இலங்கை பிரதான செய்திகள்

நல்லூரான் தேர் இழுக்க வாருமையா

நல்லூரான் தேர் இழுக்க வாருமையா

நல்ல குருநாதன் சிவயோகரும்

செல்லப்பரும் தவமியற்றி

உல்லாசமாய்  திரிந்த நல்லூர் வீதியிலே

ஆறுமுகன் தேரிழுக்க வாருமையா

நல்லூரான் சண்முகன்

சொல்லற்கரிய ஜெகஜ்ஜோதியாய்

அல்லல் தீர்த்து அபயமளிக்க வருகின்றான் – அவன்

நல் எழில் தேரிழுக்க வாருமையா

அங்கயற்  கண் மடவார் சமேதரராய்

செங்கைகளில்  படைக்கலம் சுமந்து

பாங்காகப் பவனி வரும் நல்லூரான்

அலங்கார கந்தன் தேரிழுக்க வாருமையா

சரவணப் பொய்கை

அரவணைத்த  ஆறுமுகனுக்கு காவடிகள்

கரகங்கள் கற்பூரச்சட்டிகளும் அணிவகுக்க

தரணியில் ஆறுமுகன் தேரிழுக்க வாருமையா

தேங்காயும் கற்பூரமும் குவிய

நீங்கா பக்தியுடன் மனம் குவிய

சாங்காலம் வரை நல்லூரான் அருள் குவிய

தயங்காமல் கந்தன் தேரிழுக்க வாருமையா

கோபுர வாசலுக்கு வந்துவிட்டான் ஆறுமுகன்

நாற்புறமும்  இன்னிசை முழக்கமும் மலரும் பொழிய

பன்னீரும் சந்தனமும் பக்தர் கண்ணீரும் சொரிய

தங்க ஆபரண அலங்காரக் கந்தன் தேரிழுக்க வாருமையா

கூடிநின்று துதிக்கும் பக்தர் குழாம்

ஓடிவந்து சேவிக்கும் அடியார் குழாம்

பாடிப் பரவசமாய் ஆடும் பஜனை குழாம்

நாடி வந்து ஆறுமுகன் தேரிழுக்க வாருமையா

கூறுவார் குறை கோடி தீர்க்கும் குகன்

ஏறுகின்றான் தேர்முட்டிப்   படி மேலே

கூறுகின்றனர் அந்தணர்கள் வேத மந்திரங்களை

ஆறுதலை தரும் ஆறுமுகன் தேரிழுக்க வாருமையா

எட்டுத் திசையும் நல்லூரான் கோயில் மணி ஓசை

கொட்டும்  மேளமும் இன்னிசைக் கருவிகளும் வேத மந்திரமும்

பட்டுத் தெறிக்கும் சிதறு தேங்காயும் அரோகரா கோசமும்

கேட்டு கட்டறுக்கும் ஆறுமுகன் தேரிழுக்க வாருமையா

வாசித்துக்  காணாெணாத பொருள்

வாய்விட்டுப் பேசொணாத பொருள்

வேத மந்திர ஸ்வரூபனான பொருள்

ஆறுமுகமான பொருள் தேர் ஏறி  அருள்புரிகின்றான்

நல்லூர்க் கந்தா ஞானோபதேசா

எல்லையில்லாக் கருணைக் கடலே

தொல்லை வினை நீக்கும்  சடாட்சரனே

செல்வமே உன் தேர் இழுத்து உவந்தோம் உய்ந்தோம் ஐயா

கலாநிதி சண்முகயோகினி ரவீந்திரன்,

யாழ் பல்கலைக்கழகம்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers