இலங்கை பிரதான செய்திகள் பெண்கள்

எமது பெண்களை மௌனிக்க வைத்து, இன அடக்குமுறையின் மௌனத்தை எவ்வாறு கலைப்பது?

காயத்ரி….

29.09.2018 –
அன்பின் போதநாயகிக்கு,

உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள்!
எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர்களும் உங்கள் இழப்பினால் கவலை மட்டும் அன்றி ஆத்திரமும் கொண்டுள்ளார்கள்.நான் எழுதும் இக்கடிதமும் ஆத்திரம் கலந்த ஆதங்கத்தின் ஒரு வெளிப்பாடே!

உங்களை அறிந்தவர்கள், குறிப்பாக உங்களது தாயார், நீங்கள் தற்கொலை செய்யும் ஒரு பெண்ணல்ல எனத் தெளிவாகக் கூறுகிறார்கள். அதுவே போதும் இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கேள்வி எழுப்புவதை நிறுத்த. அத்தோடு, உங்களை மணம் முடித்து உங்களுக்கு உடலாலும், மனதாலும், நிதி விடயங்களாலும் வன்முறைப்படுத்தியவனின் செயற்பாடுகளே இது ஒரு தற்கொலை அல்ல என்பதைத் தெளிவாக நியாயப்படுத்துகின்றது.

உங்களுக்குப் பல கொடுமைகளையும், வன்முறைகளையும், இழைத்தவன் சமூகத்தில் மதிப்பிற்குரிய ஒருவனாக எவ்வாறு இருக்க முடியும்? இச்சமூகத்தில் இன்னமும் இவ்வாறான வன்முறையாளர்களைக் கொண்;டாடியபடி திரியும் முட்டாள்களை என்ன செய்வது?ஒரு பெண்ணுக்கு மட்டுமல்லாது, அப்பெண்ணில் வளரும் கருவிற்கும் அவன் வன்முறைகள் செய்துள்ளான். எவ்வாறு எம்மால் இன்னமும் இவ்வாறான ஆண்களை மனிதர்களாக மதிக்க முடிகிறது?

எமது சமூகம் இனிமேல் தன்னும் விழித்துக் கொள்ளுமா? இன்னும் எத்தனை போதநாயகிகளை நாம் இழக்கப் போகிறோம்? எத்தனை போதநாயகிகளை நாம் இழந்தாயிற்று….

ஓர் இனத்திற்கு நடந்த அடக்குமுறைகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் ஏலவே அதே இனத்தவர்களால் அடக்குமுறைகளுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகங்கள் விடுதலை பெற வேண்டும். பெண்கள் விடுதலை அவற்றில் ஒன்று. ஒடுக்கப்பட்டோர் சமூகங்களின் விடுதலை இன்னுமொன்று. இனவிடுதலையைக் கேட்பவர்களே தங்களது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி தமது இனப் பெண்களை வன்முறைப்படுத்தும் போது, அவர்கள் கேட்கும் இனவிடுதலை அர்த்தமற்றுப் போகிறது. இனவிடுதலைக்கான மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் இவ்வாறு வலுவிழக்கப்படுவதை நாம் அனுமதிக்கலாமா? நீதி மற்றும் நேர்மையை விரும்;பும் எந்த சமூகமும் இதற்கு ஒருபோதும் ஒத்துழைக்காது.

ஒரு பெண்ணாக இச்சமூகத்தில் பல சவால்களைச் சந்தித்து நீங்கள் வெற்றி கண்ட விடயங்கள் உங்களது ஆளுமையையும், தன்னம்பிக்கையையும் காட்டுகின்றன. ஆனால், உங்களைப் போன்ற ஆளுமை மிக்க பெண்களை அடிமைப்படுத்துவதற்கு கல்யாணம் என்ற பந்தத்தால் பெண்களது வாழ்வில் உள்வரும் ஆண்கள் மற்றும் அவர்களுக்கு எமது சமூகம் அங்கீகரித்துக் கொடுக்கும் ஆணாதிக்கம் இன்னமும் பலரால் நிராகரிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையைக் கொடுக்கின்றது.

உங்களுக்கு நடந்த வன்முறைகளை ஒரு நெருங்கிய தோழியுடன் தன்னும் பகிர முடியாத நிலையையே அந்தக் கல்யாண பந்தம் கொடுத்துள்ளது. இந்நிலைதான் எமது சமூகங்களில் வாழும் பல பெண்களுக்கு! தாங்கள் சம்பாதித்து, குடும்பத்தையும் காப்பாற்றி, அடி மற்றும் இன்னபிற வன்முறைகளுக்கும் ஆளாக்கப்பட்டு இருந்தும் தமக்கு நடக்கும் கொடுமைகளை வெளிப்படுத்த முடியாதபடி பல பெண்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள். ஆணாதிக்கத்தின் கொடூரமான வெளிப்பாடுகளில் ஒன்றே இந்நிலை. இதனால் பெண்கள் மட்டுமல்ல முழுச் சமூகமுமே பாதிக்கப்படுகின்றது என்பதை நாம் எப்போது விளங்கிக் கொள்ளப் போகிறோம்?

போதநாயகி, உங்களது மரணமும், இழப்பும் இச்சமூகத்திற்கு விழுந்திருக்கும் இன்னுமொரு அடி! ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்புகளும், பெண்கள் இன்னமும் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க முடியாத சூழலுமே இந்த அடியின் அடிப்படை. நாளாந்தம் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக நடக்கும் வன்முறைகளையும், கொடுமைகளையும் பார்க்கும், கேட்கும், வாசிக்கும் சமூகங்களாகவே நாம் இருக்கின்றோம். வெளியில் தெரிய வருபவை பத்து வீதத்திற்கும் குறைவானவையே எனக் கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. நீங்கள் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறீர்கள் என்பது ஆரம்பத்திலேயே தெரிய வந்திருந்தால், இன்று உங்களை இழக்க நேர்ந்திராது என்ற எண்ணமே எனது ஆதங்கத்தின் அடிப்படை. உங்களைப்போல ஆளுமைமிக்க பல நபர்களை பல்கலைக்கழக படிப்பினூடாக உருவாக்கியிருப்பீர்கள். எமது சமூகத்தின் இழப்பு தனிநபர் இழப்பையும் தாண்டி நிற்பது வேதனை. இதுபற்றிய சிந்தனை எதுவுமில்லாது உங்களுக்கு வன்முறை இழைத்த அவனைக் கொண்டாடும் இச்சமூகத்தில் ஆத்திரமடைகிறேன். எப்போதுதான் இது மாறப்போகிறது?

பெண்கள் விடுதலையும், ஒடுக்கப்படும் பிற சமூகங்களின் விடுதலைகளும் நம்மில் சிலர் காணும் கனவாகவே போய் விடுமோ என்ற பயம் எமது இருப்பையே கேள்விக்குள்ளாக்க வைக்கிறது. இதுவும் கடந்து போகும் என எத்தனை தடைவைதான் கூறுவது?

எந்தவிதமான சுயவிமர்சன ரீதியான பார்வைகளும் இல்லாமல் தமிழ் இன விடுதலைக்காகக் குரல் கொடுப்பவர்களைப் பார்க்கக் கேவலமாக உள்ளது. எமது பெண்களை வன்முறைக்குள்ளாக்கி மௌனிக்க வைத்துவிட்டு இன அடக்குமுறையின் மௌனத்தை எவ்வாறு கலைப்பது?

போதநாயகி, உங்களது மரணமும், உங்களைப் போன்ற பல பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணமும் மேலும் மரணிக்காது இன்னும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களின் அனுபவங்களும் இனியாவது பெண்களுக்கெதிரான வன்முறைகள் சார்ந்த மௌனத்தைக் கலைத்தெறிய வேண்டும் என சமூகத்திடம் கேட்டுக் கொள்கிறேன். அத்தோடு உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இச்சமூகம் போராடும் என்ற நம்பிக்கையோடு இக்கடிதத்தை முடிக்கிறேன்.
அன்பு கலந்த கவலையுடனும், ஆதங்கத்துடனும், நம்பிக்கையுடனும்…

காயத்ரி.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link