Home இந்தியா #MeToo: ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்!பெருந்தேவி… 3 பகுதிகள் இணைப்பு..

#MeToo: ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்!பெருந்தேவி… 3 பகுதிகள் இணைப்பு..

by admin

#MeToo ஹேஷ்டேக் அடையாளத்தோடு இன்று ஒரு புயல் வேக இயக்கம் சமூக வலைதளத்திலும் ஊடகத்திலும் தமிழகத்தில் மையம்கொண்டிருக்கிறது. இது தேநீர்க் கோப்பைப் புயல் அல்ல. சமூகப் பண்பாட்டுத் தளத்தில் அதிகாரம் மிக்க நபர்களால் பெண்களும் குழந்தைகளும் (ஏன் சில ஆண்களும்கூட) முன்னர் பாதிக்கப்பட்டது உண்டா, அதைப் பொதுவெளியில் பகிர்ந்தது உண்டா என்றால் நிச்சயம் உண்டு. உடனடியாக நினைவுக்கு வருவது எழுத்தாளர் அனுராதா ரமணன் காஞ்சிபுர சங்கர மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி அவரிடம் முறைகேடாக நடந்துகொண்டது பற்றி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தது.

2004இல் ஜெயேந்திர சரஸ்வதி, சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவுடன், அவரது பாலியல் அத்துமீறல்களைப் பெண்கள் முன்வந்து தெரிவித்தார்கள். அப்போது, அனுராதா ரமணனும் சில வருடங்களுக்கு முன் சங்கர மடத்தில் பத்திரிகை ஒன்று தொடங்கப்போவதாக தன்னை அழைத்த ஜெயேந்திரர் தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டதாகத் தெரிவித்தார். தமிழகக் காவல் துறையிடம் வாக்குமூலமும் அளித்தார். ஆனால், இந்த வாக்குமூலத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக, அனுராதா ரமணனுக்கு நியாயம் கிட்டியதாகத் தெரியவில்லை. மக்கள் மத்தியில் தற்காலிகக் கவனம் என்பதோடு அவர் பகிர்வு நின்றுபோனது.

திறந்திருக்கும் நீதியின் பாதை

அனுராதா இன்று உயிரோடு இருந்திருந்தால் ஒருவேளை தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து #MeTooவில் எழுதியிருக்கலாம். நடிகர் தனுஸ்ரீ தத்தாவுக்கு நீதியை நோக்கிய பாதையில் நடக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பு அவருக்கும் கிட்டியிருக்கலாம்.

பல வருடங்களுக்கு முன்பு (2008) புகழ்பெற்ற நடிகர் நானா படேகர் படப்பிடிப்பொன்றில் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டது குறித்து தனுஸ்ரீ குற்றம்சாட்டியிருக்கிறார். தனுஸ்ரீயோடு நெருங்கி நடிக்கும் வகையில் பாடல் – நடனக் காட்சிகளை வடிவமைக்கக் கோரிய படேகரை எதிர்த்து அவர் முறையிட்டது இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் யாராலும் காதில் வாங்கிக்கொள்ளப்படவில்லை. சொல்லப்போனால் நடன இயக்குநர் படேகரின் கோரிக்கையே ஏற்று நடனக் காட்சியை அமைக்கப் பார்த்தார்.

தனுஸ்ரீயின் மனக் கொந்தளிப்பு பொதுவெளிக்கு வந்தது. ஆனால், படேகரின் நடிப்புத் தொழில் வாழ்க்கையில் சிறு பாதிப்பையும் அது ஏற்படுத்தவில்லை. ஆனால், இன்று #MeToo இயக்கம் வேகம்பெற்றிருக்கும் தருணத்தில் மீண்டும் தன் குற்றச்சாட்டை முன்னெடுத்திருக்கிறார் தனுஸ்ரீ. #MeToo காரணமாக விளைந்த சமூக அழுத்தத்தால் ஒருவழியாக இப்போதுதான் படேகர் மீது காவல் துறை எஃப்ஐஆர் பதிந்திருக்கிறது. அதாவது அத்துமீறல் நடந்த பத்து வருடங்கள் கழித்து. #MeTooவின் ஒரு வெற்றி இது எனலாம்.

தொடரும் அம்பலங்கள்

வேறு பலருக்கும் இந்த இயக்கம் நீதியின் பாதையைத் திறந்துவிட்டிருக்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டின் சீனியர் எடிட்டரான கே.ஆர்.ஸ்ரீனிவாஸ் பதவி விலகியிருக்கிறார். அவரால் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பத்திரிகையாளர் சந்தியா மேனன் #MeToo ஹேஷ்டாக்கில் பகிர்ந்தவுடன் வேறு பல பெண் பத்திரிகையாளர்களும் பகிர்ந்துகொண்டார்கள். விளைவு அவர் விலகல்.

இதேபோல ஹிந்துஸ்டான் டைம்ஸ் நாளிதழின் தலைமைப் பொறுப்பு வகித்த பிரஷாந்த் ஜாவும் பதவி விலகியிருக்கிறார். சென்ற ஆண்டு #MeToo ஹேஷ்டேக் சார்ந்த பெண்கள் பகிர்வுகளால் மியூசிக் அகாடமியின் காரியதரிசியாக இருந்த பப்பு வேணுகோபால ராவ் பதவி விலகினார்.

