இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

அரசியல் கைதிகளும் தமிழ் அரசியலின் இயலாத்தனமும் – நிலாந்தன்

 
அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியற்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய அதே காலப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழமுதம் என்ற பெயரில் ஒரு தமிழ் விழாவை விமரிசையாகக் கொண்டாடியது. அவ்விழாவிற்கு நிதி அனுசரணை செய்தவர்களுள் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் பத்திரிகையின் நிர்வாக பணிப்பாளரும் ஒருவர். ஐம்பதாயிரம் ரூபா நிதியுதவி வழங்கிய இவர் கூட்டமைப்பின் கனடா அணியைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு அரசியற்கைதிகள் போராடிய போது அதில் யாழ் பல்கலைக்கழகமும் பங்குபற்றியது. கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதியாக அருட்தந்தை சக்திவேல் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ‘நாங்கள் தலையிட்டால் அது உச்சக்கட்டப் போராட்டமாக இருக்க வேண்டும்’ என்று மாணவர்கள் கூறினார்கள். முடிவில் மாணவப் பிரதிநிதிகளும், சில அரசியல்வாதிகளும் சிறைச்சாலைக்குப் போனார்கள். அரச தரப்பைச் சேர்ந்த அங்கஜன் வழங்கிய வாக்குறுதிகளையடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்கள். ஆனால் கைதிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தமது விசாரணையை அநுராதபுரத்திற்கு மாற்றக்கூடாது என்று கேட்ட கைதிகளுக்கு மட்டும் சிறு பரிகாரம் கிடைத்தது. மற்றும்படி கைதிகள் மறுபடியும் போராட வேண்டிய நிலமையே தொடர்ந்தது.

கடந்த ஆண்டு அவர்களுக்கு வாக்குறுதி வழங்கிய அங்கஜன் இப்பொழுது அமைச்சராக இருக்கிறார். அவரோடு போன மாணவர்கள் தமிழ்விழாக் கொண்டாடியிருக்கிறார்கள்.இத்தனைக்கும் கைதிகளில் ஒருவர் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சகோதரன் ஆவார். இது பற்றி தமக்கு பின்னரே தெரியவந்தது என்றும் அதற்கு முன்னரே விழா ஒழுங்குகள் செய்யப்பட்டு விட்டதாகவும் மாணவர்கள் கூறுகிறார்கள். மாணவர்கள் விழா கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் தாங்கள் தொடங்கிய ஒரு போராட்டத்தில் அதன் உச்சக்கட்டம் வரை போய் அதற்கு ஒரு தீர்வு காண வேண்டிய பொறுப்பு அவர்களுக்குண்டு. போராடுவது என்பது தெட்டம் தெட்டமாக இடைக்கிடை செய்யப்படும் ஒரு தேநீர் விருந்து அல்ல. அது தொடர்பில் ஒரு சரியான அரசியல் தரிசனமும் வழிவரைபடமும் இருக்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களிடம் அது உண்டா?
மாணவரிடம் மட்டுமல்ல. தமது அரசியல்வாதிகளிடமும் அது உண்டா என்று கேட்க வேண்டும். கைதிகள் போராடும் போது அரசியல்வாதிகளும் சேர்ந்து போராடுகிறார்கள். அவர்களே வாக்குறுதிகளை வழங்கி போராட்டத்தை முடித்து வைக்கிறார்கள். ஆனால் ஒரு தீர்வும் கிடைப்பதில்லை. இப்படியாக சீசனுக்கு சீசன் கைதிகளுக்காகப் போராட வேண்டிய ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது? தமிழத் தலைவர்களே அதற்குப் பொறுப்பு.

கடந்த ஏப்பிரல் மாதம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வரப்பட்ட போது கூட்டமைப்பு அதற்கு எதிராக வாக்களித்தது. அதன் போது பத்து அம்சக் கோரிக்கைகளை கூட்டமைப்பு ரணிலிடம் முன்வைத்தது. அதில் கைதிகள் தொடர்பான கோரிக்கையும் உண்டு. அதன் பின் யூலை மாதம் 17ம் திகதி அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்பந்தரைச் சந்தித்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை என்பதனை சம்பந்தருக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.

யூலை மாதம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு சம்பந்தரைச் சந்தித்த போது விரைவில் அரசுப் பிரதானிகளை தான் சந்திப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் கைதிகள் போராடும் வரை இது தொடர்பான உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களின் பின்னரே கூட்டமைப்பு அரசுப்பிரதானிகளை சந்தித்திருக்கிறது. கடந்த புதன் கிழமை இது தொடர்பில் அரசுத் தலைவரோடு கூட்டமைப்பு பேசக்கூடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பேச்சு வார்த்தை நடக்கவில்லை.

