இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

கண்டிய நடனத்தை தெருவிலே ஆடட்டும் – பரதநாட்டியத்தை தெருவிலே ஆடமுடியாது…

இனிவரும் காலங்களில் பரதநாட்டியத்தை தெருவிலே ஆட முடியாது அதற்கான சுற்று நிருபத்தினை வடக்கு மாகாண கல்வி அமைச்சு விரைவில் வெளியிட உள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்தும் “தெய்வீக சுகானுபவம்” இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுவருகின்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

பரத நாட்டியத்தினை யாரையும் வரவேற்பதற்காக தெருவிலே ஆடக்கூடாது. பரதநாட்டியத்தினை தெருவிலே ஆடுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. நாங்கள் எமது மாகாணத்திற்குற்பட்ட எல்லா பாடசாலைகளுக்கும்,நிறுவனங்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்ப இருக்கின்றோம். கடந்தகாலங்களில் விழாக்கள் இடம்பெறும் போது அதிதிகளை அழைத்து வருவதற்கு தெருவிலே பரதநாட்டியம் ஆடப்பட்டதை பல இடங்களிலே அவதானித்திருக்கின்றோம். விழாக்களிலே இராணுவத்தை வரவேற்பதற்கு கூட இந்த பரதநாட்டியம் தெருவிலே ஆடப்பட்டிருக்கிறது. கண்டிய நடனத்தை வேண்டுமென்றால் அவர்கள் தெருவிலே ஆடட்டும். ஆனால் பரதநாட்டியம் என்பது மேடையிலே மக்களுக்கு செய்தியை சொல்லக்குடிய வகையிலே ஆடப்படவேண்டும். சில முன்பள்ளிகள் கூட இவ்வாறான செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கின்றன.

அதே போன்று இந்த பரதநாட்டிய கலையை மேலும் வளர்த்தெடுப்பதற்கு வட இலங்கை சங்கீத சபை ஊடாக மிகச்சிறந்த ஒரு நூலகத்தை உருவாக்குவது தொடர்பிலும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். கலைகளை வளர்ப்பது தொடர்பில் நாங்கள்(கல்வி அமைச்சு) பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் வருடாவருடம் நாங்கள் கொண்டுவருகின்ற இந்த தெய்வீக சுகானுபவம் ஒரு முக்கியமான விடயமாகும்.
தமிழக கலைஞர்களுக்கும் எங்களுடைய கலைஞர்களுக்கும் இடையிலான ஒரு நல்ல பரிமாற்றத்தினையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் களமாக அமையும். என்றார்.

தெய்வீக சுகானுபவம் -7 இந்தியாவின் பிரபல பரதநாட்டியக்கலைஞர் கலைமாமணி,நிருத்திய சூடாமணி,நாட்டிய இளவரசி ஸ்ரீமதி ஊர்மிளா சத்தியநாராயணன் அவர்களும் அவரது குழுவினரும் இணைந்து வழங்கும் பரதநாட்டிய பயிற்சிப்பட்டறை தற்போது யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.

இதில் பாடசாலை மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,நடன கலைஞர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெறும் இந்த பயிற்சிப்பட்டறை நாளை மறுதினம் (06.09.2018) வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap