இலங்கை பிரதான செய்திகள் புலம்பெயர்ந்தோர்

ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது…


இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை உயர்தானிகர் ஒருவர் வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே பிரித்தானிய காவற்துறை இவர்களை கைது செய்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரித்தானியாவுக்கு வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று இரவு 8 மணிக்கு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றினார். இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை ஏந்தியவாறு, “தமிழின படுகொலை சிங்கள பிரதமரே வெளியேறு” என்றவாறு கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை அங்கு வந்திருந்த இலங்கை உயர்தானிகர் ஒருவர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவற்துறையினருக்கு பயங்கரவாதிகளின் கொடியினை ஏந்தியுள்ளார்கள் என்ற தகவலை வழங்கியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் புலிக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை, பிரித்தானிய காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மாலை 19.00 மணிமுதல் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இனப்படுகொலை புரிந்த இலங்கை இராணுவத்தினரை யுத்தக்குற்றசாட்டிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாத்து வருகிறார்.

நாட்டின் பிரதமர் என்றவகையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது, அது குறித்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனம் காத்துவருகிறார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இதுவரையில் எந்தவொரு தீர்வினையும் வழங்கவில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் அங்கு தனது உரையின் போது ‘ 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்கள் எவரும் உயிருடன் இல்லை என தெரிவித்திருந்தார்.

சரணடைந்தவர்கள் உயிருடன் இல்லையெனில் அவர்கள் கொல்லப்பட்டார்களா? அல்லது என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் ரணில் எந்தவொரு கருத்தையும் சொல்வதை தவிர்த்து வருகிறார்.

என்ற குற்றச்சாட்டுக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினர் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் ரணிலுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்காளல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.