இப்பொழுது சம்பந்தரும் சுமந்திரனும் கூறுகிறார்கள் இது விடயத்தில் ஓர் அரசியல் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று, இப்படியொரு முடிவை எடுக்க வேண்டும் என்று அருட்தந்தை சக்திவேல் சில ஆண்டுகளாக கூறிவருகிறார். நான் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். கூட்டமைப்பு இப்படியொரு முடிவை எடுக்க ஒன்பது ஆண்டுகள் எடுத்திருக்கிறது.
சரி அந்த அரசியல் தீர்மானம் எது? கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதா? அல்லது சுமந்திரன் கூறுவது போல மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதா? அல்லது புனர்வாழ்வின் பின் விடுதலை செய்வதா?;. இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவ்வாறான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அரசியற் கைதிகள் என்றால் அவர்கள் சாதாரண கைதிகள் அல்ல. அதிலிருக்கும் அரசியல் என்ன என்பதே இங்கு முக்கியம். அவர்கள் தமது மக்களுக்காக மேற்கொண்ட அரசியற் செயற்பாடுகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள். அவர்களுடைய அவ்வரசியற் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதம் என்று முத்திரை குத்துகின்றது. அச்செயற்பாடுகளை விசாரித்துத் தண்டிப்பதற்கென்று அபகீர்த்தி மிக்க குரூரமான ஒரு சட்டமாகிய பயங்கரவாத தடைச்சட்டத்தையும் வைத்திருக்கிறது. 2015ல் இப்போதுள்ள கூட்டரசாங்கம் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய ஐ.நாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தின்படி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அனைத்துலக நியமங்களுக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு மாற்றி எழுதப்பட்ட சட்டத்தை சுமந்திரனே ஏற்றுக்கொள்ளவில்லை. அச்சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்ற ஒரு தகவலும் உண்டு.

இவ்வாறானதோர் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, விசாரிக்கப்படுகின்ற, விசாரிக்கப்படாத, தண்டிக்கப்பட்ட அரசியற் செயற்பாட்டாளர்களையே இங்கு அரசியற் கைதிகள் என்று அழைக்கப்படுகிறது. தமது மக்களுக்காக அவர்கள் மேற்கொண்ட அரசியற் செயற்பாடுகளை பயங்கரவாதத் தடைச்சட்டமானது குற்றமாகக் கருதுகிறது. எனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஏற்றுக்கொண்டு அரசியற்கைதிகளை விடுவிக்க முடியாது. அதாவது இலங்கைத்தீவின் சட்ட வரம்பிற்குள் நின்று இப்பிரச்சினையை தீர்க்க முடியாது. அதை ஒரு சட்ட விவகாரமாக அணுக முடியாது. மாறாக பயங்கரவாதமாகக் கருதப்படும் அரசியலில் உள்ள நியாயத்தின் அடிப்படையில் அதை ஓர் அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். தீர்க்கவும் வேண்டும். கைதிகளின் விடயத்தில் அரசியற் தீர்மானம் எடுப்பது என்பது இதுதான். அதாவது கைதிகளின் அரசியலை நியாயப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தை அவர்களை விடுதலை செய்யுமாறு நிர்ப்பந்திப்பது. அரசாங்கம் அவர்களை விடுதலை செய்வது என்ற தீர்மானத்தை எடுக்குமாறு தூண்டுவது.

இது விடயத்தில் கைதிகளுக்கு பொது மன்னிப்பைக் கேட்பதோ அல்லது புனர்வாழ்வைக் கேட்பதோ கோட்பாட்டு ரீதியாகத் தவறானது. அப்படிக் கேட்டால் அவர்களுடைய அரசியற் செயற்பாடுகளை தமிழ் தலைவர்களே குற்றம் என்று ஒப்புக்கொண்டதாகிவிடும். ஆனால் சம்பந்தர், சுமந்திரனின் அண்மைக்காலக் கூற்றுக்களை எடுத்துப் பார்த்தால் அவர்கள் மன்னிப்பைக் கேட்கும் ஓர் அரசியல் தீர்மானத்தைத்தான் கருதுவது போலத் தெரிகிறது. இது விடயத்தில் அவர்கள் விசுவாசமாக இல்லை. என்பதனால்தான் கடந்த ஒன்பதாண்டுகளுக்கு மேலாக பிரச்சினை இழுபடுகிறது. பல மாதங்களுக்கு முன்பு தன்னைச் சந்தித்த அரசியற் கைதிகளிடம் திறப்பு என்னிடம் இல்லை என்று சம்பந்தர் கூறியதை இங்கு நினைவு கூரலாம்.

