இலங்கை பிரதான செய்திகள்

முச்சக்கர வண்டியில், தாம் கடத்திய யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவி என்கிறார் இளைஞர்…

2ஆம் இணைப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழில். முச்சக்கர வண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் , குறித்த முச்சக்கர வண்டி சாரதியை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ். செம்மணி பகுதியில் வைத்து யுவதி ஒருவர் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதன் பிரகாரம் யுவதி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முச்சக்கர வண்டியின் பதிவிலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த முச்சக்கர வண்டி நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடையது என கண்டறிந்து , அந்த இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.

அதன் போது தொடர்புடைய இளைஞன் , தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் , அதனால் செம்மணி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அழைத்து சென்றதாகவும் , அதன் போது வருத்தம் குணமடையாது அவரது நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவரை கட்டி முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றதாகவும் காவற்துறையினரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்துள்ளார். காவற்துறையினர் அந்த இளைஞனனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்.செம்மணியில், யுவதி ஒருவர், முச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்களால் கடத்தப்பட்டார்…

Oct 16, 2018 @ 10:16

யாழில்.முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்று உள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது,  யாழ்.செம்மணி பகுதியில் (யாழ்.வளைவுக்கு) அருகில் வைத்து வீதியால் சென்ற யுவதியை முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்கள் கடத்தி சென்றுள்ளனர். அதனை வீதியில் சென்றவர்கள் அவதானித்து முச்சக்கர வண்டியினை மடக்கி பிடிப்பதற்கு துரத்தி சென்றவேளை, கடத்தல்கார்கள் முச்சக்கர வண்டியில் மிகவேகமாக பயணித்து உள்ளனர்.

ஆடியபாதம் வீதி ஊடாக மிக வாகன நெரிசல்கள் அதிகமான கல்வியங்காட்டு சந்தி , மற்றும் திருநெல்வேலி சந்தி உள்ளிட்ட பகுதிகள் ஊடாக மிக வேகமாக பயணித்துள்ளனர். அவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்தவர்களும் தொடர்ந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு அவர்களை பின்தொடர்ந்த வேளை, யாழ்.மருத்துவ பீட வளாகத்திற்கு முன்பாக கடத்தி செல்லப்பட்ட பெண்ணின் ஆடையினை கழட்டி எறிந்து உள்ளனர்.

அதனால் முச்சக்கர வண்டியை பின் தொடர்ந்து சென்றவர்கள் அதற்கு மேல் தொடர்ந்து செல்லாது அவ்விடத்தில் நின்றுள்ளனர். அதன் பின்னர் முச்சக்கர வண்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை குறித்த முச்சக்கர வண்டி நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடையது என கண்டறியப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.