பத்திரிகையாளரும் வெளியுறவுத் துறை இணையமைச்சருமாக இருக்கும் எம்.ஜே.அக்பரின் பாலியல் தொல்லைகள் பற்றி ஒன்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் தற்போது, குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அவர் பதவி விலக அழுத்தம் தரப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு திரைக் கலைஞர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் தங்களிடம் அத்துமீறல் செய்ததாகப் பெண்கள் தொடர்ந்து ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திரைப்படப் பாடலாசிரியரான வைரமுத்து, பாடகர் கார்த்திக், கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் ஓ.எஸ்.தியாகராஜன், சசிகிரண், டி.என்.சேஷகோபாலன் முதலானோரின் பாலியல் அத்துமீறல்கள் பற்றிய ட்விட்டர் பகிர்வுகள் காணக் கிடைக்கின்றன. தமிழ்நாடு பிராமண சங்கத் தலைவர் நாராயணனின் பாலியல் அத்துமீறல்களைப் பற்றியும் பெண்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

#MeToo இயக்கத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன?

பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்களும் அனுபவக்கதைகளும் இணையத்தை, பொதுவாக ஊடகத்தையே நிறைத்திருக்கின்றன. #MeToo இயக்கம் இந்த அளவுக்குச் செயல்வேகம் பெற்றிருப்பதன் காரணம் இந்தப் பயன்பாட்டில் உள்ள உம்மை. #MeToo‘எனக்கும்’ எனும்போது வேறொருவருக்கும் இது நடந்திருக்கிறது என்ற பொருள் அதில் தொக்கி நிற்கிறது. ‘எனக்கு’ என்பது முன்வைக்கும் தனக்கான இடம், ‘எனக்கும்’ எனும்போது பலருக்கும் ஆனதாக மாறுகிறது. பலருக்கும் என்பதாகும்போது ஒன்றிப்பு (solidarity) என்பதற்கான இடமாகவும் உம்மை இருக்கிறது. பதின்மூன்று வருடங்களுக்கு முன்பே, இந்தப் பயன்பாட்டின் மூலமாக இத்தகையச் சகோதரித்துவ ஒன்றிப்பை மக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தவர் தாரனா புர்கே. சிவில் உரிமைகளுக்காகப் போராடிவரும் அமெரிக்கக் கறுப்பினத்தவரான புர்கே வழிநடத்திய களப்பணியாளர்களின் குழுவின் பெயர் “Me too.”

பாலியல் கொடுமைகளை, தாக்குதல்களை எதிர்கொண்ட கறுப்பின இளம் பெண்களுக்காக அலபாமா உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் பெயரில் பயிலரங்குகளை அவர் நடத்தியிருக்கிறார். பெண்களின் பரஸ்பர ஆதரவு, பாதுகாப்பு வெளிகள் ஆகியவற்றை முதன்மைப்படுத்தியது அவர் குழு. “Empowerment through empathy,” – “ஒத்த புரிவுணர்வின் மூலம் அதிகாரம் பெறுதல்” என #MeToo பயன்பாட்டைக் குறித்து அவர் அழகாக விளக்குகிறார். ஒன்றிப்பு, ஒருமித்த புரிவுணர்வு எனும்போது பன்மை வலியுறுத்தப்படுகிறது.

பின்னர் 2017ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் அமெரிக்காவில் #MeTooவின் இரண்டாம் அலை பொதுவெளியில் சூடுபிடிக்கத் தொடங்கியது. முன்னாள் அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளரான ஹார்வே வெய்ன்ஸ்டீன் (Harvey Weinstein) செய்த பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட வன்முறையை எண்பதுக்கும் மேல் எண்ணிக்கையிலான பெண்கள் அம்பலப்படுத்தினார்கள். ஆனால், இந்த எதிர்ப்பியக்கத்தின் தலைமை எனத் தவறாக அலிசா மிலனோ (Alyssa Milano) என்ற பெண் நடிகர் சுட்டிக்காட்டப்பட்டார். தவிர, அலிசா, புர்கேயின் பெயரை, பங்களிப்பை அறிந்திருக்கவில்லை, ஊடகத்தில், சமூக வலைதளத்தில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத புர்கேயின் அடக்கத்தை இது காட்டுகிறது என்று நாம் கொள்ளலாம்.

இந்த ஹேஷ்டாக்கைப் பயன்படுத்தி அதிகாரம் மிக்க ஆண்களின் வன்முறையை அம்பலப்படுத்தியதால் அலிசாவை நட்பு என்று புர்கே குறிப்பிட்டார். அதே நேரத்தில், #MeToo பயன்பாடு அலிசாவைப் பற்றியது அல்ல, அப்படி இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். அலிசாவையோ, வேறு யாரையோ தலைமை / தலைவர் என்று யாரும் குறிப்பிடும்போது, கறுப்பினப் பெண்களின், குறிப்பாக புர்கேயின் உழைப்பு அழிக்கப்படுகிறது என்பது முக்கியமாகச் சுட்டப்பட வேண்டியது. புர்கேயும் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் #MeToo இயக்கம்

இந்தியாவைப் பொறுத்தவரை, சென்ற வருடம் அக்டோபர் மாதம் #MeToo ஹேஷ்டாக்கை அமெரிக்காவில் சட்டம் பயிலும் தலித் மாணவர் ரயா சர்க்கார் அறிமுகப்படுத்தினார். இந்தியக் கல்விப் புலத்தில் பாலியல் துன்புறுத்தல்களைச் செய்த, செய்யக்கூடிய கல்வியாளர்கள் பெயர்கள் இடம்பெற்ற பட்டியலை (“The List”) அவர் முகநூலில் பகிர்ந்தார். நமக்கு அறிமுகமான சில பெயர்களும் அதில் உண்டு. பாதிக்கப்பட்ட பல்வேறு மாணவர்களிடமிருந்து தகவல்கள் திரட்டி ரயாவால் பகிரப்பட்டது அந்தப் பெயர்ப் பட்டியல். அவருக்கும் அவர் தோழமைகளுக்கும் கடும் சவாலை அளித்திருக்கக்கூடிய பணி அது. கல்விப் புலத்தைச் சார்ந்தவர்கள் மத்தியிலும் ஆங்கில ஊடகத்திலும் பெரும் கவனம் பெற்றது அந்தப் பட்டியல். ராஜஸ்தானைச் சேர்ந்த சமூகப் போராளியான பன்வாரி தேவியைத் தன் முன்னோடியாக ரயா கருதுகிறார்.

தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை திரையிசைப் பாடகர் சின்மயி, பத்திரிகையாளர் சந்தியா மேனன் போன்றோர் #MeToo ஹேஷ்டாக்கில் அவர்கள் சந்தித்த, மற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை, அத்துமீறல்களை ஒரு பணியாக எடுத்துப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பகிர்வுகளுக்குப் பின்னணியாக மேற்கூறியவர்களின் பங்களிப்பை நாம் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியதும் அங்கீகரிக்க வேண்டியதும் அவசியம்.

(#MeToo இயக்கம் குறித்த பெருந்தேவியின் அலசல் நாளையும் தொடரும்)

கட்டுரைத் தரவுகள்:

https://timesofindia.indiatimes.com/india/Seer-threatened-to-bump-me-off-Tamil-writer/articleshow/940899.cms

https://economictimes.indiatimes.com/magazines/panache/tanushree-dutta-files-police-complaint-against-nana-patekar-ganesh-acharya/articleshow/66105589.cms)

https://www.theguardian.com/world/2018/jan/15/me-too-founder-tarana-burke-women-sexual-assault

https://www.vogue.com/article/me-too-tarana-burke-frustrations-mainstream-twitter-thread

https://www.livemint.com/Leisure/JYk9SoKvaPjeo9nevmUUPO/I-would-like-to-credit-Bhanvari-Devi-for-igniting-the-MeTo.html

சிறப்புக் கட்டுரை: காமத்தின் பேரம்!

சிறப்புக் கட்டுரை: காமத்தின் பேரம்!

பெருந்தேவி

#Me Too இயக்கம் குறித்து நேற்று வெளியான கட்டுரையின் தொடர்ச்சி

சென்ற ஆண்டு (2017) அக்டோபர் மாதத்தில் #Me Too ஹேஷ்டாக், அது பரவலான ஒன்பது நாட்களில் மட்டும் 1.7 மில்லியன் ட்வீட்களில் பயன்படுத்தப்பட்டது. எண்பதுக்கும் மேற்பட்ட உலகநாடுகளிலிருந்து இந்த ட்வீட்கள் வெளிவந்தன. இப்படிப் பரவலாகும் வகையில், இந்தப் போராட்டத்தை பாதிக்கப்பட்டவர்கள் கையிலெடுக்க வேண்டிய தேவை என்ன என்று பார்க்கலாம்.

பாலியல் வன்முறை, அச்சுறுத்தல் போன்றவற்றைச் சந்தித்தவர்களுக்கு இந்தப் போராட்டம் அவற்றைக் கூடுதல் தெளிவோடு யோசித்துப்பார்க்க ஒரு வாய்ப்பைத் தருகிறது. இத்தகைய வெளிப்படுத்தல் மூலம் traumatic எனச் சொல்லத்தக்க அனுபவத்துக்கு ஆற்றுப்படுத்தல் வேண்டுமென நினைப்பவர்களுக்கு அது கிடைக்க சாத்தியம் இருக்கிறது. மேலும், இத்தகைய துயரங்களை அனுபவித்த மற்றவர்களும் இத்தகைய பகிர்வுகளோடு தம்மை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இது தனக்கோ அல்லது தன்னையொத்த ஒரு சிலருக்கு மட்டுமோ நேர்ந்தது, நேர்வது அல்ல என அறிந்துகொள்ளும்போது, தனிப்பட்ட ‘அவமானமும்’ துயரமும் இங்கே இயங்கும் சமூக அமைப்பின், செயற்பாடுகளின் பாரபட்சத்தன்மையால் விளைந்ததெனப் புரிகிறது. (பாரபட்சத்தன்மை என்பது இரு பாலினங்களின் பாரபட்சக் கட்டமைப்பு மட்டுமல்ல, இது பற்றிப் பிறகு.)

அச்சத்தைப் போக்கும் மருந்து

மிக முக்கியமாக, பாதிக்கப்பட்டவர்களின் சொல்லாடலை வெளிப்படுத்த வகைசெய்ததன் வாயிலாக அவர்களின் முகமையை (agency) இந்தப் போராட்டம் அங்கீகரிக்கிறது. இது கூட்டு முகமை (collective agency) என்பதே இங்கே அடிக்கோடிடப்பட வேண்டியது. தான் எதிர்கொண்ட பாலியல் தொல்லையைப் பேசினால் இந்தச் சமூகம் தன்னைத்தான் இழிவாகப் பேசும் என்ற அச்சத்தைக் கூட்டு முகமை நீக்கிவிடுகிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தால் கண்ணகி என்கிற வலுவான புனிதப் பிரதிமத்துக்கு சவால்தரும் வலுவான எதிர்ச்சொல்லாடல் கூட்டு முகமையால் சாத்தியமாகி உள்ளது. பொதுவெளியில் கற்பின் தெய்வமாக, காவியக் கதாநாயகியாகத் தொழப்படுகிற பெண் குறித்த சொல்லாடலுக்கு நேர் எதிராக, ஆண்மையச் சூழலில் கற்பின் சாத்தியமின்மையைப் பல சாதாரணப் பெண்களும் பறைசாற்றும் சொல்லாடல் இது. புனைவுக்கு எதிரான வரலாற்றுத் தருணத்தில் இயங்கும் சொல்லாடல்.

பாதிக்கப்பட்டவர்கள் கொள்கிற அச்சம் அவர்களைப் பற்றியது மட்டுமல்ல; அவர்கள் மன உணர்வு மாத்திரமல்ல. தனக்கோ தன்னைச் சார்ந்தவர்களுக்கோ பொருண்மையான பாதிப்பு நடந்துவிடுமோ என்ற அச்சம். தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டவர், சமூகப் பண்பாட்டு, அரசியல் தளத்தில் அல்லது பணியிடத்தில் உயர் இடத்தில் இருக்கிறார் என்கிறபோது இந்த அச்சம் பாதிக்கப்பட்டவர்களின் வாய்களுக்குப் பூட்டுப்போட்டுவிடுகிறது. அனுராதா ரமணன் சங்கர மடத்து ஆட்களால் மிரட்டப்பட்டதாக, தன் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டதாகத் தன் பேட்டியில் தெரிவித்ததை, அவர் உடைந்துபோனதைப் பதிவு செய்கிறது ஒன்-இந்தியா இணைய இதழ்.

ஒரு முறையோடு நிற்பதில்லை

பல சமயம் இத்தகைய மோசமான அனுபவம், ஒருமுறை நடக்கும் பிறழ்வால் ஏற்படுவதல்ல. ஒருமுறைப் பிறழ்வைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதல்ல நான் சொல்வது. பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிற பலரது நடவடிக்கைகளும் மீண்டும் மீண்டும் ஒருவரிடம் அல்லது பலரிடம் மீள்நிகழ்த்துதலின் வடிவம் கொள்கின்றன. ஆனால், வாழ்க்கையின் குரூர அரங்கத்தில், இந்த மீள்நிகழ்த்துதல்களில் கதாபாத்திரங்களின் இடங்கள் ஒன்றேபோல் இருக்கின்றன.

இதற்கு எடுத்துக்காட்டு எம்.ஜே.அக்பருடன் பணி தொடர்பாகச் சந்தித்த பத்துக்கும் மேம்பட்ட இளம் பெண் பத்திரிகையாளர்களின் அனுபவங்கள். ஒரு கணப்பொழுதிலும் தவறிக்கூட தனது அத்துமீறலுக்கு எதிர்வினையாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் மறுப்பையோ பிடித்தமின்மையையோ ஒரு பொருட்டாக அவர் நினைக்கவில்லை. அவரிடம் பாலியல் தொல்லையைச் சந்தித்த பல பெண்களும் பணிக்காக நேர்காணலுக்கு வந்தவர்கள், அல்லது அவருக்கு அடுத்த நிலைகளில் கீழே பணியாற்றியவர்கள். வேலையும் (career) வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்பதற்காகவே அவர்கள் மௌனமாக இருந்திருக்கிறார்கள். ஊறுபடத்தக்க நிலையில் உள்ளவர்கள் எடுக்கும் நிலைப்பாடு இது. #Me Too அலையில்தான் இதில் பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

பாலியல் அத்துமீறல்களைச் சந்திக்கும் பெண்கள் ஏன் பல ஆண்டுகள் கழித்தும் அவற்றைக் குறித்துப் பேசுவதில்லை என்ற தேய்வழக்கான கேள்விக்கு தன்யா ராஜேந்திரன் போன்ற ஊடகர்களும் ஷாலினி போன்ற மனநல மருத்துவர்களும் விளக்கமாகப் பதில் கூறியிருக்கிறார்கள். எனவே அதிலிருந்து நகர்ந்து பலரும் கேட்கும் வேறு சில கேள்விகளை எடுத்துக்கொள்ளலாம்.

பெண்களுக்குப் பங்கில்லையா?

சில பெண்கள் பாலியல் அத்துமீறல்களைச் சுயதேவைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்களே, தங்கள் பால் அடையாளத்தை, பாலியலை முன்வைத்து அவர்கள் செய்யும் பேரமில்லையா இது, இதை ஏற்காத மற்ற பெண்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதில்லையா இது எனக் கேட்கப்படுகிறது. இங்கே சுயபரிசீலனை செய்துகொண்டு முதலில் எண்ணிப்பார்க்க வேண்டியது, ஏன் திரும்பத் திரும்ப பெண்களை நோக்கியே கேள்விகளை எறிகிறோம் என்று. நாம் இங்கே பேச வேண்டியது ஆண்மையச் சமூகச் சூழல் இயங்கும் விதம் குறித்து. நம் கவனத்தைத் திருப்ப வேண்டியது ஆண்மையச் சமூகச் சூழலை முறையானதென ஏற்கும், அதை இயல்பாக்கும் அன்றாடச் செயற்பாடுகளை நோக்கி; இந்தச் செயற்பாடுகளை முன்வைக்கும் நிறுவனங்களை நோக்கி. குடும்பத்துக்கு வெளியே இயங்கும் அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், திரைத் துறை, ஊடகம் உள்ளிட்ட தொழில்துறைகள் அனைத்தும் குடும்ப நிறுவனத்தை அடியொற்றி இருப்பவை என்பதைக் கொஞ்சம் சிந்தித்தாலே தெரிந்துகொள்ள முடியும். எதிர்ப்பாலியல் நியதிகளால் நிறுவப்பட்டிருக்கிற குடும்ப அமைப்பில் பாலியலை முன்வைத்து பேரம் நடப்பதில்லையா என்ன? இன்றுவரை பலரும் உபயோகிக்கும் தலையணை மந்திரம் போன்ற பயன்பாடுகள் நாம் அறிந்ததுதானே!

அங்கிருந்து தொடங்கி, பெண்கள் பாலியலை வைத்துப் பேரம் செய்கிறார்கள் என்று பாரபட்சமாகக் குற்றம்சாட்டுவதைத் தள்ளிவைத்துவிட்டு நாம் கேட்க வேண்டியது இதுதான்: எந்தச் சூழலில் இந்தப் பேரத்தைச் செய்ய அவர்கள் தள்ளப்படுகிறார்கள்? தனிப்பட்ட குடும்ப, அலுவலகச் சூழல் அல்ல நான் குறிப்பிடுவது. இங்கே சூழல் என்பது எதிர்ப் பாலியல் நியதிகள் கட்டமைக்கிற வாழ்க்கை – சமூகச் சூழலை, மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் குடும்ப நிறுவனத்தை. இச்சூழல் பாலின வகைமாதிரிகளை (gender categories) நிறுவி, அவற்றின் வழி பால்களைக் கட்டமைத்து, தனிமனிதர்களின் பாலியல்களை ஒழுங்கு செய்கிறது (regulation of sexualities).

பால் படிநிலைதான் இத்தகைய ஒழுங்குபடுத்தலின் அடிப்படை அலகாக உள்ளது. பால் படிநிலையின் அடிப்படையில் நடக்கும் பாலியல் ஒழுங்குபடுத்துதலிருந்து விளைவதுதானே நிஜமான பரஸ்பரப் பகிர்தலுக்கு மாற்றான, அதை நீக்கிய, அல்லது பரஸ்பரப் பகிர்தல் என்ற பெயரில் நடைபெறும் காமத்தின் பேரம்? பெண் பாலியலை முன்வைத்து நடக்கும் பேரத்துக்கும் பெண்ணைப் பண்டமாக்குவதற்குமான தொடர்பும்கூட இந்த ஒழுங்குபடுத்தலிலிருந்துதானே வருகிறது?

குடும்பத்திலிருந்து தொடங்கி, அதை அடியொற்றிய பிற நிறுவனங்களில் நடக்கும் இத்தகைய பேரத்துக்குப் பெண்ணை எளிதில் பொறுப்பாக்கிவிடலாம். ஏனெனில், இந்த அடிப்படையான கேள்விகள் கடினமானவை.

(#Me Too இயக்கம் குறித்த பெருந்தேவியின் அலசல் தொடரும்)

கட்டுரைத் தரவுகள்:

http://www.publicseminar.org

https://tamil.oneindia.com

https://www.firstpost.com

சிறப்புக் கட்டுரை: #MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?

சிறப்புக் கட்டுரை: #MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?

பெருந்தேவி

#MeToo போராட்டம் இயங்கும் விதத்தை அறியாதவர்கள் முன்வைக்கிற ஒரு விமர்சனம், இது மேட்டுக்குடிகளுக்கான போராட்டம் என்பது. மேட்டுக்குடி என்பது இனம், வர்க்கம், நம் சூழலில் சாதி மற்றும் மொழி. இப்படிப் பல அலகுகளையும் பொறுத்துக் கூறப்படுவது. தமிழ்ச் சூழலில் இணையத்தில் ட்விட்டரில் இந்த ஹேஷ்டாக் பயன்பாடு திரையுலகம் சார்ந்தும், ஆங்கில ஊடகம் சார்ந்தும் இயங்குபவர்களால் ஆங்கில வெளிப்பாடுகள் மூலம் பரவலாக்கப்பட்டதால் இவ்விமர்சனம் புரிந்துகொள்ளத்தக்கதே. அதே நேரத்தில் இந்தப் போராட்டத்தின் தொடக்கங்கள் இனத்தால் அல்லது சாதியால் ஒடுக்கப்பட்ட பெண்களிடமிருந்தே வந்திருக்கின்றன என்பது நினைவுகூரத்தக்கது.

மேற்கிலும் இந்தப் போராட்டத்தின் போதாமையென “lack of intersectionality,” அதாவது பால் அடையாளம் தவிர இதர ’குறுக்கு வெட்டு’ அடையாளங்களுக்கு இந்தப் போராட்டத்தில் இடமில்லை எனச் சொல்லப்பட்டது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், queer போன்ற ஒடுக்கப்பட்டவர்களுக்குப் போதுமான அளவு பிரதிநிதித்துவமில்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.

இரண்டாம் அலையில் அலிசா மிலனோ போன்ற ஹாலிவுட் பெண் நடிகர்கள் முன்னெடுத்ததால் இந்த விமர்சனம் என்றாலும், இந்த இயக்கம் அவர்களோடு நிற்கவில்லை, இதை அமைப்பு சார்ந்த, அமைப்புசாராத தொழிலாளர்கள் தங்களுக்கானதாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள். ட்விட்டர் ஹேஷ்டேக் என்பதிலிருந்து நகர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கோஷமாக “MeToo“ மாறியிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

அமெரிக்காவில் நான் வசிக்கும் ஆல்பனியில் என் கல்லூரியின் பணியாற்றுபவர்களோடான உரையாடல்களிலிருந்து நான் தெரிந்துகொண்டது: ஹார்வே வெய்ன்ஸ்டினுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டத்துக்குப் பிறகு, பாலியல் துன்புறுத்தல் என்பது கல்லூரி வகுப்பறைகளிலும் மாணவர் மத்தியிலும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தினர் இரவு உணவு உண்ணும்போது விவாதிக்கக்கூடிய விஷயமாகவும் கவனத்துக்கு வந்திருக்கிறது. அனைவருக்குமே தெரிந்த, ஆனால் மூடுமந்திரமாக இருந்த ஒரு கொள்ளை நோய் வெளியே வந்திருக்கிறது. #MeToo என்பது பாலியல் துன்புறுத்தல் என்கிற சமூக அவலத்தின் திரை விலகல் நிகழ்வு. எனவே மானுட சமுதாய, பெண்ணிய வரலாற்றில் ஒரு முக்கியத் தருணம்.

இங்கே நான் சுட்டிக்காட்ட நினைப்பது, சமீபத்தில் அமெரிக்காவில் ஓட்டல்களில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் தங்களுக்கானதாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது. ஓட்டல்களில் தங்கவரும் வாடிக்கையாளர்களால் (சமயத்தில், சக பணியாளர்களால்) பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை அவர்கள் முன்வந்து தெரிவித்திருக்கிறார்கள். வெய்ன்ஸ்டினுக்கு எதிரான போராட்டம் தொடங்கிய பின்னரே பல காலமாக நடந்துகொண்டிருந்தவை எல்லாம் பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. ஓட்டல்களில் வந்து தங்கும் அரசியல்வாதிகள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பெரும்புள்ளிகளால் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு (மசாஜ் செய்ய வலியுறுத்தல், முறைகேடாகத் தொடுதல் உள்ளிட்டவை) உள்ளானதை சமீபத்தில் பணியாளர்கள் பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார்கள்.

சிகாகோவில் நடத்தப்பட்ட ஒரு கணிப்பில் 58 சதவிகிதப் பணியாளர்கள் தங்களிடம் விருந்தினர்கள் பாலியல் அத்துமீறல் செய்ததைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அக்டோபர் 2017இல் சிகாகோ நகரத்தில் பணியாற்றும் ஓட்டல் பணியாளர்களுக்கு ‘panic buttons’ தரப்பட்டிருக்கின்றன. இவற்றின் மூலம் ஒருவேளை விருந்தினரோ, சக பணியாளரோ முறைகேடாக நடந்துகொள்ளும்போது ஓட்டல் பாதுகாவலர்களை அவர்கள் உதவிக்கு அழைக்க முடியும். நியூயார்க்கில் யூனியன் உறுப்பினர்களான ஓட்டல் பணியாளர்களுக்கும் இவை வழங்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல, கலிபோர்னியா உள்ளிட்ட மாகாணத்தில் ஓட்டல் பணியாளர்கள் அனைவருக்கும் panic buttons தருவதற்கும், முறைகேடாக நடந்ததாகக் குற்றம்சாட்டப்படும் விருந்தினரை மூன்று வருடம் தடை செய்வதற்கும் வகைசெய்ய சட்ட விதி முன்மொழியப்பட்டிருக்கிறது. ஓட்டல் பணியாளர்களின் தொழிற்சங்கமான “Unite Here,” பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஓட்டல் பணியாளர்கள் முன்வந்து தாங்கள் எதிர்கொண்டதை வெளிப்படுத்தியதே அரசின் கொள்கை மாறுதல்களுக்குக் காரணம் எனக் கூறுகிறது. டைம் பத்திரிகையின் 2017ஆம் ஆண்டுக்கான “மௌனத்தை உடைப்பவர்கள்” விருது இத்தகைய ஓட்டல் பணியாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபரின் அடையாளம் எனும் சிக்கல்

இந்தியாவைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டு ரயா சர்க்காரின் “பட்டியலில்” இடம்பெற்ற கல்வியாளர்களிடம் பயின்று பாலியல் அத்துமீறலைச் சந்தித்தவர்களெல்லாம் ’உயர்’ சாதியினரா, மேட்டுக்குடியினரா என்று நாம் ஒருகணம் யோசித்துப் பார்க்க வேண்டும். இப்போது பரபரப்பாக இருக்கும் #MeToo அலையில் தாங்கள் எதிர்கொண்ட மோசமான பாலியல் துன்புறுத்தல்களைக் கூறுபவர்கள் எல்லோரையும் ‘மேட்டுக்குடி’ அல்லது ‘உயர்’சாதி என்று அடைப்புக்குறிகளுக்குள் அடைக்க முடியுமா என்று கேட்க வேண்டியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக, தற்போது இந்தப் போராட்டத்தால் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட எம்.ஜே.அக்பர் தந்த பாலியல் துன்புறுத்தலைப் பதிவு செய்திருக்கும் பத்திரிகையாளர் கஸலா வஹாப், இத்தகைய ஒரு நிகழ்வுக்குப் பின்னான தன் மனநிலையை விளக்குகிறார்: “என் மொத்த வாழ்க்கையே என் கண் முன்னால் தெரிந்தது. என் குடும்பத்திலிருந்து சிறு நகரம் ஆக்ராவிலிருந்து டெல்லிக்குப் படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் வந்த முதல் ஆள் நாள். இங்கே வருவதற்காக மூன்று வருடங்கள் வீட்டில் குடும்பத்தில் பலநேரங்களில் போராடியிருக்கிறேன். என் குடும்பத்திலிருந்து வீட்டிலிருந்து வெளியே வேலைக்கு வந்தவர்கள் யாருமில்லை. வியாபாரக் குடும்பங்களில் மணம்முடித்து அந்த ஊரிலேயே வாழ்பவர்கள்தான் உண்டு. …என் தந்தையின் காசு வேண்டாமென்று மறுத்தேன். சுயமாக வாழ நினைத்தேன். வெற்றிகரமான, மரியாதைமிக்க பத்திரிகையாளராக. இதையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு தோற்றுப்போய் ஊருக்குச் செல்ல விரும்பவில்லை.”

இந்தத் தற்குறிப்பின் பின்னணியை கவனமெடுத்து வாசிக்கும்போது, இன்றைய சூழலில் தனிநபரின் அடையாளம் என்பது எவ்வளவு சிக்கலானது என்று புரியும். கஸலா உயர் நடுத்தர வர்க்கப் பத்திரிகையாளர். ஆனால் அவர் குடும்பப் பின்னணியைப் பார்க்கும்போது ஒடுக்கப்பட்ட பெண் ஒருவரின் பின்னணி. நகரத்தில் வேலை செய்கிறார். ஆனால் அங்கே வந்து சேரப் போராடியிருக்கிறார். ஆங்கிலப் பத்திரிகையாளர், ஆங்கிலத்தில் தன் பாலியல் பிரச்சினையைப் பேசுகிறார் என்பதற்காக அவரை மேட்டிமை அடையாளத்தில் வைக்கமுடியுமா? அல்லது, அவர் அனுபவித்த பாலியல் துன்புறுத்தலை இதனால் புறந்தள்ளிவிட முடியுமா?

மேலும், எந்த ஒரு பெண்ணுமே இன்றைக்குக் கல்வி கற்கிறார், வெளியே வேலைக்கு வருகிறார் என்றால் அது ‘உயர்’சாதி ஆணுக்குரியதைப் போல இயல்பாக, காலம்காலமாக நடப்பதல்ல. சமூகத்தில் சாதி ஒடுக்குமுறையைப் போலவே பால் ஒடுக்குமுறையும் பொருண்மையானது. ஒவ்வொரு சாதியிலும், குடும்பத்திலும் சமீபகாலம் வரை பெண்கள் இதற்காகப் போராடியிருக்கிறார்கள். வரலாற்றுச் சூழல்களை மனதில்கொள்வது அவசியம்.

பாலியல் துன்புறுத்தல் என்பது ஒன்றுபோல் நடப்பதில்லை. குடும்பத்தில் தொடங்கிப் பயணம், பணியிடம், சமூக வலைதளம் வரை வெவ்வேறு வகைகளில் நடக்கக்கூடியது அது. ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பெண்கள் அனுபவிக்கக்கூடிய பாலியல் தொல்லைகளின் பரிமாணம் மற்ற சாதிப் பெண்கள் அனுபவிப்பதைக் காட்டிலும் கொடிய முகத்தைக் கொண்டது.

கஸலாவைப் போலவே இன்னோர் உதாரணத்தைத் தருகிறேன். பாடகர் சின்மயி பகிர்ந்த ஒரு ட்வீட்டில், ஓர் இளம் பெண் தன் பதினாறு வயதில், கர்னாடக இசைக் கலைஞர் சசிகிரண் தந்த தொல்லை குறித்து எழுதியதைப் பகிர்ந்திருக்கிறார். அமெரிக்காவில் வாழ்பவர் அவர் என்பதால், அல்லது கர்நாடக சங்கீதமே மேட்டிமைக் கலை என்ற குறுகிய புரிதலால், மேட்டிமை என்று தள்ளிவிடுவோமா, இல்லை இது ஒரு பெண் குழந்தை சந்தித்த தொல்லை என்று பார்ப்போமா?

ஒற்றை அடையாளம் என்னும் சிலுவை

அடையாளம் என்பது முன்னெப்போதையும்விட பல அடுக்குகள், குறுக்குவெட்டுகள் கொண்டதாக மாறிக்கொண்டிருக்கிற காலகட்டம் இது. உலகளாவிய முதலீட்டியம் ஒருபுறம். இன்னொரு புறம், இணையம் வாயிலாக தகவல் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டிருக்கிற நிலை. இணையத் தொழில்நுட்பம் எல்லோருக்கும் ஒன்றேபோலக் கிட்டவில்லை என்ற யதார்த்த நிலை இதை இன்னும் சிக்கலாக்குகிறது. ஆனால் அந்த ஒரு காரணத்தாலேயே இணையத்துக்கு வந்து பேசுபவர்கள் எல்லோரையும் ஒற்றை அடையாளச் சிலுவையில் அறைந்துவிட முடியாது.

மேலே கூறியவற்றின் அடிப்படையில், சின்மயி, தனுஸ்ரீ தத்தா போன்ற திரைப் பிரபலங்கள் இந்தப் போராட்டத்தில் குதித்திருப்பதால், வேறு பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடுகள் மேட்டிமைத்தனத்தை அல்லது சாதியத்தைக் காட்டுவதால், இந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது சிறுபிள்ளைத்தனம் என்றே தோன்றுகிறது.

இந்த இடத்தில் #MeTooவைக் களப்பணிக் குழுவாகத் தொடங்கிவைத்த தாரனா புர்கேயின் நிலைப்பாட்டைச் சொல்லியாக வேண்டும். ஹாலிவுட் பெண் நடிகர்கள் இதைச் சமூக வலைதளத்தில் #MeToo ஹேஷ்டாகை முன்னெடுத்தபோது அதை fad என்று இந்த இயக்கத்தை எதிர்த்தவர்கள் புறந்தள்ளியதை அவர் ஏற்கவில்லை. உண்மையை வெளியே பேசினால் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று தெரிந்தே அவர்கள் பேசுகிறார்கள் என்றுதான் பரிந்து பேசினார். முக்கியமாக, பிரபலங்கள் இதைப் பேசினால் ஒதுக்கிவைப்போம் என்பதாக இல்லை அவரது நிலைப்பாடு. “பிரபலங்களின் ஒளிவட்டச் சிலாகிப்பில் ஒரு சமூகம் இருக்கும்போது, பனிக்கட்டியை (மக்கள் கவனம் கொள்ளாத விஷயங்களுக்கான உருவகம் இது) உடைக்க ஏதோ ஒன்று தேவைப்படுகிறது, எனவே வேறெந்த வகையிலாவது இது நடந்திருக்கலாமே என்றெல்லாம் எரிச்சல்பட எனக்கு நேரமில்லை” என்றார். பாலியல் துன்புறுத்தலை மக்கள் கவனத்துக்கு கொண்டுவந்ததில், நாடு முழுவதும் பேசுபொருளாக ஆக்கியதில் ஹாலிவுட் பிரபலங்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதாகக் கூறினார். இவ்விஷயத்தில் தானொரு யதார்த்தவாதி என்றும் அறிவித்தார். அலிசா மிலனோவை ally (நண்பர்) என்று அவர் கூறியதை இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்கிறேன்.

இந்தியாவை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும்கூட பாலியல் துன்புறுத்தல் இன்று #MeTooவால் பேசுபொருளாகி இருக்கிறது. இதுதான் இன்று கவனத்தில் கொள்ள வேண்டியது. இதிலிருக்கும் பாதிக்கப்பட்டிருக்கும் பல தரப்பினரின் பிரதிநிதித்துவப் போதாமைகளைக் களைய நிச்சயம் முயற்சி எடுக்க வேண்டும். அது நம்முன் இருக்கும் அத்தியாவசியமான பணி.

பாலியல் துன்புறுத்தல் என்பது ஒன்றுபோல் நடப்பதில்லை. குடும்பத்தில் தொடங்கி பயணம், பணியிடம், சமூக வலைதளம் வரை வெவ்வேறு வகைகளில் நடக்கக்கூடியது அது. அமைப்பு சார்ந்த, அமைப்புசாராத பணிகளில் ஈடுபடுபவர்கள், தத்தம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல, எதிர்ப்பைத் தெரிவிக்க, அவர்களுக்கு இதற்கான தேர்வு இருக்கும் வகையில் உரையாடல் வெளிகள் வேண்டும். அந்த வெளிகள் அவர்களால் அவர்களுக்காகக் கட்டியமைக்கப்பட வேண்டும். வேண்டுமானால் அதற்குச் சிறு துரும்பாகக் களப்பணியாளர்கள், சிந்தனையாளர்கள் உதவலாம். பல தளங்களில் ஒடுக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில், அரசின் கொள்கை மாறுதல்களுக்கு, சட்டத் திருத்தங்களுக்கு அவை வழிசெய்யக்கூடும்.

கட்டுரைத் தரவுகள்:

https://thewire.in/media/mj-akbar-sexual-harassment

 

https://variety.com/2018/biz/news/tarana-burke-times-up-me-too-backlash-1202748822/

https://aflcio.org/2018/1/26/hotel-workers-say-metoo-and-fight-back

#MeToo குறித்த பெருந்தேவியின் இதர கட்டுரைகள்:

நன்றி – minnambalam 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More