Home இலங்கை நுண்கடன் தவணைக் கட்டணங்களுக்குப் பதிலாக பாலியல் சலுகை கோரப்படுகின்றது

நுண்கடன் தவணைக் கட்டணங்களுக்குப் பதிலாக பாலியல் சலுகை கோரப்படுகின்றது

by admin

நுண்கடன் பெற்ற பெண்களிடம், தவணைக்கட்டணங்களுக்குப் பதிலாக பாலியல் சலுகைகள் வழங்குமாறு சில கடன் சேகரிப்பாளர்கள் நிர்ப்பந்திப்பது குறித்து தனது கவனத்துக்குக் கொண்வரப்பட்டுள்ளதாக ஐ.நாவின் விசேட நிபுணர் தெரிவித்துள்ளார்.  இலங்கைக்கு பயணம் செய்திருந்த ஐக்கிய நாடுகளுக்கான சுயாதீன நிபுணர் யுவான் பப்லோ போஹோஸ்லாவ்ஸ்கியே (Juan Pablo Bohoslasky  )  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 3ஆம் திகதி இலங்கை சென்றிருந்த அவர் நேற்றையதினம் கொழும்பில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கான தனது பயணத்தின் போது தன்னால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயம் தொடர்பாக கருத்துரைத்த அவர் உலகிலுள்ள பெருமளவான மக்களை, வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்காக உதவியிருக்கும் நுண்கடன் தொடர்பாக, தனது இங்த இலங்கைக்கான பயணத்தின் போது முக்கிய கவனம் செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

கடனளிப்பவர்களால் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள்,   அவற்றின் பாரதூரமான இயல்பு என்பவற்றை, தான் அவதானித்ததாகவும் இதற்கு, இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நுண்கடன் திட்டத்தில் வறுமையிலுள்ள பிரதேசம், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பெண்கள் இலக்காக இருந்து வருகின்றனர் எனவும் கடன் வழங்கும் நிறுவனங்கள், 220 சதவீதம் வரையிலான வட்டி வீதங்களை அறவிடுவதாகவும் கூட்டு வட்டி கணிப்பு முறையை பின்பற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டிபயுள்ளார்.

ஒரே நேரத்தில், பல கடனளிப்பு நிறுவனங்களிலிருந்து, 3 அல்லது 4 கடன்களைப் பெற்று, அவற்றை நிலுவையில் வைத்திருக்கும் பெண்களை, சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகின்றது எனக் குறிப்பிட்ட அவர் இதனால், பெண்களிடம், கடன் சேகரிப்பாளர்கள் பாலியல் சலுகைக்கள் கோரப்படுவது குறித்து தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்வும் மேலும், சிலர் கட்னகளை மீளச்செலுத்துவதற்காக தங்களது சிறுநீரகங்களை விற்பனை செய்வதற்கு முயன்றுள்ள சம்பவம் தொடர்பிலும் தான் அறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த நுண்கடன் நிறுவனங்கள் தொடர்பில் ஒரு வட்டி வீத உச்சவரம்பை உருவாக்குமாறும், வலுவான கண்டிப்பான ஒழுங்குவிதிகளை நிறைவேற்றி, அவற்றை அமுல்ப்படுத்துமாறும் , தான் அரசாங்கத்திடம் வலிந்து கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நுண்நிதிக் கடனளிப்பு நிறுவனங்கள், கடன் தொடர்பான இடர்நேர்வுகளை, எவ்வாறு மதிப்பிடுவது என்பது தொடர்பாக, மனித உரிமைகள் தரநியமங்களுடன் பொருந்தக்கூடிய விதத்தில், வழிகாட்டுதல்களிருந்து வருதல் வேண்டும் என்றும் இச்சட்டவாக்கம் நிறைவேற்றப்படும் வரையில், கடனளிப்பு நிறுவனங்களால், மிகவும் பலவீனமான நிலையில் இருந்துவரும் குழுக்கள் சுரண்டப்படுவதையும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதையும் தடுத்துக்கொள்ளும் பொருட்டு, கடன் தவணைக் கட்டணங்களைச் செலுத்துவதை, நிறுத்தி வைக்கும் ஒரு காலப் பிரிவை பிரகடனம் செய்யவேண்டும் என த அரசாங்கத்திடம் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததையடுத்து, கொழும்பு வெளிச்சுற்றுவட்ட கடுகதிப் பாதை, மின் உற்பத்தி நிலையங்கள், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை விமான நிலையம் என்பவற்றையும் உள்ளடக்கிய பாரியளவிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டாலும், அத்தகைய கருத்திட்டங்கள் ஆரம்பிக்கடுவதற்கு முன்னர், மனித உரிமைகள் மீது விரிவான மதிப்பீட்டை நடத்தவேண்டும் என்ற கடப்பாட்டை, இலங்கையின் சட்டத்தொகுப்பு உள்ளடக்கியிருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தனது ஒன்பது நாட்கள் இலங்கைப்பயணம் குறித்த விரிவான அறிக்கையை, 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More