இவ்வாறு மன்னிப்புக் கோருவதற்கு தலைவர்கள் தேவையில்லை. தமது தரப்புக் கைதிகளுக்கு மன்னிப்பைக் கோரும் தலைவர்கள் எப்படிப் பட்டவர்கள்? அப்படி ஒரு மன்னிப்பை அவர்கள் ஏன் கேட்க வேண்டும்? கைதிகளே கேட்கலாம். ஏற்கெனவே சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் புலிகள் இயக்கத்தவர்கள் பலரும் அவ்வாறு மன்னிப்பைக் கோரி புனர்வாழ்வைப் பெற்றிருக்கிறார்கள். புனர்வாழ்வு என்பதன் பொருள் ஏற்கெனவே வாழ்ந்த வாழ்க்கை தவறானது என்பதாகும். அவ்வரசியல் வாழ்க்கையில் மேற்கொண்ட குற்றச் செயல்களுக்காக மனந்திருந்தி சமூகத்தோடு இணைவதற்கான பயிற்சியே புனர்வாழ்வாகும். அதாவது புலிகள் இயக்கத்தின் ஆயுத மற்றும் அரசியற் செயற்பாடுகளை குற்றம் என்று ஏற்றுக்கொண்டு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கடிதம் ஒன்றில் கையொப்பமிடல் வேண்டும்.

ஆனால் புனர்வாழ்வு பெற்ற பின்னரும் நிம்மதியாக இருக்க முடியாது. அவர்களுடைய தலைக்கு மேல் ஒரு கத்தி சதா தொங்கிக்கொண்டேயிருக்கும். ஏனெனில் புனர்வாழ்வு எனப்படுவது ஒரு தண்டனை அல்ல என்று வவுனியாவில் தீர்ப்பளிக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை விரிவுரையாளர் ஒருவர் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டு தற்பொழுது ஆயுள் தண்டணைக் கைதியாக சிறையில் இருக்கிறார். எனவே பொது மன்னிப்பு, புனர்வாழ்வு இரண்டுமே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை குற்றமாகப் பார்க்கின்றன.

ஆனால் இந்தக் கோட்பாட்டு விளக்கங்களைக் கைதிகளோடு கதைக்க முடியாது. அவர்கள் பல ஆண்டுகளாக குடும்பங்களைப் பிரிந்து வாழ்கிறார்கள். எவ்வாறான அரசியற் செயற்பாடுகளுக்காக அவர்கள் விசாரிக்கப்பட்டார்களோ அல்லது தண்டிக்கப்பட்டார்களோ அவ்வாறான அரசியற் செயற்பாடுகளை செய்யுமாறு அவர்களுக்கு கட்டளையிட்ட பலரும் இப்பொழுது வெளியே வந்துவிட்டார்கள். வெளிநாடு சென்று விட்டார்கள். அவர்களில் சிலர் முன்னைய அரசாங்கத்தோடு இணங்கிச் செயற்பட்டு அமைச்சர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இப்பொழுதும் அரச படைகளின் பாதுகாப்போடு திரிகிறார்கள். ஆனால் உத்தரவுகளை நிறைவேற்றிய கீழ்மட்டத்தினர் சிறையில் வாடுகிறார்கள். அவர்களுடைய பிரச்சினை இப்பொழுது எப்படியாவது வெளியே வருவது என்பதுதான்.

புனர்வாழ்வு ஒரு பொறியாக இருந்தாலும் கூட அதுவே உள்ளதில் இலகுவான வழியாகவும் அவர்களுக்குத் தெரிகிறது. 2009 மேக்குப் பின் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களும் அப்படிக் கருதித்தான் புனர்வாழ்வை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய வழக்கறிஞர்கள் அவர்களுக்கு அப்படித்தான் ஆலோசனை கூறினார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குக் கீழ் வழக்காடுவதில் உள்ள இடர்களைக் கவனத்தில் கொண்டே வழக்கறிஞர்கள் கைதிகளுக்கு அவ்வாறு கூறியிருக்கிறார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு சட்டக் கட்டமைப்புக்குள் அதைவிட்டால் வேறு வழியில்லை என்று கைதிகள் கருதுகிறார்கள். என்றபடியால் தான் இம்முறை கைதிகள் நடைமுறைச் சாத்தியமானது என்று கருதப்படும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். குறுகியகால புனர்வாழ்வின் பின் தம்மை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

அப்படிக் கைதிகள் கேட்பது வேறு மக்கள் பிரதிநிதிகள் அல்லது தலைவர்கள் கேட்பது வேறு. தலைவர்கள் மன்னிப்பைக் கேட்க முடியாது. வேண்டுமானால் கைதிகள் கேட்கலாம். தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமக்கு வாக்களித்த மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராட வேண்டும், பேரம் பேச வேண்டும். அரசாங்கத்திற்கும், அனைத்துலக சமூகத்துக்கும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

ஆனால் கைதிகள் போராடத் தொடங்கியதால்தான் இப்பொழுது தலைவர்கள் அரசாங்கத்தோடு பேசுகிறார்கள். தாங்களாக அவர்கள் அதை முன்னெடுக்கவில்லை. வாக்களித்த பாதிக்கப்பட்ட மக்களே அவர்களுக்கு அவர்களுடைய வாக்குறுதிகளை ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களே தொடர்ந்தும் போராட வேண்டியிருக்கிறது. அவர்களுடைய வாக்குகளைப் பெற்று அதனால் கிடைத்த கொழுத்த சம்பளம், சொகுசு வாகனம், வெளிநாட்டுப் பயணம், சிறப்புச் சலுகைகள், ஆளணி போன்ற எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் தலைவர்கள் தாங்களாகப் பேச மாட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களே போராடி அவர்களை உந்தித் தள்ள வேண்டியிருக்கிறது.

இது தொடர்பில் கடந்த புதன்கிழமை அரசுத் தலைவரோடு பேசவிருப்பதாக கூட்டமைப்பு கூறியது. விக்னேஸ்வரனால் நிராகரிக்கப்பட்ட வட – கிழக்கு அபிவிருத்திக்கான அரசுத்தலைவரின் செயலணிக் கூட்டம் அன்று நடந்தது. அக் கூட்டத்தின் பின் கைதிகள் தொடர்பாக அரசுத்தலைவரோடு பேசலாம் என்று கூட்டமைப்பு எதிர்பார்த்தது. ஆனால் சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலான கூட்டத்தால் களைப்படைந்த அரசுத் தலைவர் கைதிகள் தொடர்பாகப் பேசுவதற்கு வேறொரு நாளை ஒதுக்கித் தருவதாகக் கூறியிருக்கிறார். கைதிகள் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் அவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படும் ஒவ்வொரு நாளும் கைதிகளுக்கு உயிராபத்;தே.
இதற்கு முன் நடந்த எந்தவோர் உண்ணாவிரதத்திலும் கைதிகள் உயிரிழக்க முன் யாராவது ஓர் அரசியல்வாதி வந்து ஏதாவது ஒரு வாக்குறுதியைத் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார் என்று நம்பும் ஒரு நிலமையே காணப்பட்டது. அதாவது உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்கும் ஓர் எல்லை வரை போராடுவதற்கு கைதிகள் தயாரில்லை என்று அரசாங்கம் நம்புகிறது. இதனால் நிலமையை எப்படியும் சமாளிக்கலாம் என்று நம்பத்தக்க ஒரு கடந்த கால அனுபவமே அரசாங்கத்திற்கு உண்டு. இதை இப்படி எழுதுவதுன் மூலம் இக்கட்டுரையானது கைதிகளைச் சாகச் சொல்லிக் கேட்கவில்லை. ஐந்தாமாண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் அவர்கள் சாகக்கூடாது. மாறாக அரசியற் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் மாணவர்களும் தான் உச்சக்கட்ட அர்ப்பணிப்போடு போராட முன்வர வேண்டும். ஆனால் அதற்கு எந்தக் கட்சி தயார்? நேற்று முன்தினம் அனுராதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய தமிழர்களில் பலர் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.நிபந்தனையற்ற விடுதலை என்ற கோரிக்கை பலமாக முன்வைக்கப்படவில்லை. அப்படியென்றால் கைதிகளுக்கு என்ன தீர்வு? காணாமல் ஆக்கப்படடவர்களுக்கான போராடத்தைப் போல காணிகளை மீட்பதட்கான போராடத்தைப் போல அரசியல் கைதிகளின் போராட்டமும் இழுபடப் போகிறதா?

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers