இலங்கை பிரதான செய்திகள்

கொத்துக்குண்டுகளின் எச்சங்கள் கண்டுபிடித்துள்ளமை குறித்து, இலங்கை பதிலளிக்க வேண்டும்….

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொள்பவர்கள் கொத்துக்குண்டுகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவேண்டும் என சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மீன் சூகா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொத்துக்குண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் குறித்த அமைப்பின் தலைமைப்பொறுப்பை இலங்கை பொறுப்பேற்றுள்ளதன் காரணமாக இலங்கை தனது நாட்டில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைப்பது குறித்து தெளிவுபடுத்தவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களுக்கென பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் பெருமளவில் மக்கள் தங்கியிருந்தவேளையில் அவர்கள் மீது கொத்துக்குண்டுகள் வீசியமையினை அனைத்து ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன எனவும் யஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக இலங்கை ராணுவத்தினர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தினர் என்னும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் 2016 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இதற்கான சுயாதீன விசாரணையை கோரியிருந்த போதும் அது நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட ஆயுதத்தினை முற்றாக ஒழிப்பதற்காக குரல்கொடுக்கும் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இலங்கை தனது கடந்த காலத்தை மறைக்க முடியாது எனவும் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் அமைப்புக்கும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்புகளுக்கும் பணியாற்றியுள்ள தமிழர்கள் தாங்கள் நேரடியாக கிளஸ்டர் குண்டுகளை பார்த்ததாக தெரிவித்துள்ளனர் எனவும் யஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற பகுதியில் பணியாற்றிய மருத்துவர்கள் பெண்ணொருவரின் காலில் இருந்து கிளஸ்டர் குண்டுகளின் சிதறல்களை அகற்றியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள யஸ்மீன் சூகா யுத்தத்தின் பின்னர் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பல பகுதிகளில் கொத்துக்குண்டுகளின் சிதறல்களை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இராணுவத்தினர் அந்த பகுதிகளை சுற்றிவளைத்துள்ளதுடன் பொதுமக்கள் அங்கு செல்வதை தடை செய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தான் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியதை மறுப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும்; அவமரியாதைக்குட்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.