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் கடையடைப்பு போராட்டங்களை நடத்தி இருந்தார்.

அதேபோல் அமைதிப்படையாக வந்த இந்திய ராணுவத்தினர் திரும்பிச் செல்லும் போது அவர்களை வரவேற்கச் செல்லவில்லை. என்னுடைய தமிழர்களை சுட்டவர்களை, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை, வரவேற்க அந்த இடத்திற்கு செல்ல மாட்டேன் என சொன்ன நாட்களையும் நினைத்து பார்க்கிறேன். காலமும் சூழலும் சில மாற்றங்களை தந்திருக்கிறது என நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்னும் முக்கிய விடயங்கள் குரலை கேட்டுப் பாருங்கள்…

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers