Home இலங்கை குருந்தூர் மலை விவகாரம் – பணம் இல்லாததினால் பிக்குகளை அழைத்தோம் – தொல்லியல் திணைக்களத்திற்கு நீதிமன்று எச்சரிக்கை :

குருந்தூர் மலை விவகாரம் – பணம் இல்லாததினால் பிக்குகளை அழைத்தோம் – தொல்லியல் திணைக்களத்திற்கு நீதிமன்று எச்சரிக்கை :

by admin

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை தண்ணிமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் புத்தர் சிலைஒன்றினை நிறுவும் நோக்கில் புத்தர் சிலை வைப்பதற்காக பௌத்த மதகுருமார்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 04.09.18 அன்று புத்தர் சிலை உள்ளிட்ட கட்டுமான பொருட்களுடன் குருந்தூர் மலை பிரதேசத்துக்கு சென்றிருந்த வேளை பிரதேச இளைஞர்களினதும் கிராம மக்களினதும் எதிர்பினால் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலீசாரின் தலையீட்டுடன் ஏற்பட்ட முறுகல் நிலை சுமூகமாக்கப்பட்டது.

ஆய்வு செய்வதெனில் நிபந்தனைகள்!
இந்த சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசாரினால் கடந்த 06.09.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 13.09.18 அன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு புதிதாக ஆலயங்கள் அமைக்கப்படமுடியாது என்றும்,ஏற்க்கனவே வழிபாட்டை மேற்கொண்டுவந்த தமிழ்மக்கள் பாரம்பரிய கிராமிய வழிபாடுகளை தடையின்றி மேற்கொள்ளலாம் என்றும் தொல்பொருள் திணைக்களம் ஆய்வு செய்வதாக இருந்தால் யாழ்பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை பங்குபற்றல் தொல்லியல்துறை தொல்பொருள் மூத்த வரலாற்று ஆராச்சியாளர்களின் பங்கு பற்றலுடனும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்தியே ஆராச்சியினை மேற்கொள்ளவேண்டும் என்றும் மன்று இடைக்கால கட்டளை பிறப்பித்திருந்தது .

இன்னிலையில் கடந்த 27.09.18 அன்று குறித்த வழக்கிக்கிற்கு எதிராக நகர்த்தல் பத்திரம் ஊடாக தொல்பொருள்திணைக்களம் மற்றும் பௌத்த மதகுருமார் சார்பான சட்டத்தரணிகள் மூவர் தாக்கல் செய்து வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

விகாரை அமைக்க பிக்குகள் விருப்பம்

பாதிக்கப்ட்ட தரப்பான பௌத்த குருமார்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் குருந்தூர் மலைப்பகுதியில் குருந்தஅசோகாராம பௌத்த வழிபாட்டு தலம் இருந்துள்ளது என்றும் வர்தமானியில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. என்றும் இதன் படி அது தொடர்பில் ஆய்வு செய்யவே சென்றுள்ளதாகவும் இந்த சம்பத்தினை பிரதேசத்தில் உள்ள அரசியல் வாதிகள் இருவர் குறிப்பாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் ஆகியோர் மக்களை திரட்டி குழப்பத்தை விளைவித்துள்ளனர் என்றும் உண்மைக்கு புறம்பாக விகாரை அமைக்கும் முயற்சி என திரிவுபடுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்ததோடு குருந்தூர்மலைப்பகுதியில் தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்ளவே தாங்கள் வந்துள்ளதாக மன்றில் தெரிவித்துள்ளார்கள். இதற்கு அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இன்னிலையில் இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணைக்கு ஒட்டுசுட்டான் பொலீசார் முழுமையான அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாற்றினால் ஏற்க்கனவே பிறப்பிக்கபட்ட தர்க்காலிக கட்டளையை நீடித்தும் குறித்த வழக்கிற்கு 01.10.18 தவணையிடப்பட்டுள்ளது. இன்னிலையில் குறித்த வழக்கு 01.10.18 இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது . இதன்போது பௌத்த மதகுரு ஒருவரும் அவர்கள் சார்பாக இரண்டு சட்டத்தரணிகளும் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் மன்றில் முன்னிலையாகியுள்ளார்கள்.

தொல்லியல் திணைக்களம் வாதம்

நீதிமன்றில் மிக நீண்டநேரமாக நடைபெற்ற குறித்த வழக்கு விசாரணையின்போது குருந்தூர் மலைப்பகுதி தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் விகாரை ஒன்று அமைந்துள்ளது அது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளவே சென்றதாகவும் அங்கு உள்ளதாக் தெரிவித்து பௌத்த மத சின்னங்களை ஆதாரம் காட்டி தங்கள் கருத்தினை முன்வைத்துள்ளார்கள்.

இதன்போது கிராம மக்கள் சார்மாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். ஜனாதிபதி சட்டத்தரணி திரு.புவிதரன் தலைமையில் முதன்மை சட்டத்தரணிகளான அன்ரன்புனிதநாயகம்,ரி.பரஞ்சோதி,கெங்காதரன்,இளங்குமரன்,மற்றும் இளம் சட்டத்தரணிகள் அனைவரும் இந்த வழக்கிற்கு கிராம தமிழ்மக்கள் சார்பாக தமது வாதங்களை முன்வைத்துள்ளார்கள்.

 
 பிரிட்டிஸ் கால அனுமதி பத்திரம் உண்டாம்!

குருந்தூர்; மலைப்பகுதியினை அண்மித்த பகுதியில் உள்ள தமிழ்மக்களின் காணிகள் அனைத்தும் 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டதற்கான பத்திரங்கள் வைத்துள்ளார்கள். அவர்களின் காணிகளையும் தொல்பொருள் திணைக்களம் எல்லைப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் அங்கு தமிழர்கள்தான் பாரம்பரியமாக வாழ்ந்து வந்தார்கள் என்றும் அந்த மலையில் சிவன் மற்றும் ஜயனார் ஆலயங்கள் வைத்து பலநூறு ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள் அந்தவகையில் அங்கு தொல்பொருள் திணைக்களம் குறிப்பிடுவது போன்று பௌத்த விகாரை அமைந்திருந்தமை தொடர்பில் அதனை கண்டு பிடிக்க வேண்டும் என்பதாக இருந்தால் அதனை தொல்பொருள் திணைக்களம் மட்டுமே மேற்கொள்ளலாம் அதற்கு பௌத்த மதகுருமார்கள் அங்கு சென்று ஆய்வு செய்ய என்ன தகமை உண்டு இந்த அதிகாரம் அவர்களுக்கு யார் வழங்கியது இவ்வாறு செயற்பாட்டு தொல்பொருள் திணைக்களம் தமது அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்வது தவறாகும் என தமிழ் மக்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் அனைவரும் தமது வாதத்தினை முன்வைத்துள்ளார்கள்.

இன்னிலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் எவ்வாறு பௌத்த மதகுருமார்களை தொல்பொருள் திணைக்கள ஆய்விற்கு பயன்படுத்துவீர்கள் ?? என கௌரவ மன்று கேட்ட போது தொல்பொருள் திணைக்களத்திடம் நிதி பற்றாக்குறை காரணத்தால் குறித்த விகாரை தொடர்பில் ஆய்வு பணியினை பௌத்த குருமார்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்றில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

பிக்குகளை எவ்வாறு பயன்படுத்த முடியும்?

இதற்கு பதில் வழங்கிய மன்று பௌத்த மதகுருமார்களுக்கு இந்த ஆய்வினை நடத்தும் அதிகாரம் யார் வழங்கியது என்றும் அவர்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ள என்ன தகைமை உண்டு இவ்வாறு தொல்பொருள் திணைக்களம் தமது அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்முடியாது என மன்று எச்சரிக்கை செய்துள்ளது.

இந்த ஆய்வு பணியில் எவ்வாறு பௌத்த மாதகுருமார்களை தொல்பொருள் திணைக்களம் ஈடுபடுத்தியுள்ளது என்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தின் முழுமையான விளக்கத்தினை அடுத்த வழக்கில் தொல்பொருள் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் ஆயராகி மன்றில் தெரிவிக்குமாறு தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளருக்கு நீதிமன்றால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த பிரசேதம் முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்குள் அடங்குவதால் ஒட்டுசுட்டான் பொலீசாரிடம் இருந்து குறித்த வழக்கினை முல்லைத்தீவு முதன்மை பொலீஸ் அத்தியகட்சகர் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் வழிபாடுகளை நடாத்தலாம்

இந்த பிரச்சனை தொடர்பில் முழுமையான அறிக்கையினை அடுத்த தவணையில் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இவ்வளவு பிரச்சனையும் வருவதற்கு காரணம் தொல்லியல் திணைக்களம் தான் என்றும் இந்த இடத்தினை பாதுகாப்பதற்கு தொல்லியல் திணைக்களம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பது அதன் திட்டம் என்ன என்பது தொடர்பிலும் அடுத்த தவணைக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது.

அடுத்து வழமையாக மேற்கொண்டது போன்று தமிழ் மக்கள் கிராமிய வழிபாடுகளை நடத்தலாம் என்றும் மேலும் குறித்த மலைக்கு முல்லைத்தீவு காவல்துறையினரினால் பாதுகாப்பு வழங்குமாறும் இன்னிலையில் குறித்த பகுதியில் எதுவித மாற்றங்களும் செய்யாமல் தமிழ்மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என மன்று கட்டளை பிரப்பித்துள்ளதுடன் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையினை 22.10.18 அன்று திகதியிடப்பட்டுள்ளதுடன் விகாரை அமைப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள இடைக்கால தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது குமுழமுனை மற்றும் தண்ணிமுறிப்பு செம்மலை,கிராமங்களை சேர்ந்த பெருமளவான மக்கள் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினர்,கிறிஸ்தவ மற்றும் இந்து மதகுருமார்களும் நீதிமன்ற வளாகத்தில் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More