இலங்கை பிரதான செய்திகள்

காணிகளை மாத்திரம் கையகப்படுத்தவில்லை கால் நடைகளையும் பிடிக்க முயற்சி…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

முல்லைத்தீவில் கடற்படையினர் மக்களின் காணிகளை மாத்திரம் கையகப்படுத்தவில்லை. தமக்கு ஜீவனோயத்தை வழங்கும் மாடுகளையும் கையகப்படுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமினுள் அடைபட்டு உள்ள கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு வழங்க கடற்படையினர் பிரதேச செயலகத்திற்கு அனுமதி வழங்கியபோதும் அதனை நிறைவேற்ற பிரதேச செயலகம் தவறிவிட்டதாக கால்நடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த கடற்படைத் தளம் அமைந்துள்ள 617 ஏக்கர் காணிக்குள் சுமார் நூறு மாடுகள் அகப்பட்டுள்ளன. எனவும் அவற்றை மீட்டுத்தருமாறு கடந்த 2 ஆண்டுகளாக மாவட்டச் செயலகம் ஊடாக கால் நடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முகாம் பகுதிக்குள் அகப்பட்டு உள்ள கால்நடைகளை பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து கால்நடைகளை பிடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. அந்த முயற்சியின் போது சுமார் 10 மாடுகள்கூட பிடிக்கப்படவில்லை. அத்துடன் குறித்த முயற்சி கைவிடப்பட்டது.

அது குறித்து கரைத்துரைப்பற்று பிரதேச செயலர் தெரிவிக்கையில் ,

கடற்படை முகாமுக்குள் அகப்பட்டு உள்ள கால்நடைகளை பிடிப்பதற்கு முகாம் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அதற்கான அனுமதி பெறப்பட்டது. அதன் பயனாக முன்னாள் பிரதேச செயலர் மாடுகளை பிடிக்கக்கூடியவர்களை அழைத்து சென்று முதலில் தடம் வைத்து பிடிக்க முயன்றனர் அப்போது ஒரு மாடு மாத்திரமே அகப்பட்டது. அதன் பின்னர் நேரடியாகவே துரத்திப் பிடித்தனர் அதன்போதும் 7 மாடுகள் மட்டுமே பிடிக்க முடிந்தது.

இந்த நிலையில் மாடுகளை பிடிப்பவர்கள் தமது பிடி கூலிக்கு இந்த மாடுகளை பிடிப்பது பொருந்தாது என கைவிட்டுச் சென்றனர். இதன் காரணத்தினாலேயே குறித்தபணி தடைப்பட்டது. இருப்பினும் மீண்டும் கடற்படை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவற்றினை பிடிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.