இலங்கை பிரதான செய்திகள்

குருந்தூர் மலையில் விகாரை அமைக்கப்படமுடியாது – கிராம மக்கள் வழிபட அனுமதி L


முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விகாரை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் கடந்த 04.09.18 அன்று பௌத்த துறவிகள் உள்ளிட்ட குழுவினர் பயணம் மேற்கொண்டுடிருந்த நிலையில் பிரதேச இளைஞர்களால் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் முறுகல் நிலை ஒன்றும் தோன்றியிருந்தது.

இந்த நிலையில் இதில் ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தலையிட்டு குறித்த நிலமையினை சரிசெய்ததுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை தாக்கதல் செய்துள்ளார்கள். இன்னிலையில் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை கடந்த 06.09.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 13.09.18 வரை குறித்த மலைக்கு எவரும் செல்லமுடியாதவாறு தற்காலிக தடை உத்தரவினை நீதிபதி பிறப்பித்துள்ளதுடன் 13.09.18 இன்று குறித்த வழக்கினை மேலதிக விசாரணைக்காக திகதியிட்டிருந்தார்.இன்னிலையில் இன்று குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் குறித்த கிராமத்தின் சார்பாக மக்களும், விகாரை அமைக்கவந்த பௌத்த துறவிகள் தரப்பினரும் , ஒட்டுசுட்டான்  காவல்துறையினரும்முன்னிலையாகியிருந்தனர்.

இதில் குமுளமுனை குருந்தூர்மலை கிராம மக்கள் சார்பாக ஜனாதிபதிசட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் மற்றும் மூத்த சட்டத்தரணி ரி.பரஞ்சோதி,மற்றும் சட்டத்தரணிகளான சுபாவிதுரன், கணேஸ்வரன், ஜெமீல், ராதிகா, நேரோஜினி, மின்ராச், துஸ்யந்தினி, அனித்தா, ஹரிஸ், சுதர்சன், உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த 14 சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதாடியுள்ளார்கள்.

இதன்போது இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில்,

குறித்த பிரதேசம் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றினை கொண்ட பிரதேசம் என்றும் அங்கு பல நூற்றாண்டுகளாகாக இயற்கை வழிபாட்டுமுறையில் ஆலயம் ஒன்றினை அமைத்து கிராம மக்கள் வழிபட்டு வருகின்றார்கள் என்றும் இந்த நிலையில் அங்கு அந்த இடத்திற்கு சம்மந்தமில்லாத பௌத்த மதகுருமார் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தின் அனசரணையுடன் விகாரை அமைப்பதற்காக வருகை தந்திருப்பதானது இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் சுமூகமற்ற ஒரு நிலையினை தோற்றிவிக்கும் என்றும் குறித்த பிரதேசத்தில் தொன்று தொட்டு வழிபட்டு வரும் மக்களின் வழிபாட்டிற்கு தடைவிதிப்பது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அத்துடன் தொல்பொருள் திணைக்களம் ஆய்வு என்ற பெயரில் விகாரை அமைப்பதற்கு பௌத்த மதகுருக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளமை பிழையான விடையம் என்றும் அதனை தடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கினை விசாரித்த கௌரவ நீதவான் குறித்த மலைப்பிரதேசத்தில் தொன்று தொட்டு வழிபாட்டில் ஈடுபடும் கிராம மக்கள் இயற்கை முறையில் அமைந்த கிராமிய வழிபாட்டினை ஆலயத்தில் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை என்றும் குறித்த பிரதேசத்தில் புதிதான கட்டுமானம் மற்றும் அகழ்வு பணிகளை மேற்கொள்ளகூடாது. என்றும் தொல்பொருள் ஆய்வு என்றபோர்வையில் புதிதாக எந்தவொரு மதத்தினையும் சேர்ந்த ஆலயங்கள் அமைப்பதும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவ்வாறு நிர்மாணிப்பதாக இருந்தால் பொலீசில் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றின் அனுமதியுடன் மேற்கொள்ளமுடியும் என்றும்

அதேவேளை குருந்தூர் மலையில் தொல்பொருள் அகழ்வு ஆராச்சிகள் மேற்கொள்ளவேண்டுமாக இருந்தால் யாழ்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் பங்குபற்றலுடன் மூத்த வரலாற்று ஆய்வாளர்களினதும் பங்கு பற்றலுடனும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம்வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்தியே அகழ்வு ஆராச்சியினை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவ்வாறு செய்யப்படாதுவிடத்து இனமுரண்பாடுகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து மன்றுக்கு அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த பிரதேசத்திற்கு சம்மந்தம் இல்லாதவர்களான பௌத்த துறவிகள் வரமுடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

ஈழத் தமிழர் தொன்மை மிகுந்த சைவ அடையாளங்கள் கொண்ட குருந்தூர் மலை பண்டாரவன்னியன் ஆட்சிக்காலத்திலும் அதற்கு முந்தைய வரலாற்றிலும் மிகவும் முக்கியத்துவம் கொண்டதாக அமைகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers