இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள் பொஸிற்றிவ் பொன்னம்பலம்

தன்ரை விறுசாவைக் காட்டலாம். ஆனால் உப்பிடி இல்லை. அதுக்கு…

பொஸிற்றிவ் பொன்னம்பலம்

வாற கிழமை தைப்பொங்கல் வருகுது. அகில உலகம் எல்லாம் வியாபித்து இருக்கிற எங்கடை தமிழ் உறவுக்கு எல்லாருக்கும் என்ரை  பொங்கல் வாழ்த்தைத் தெரிவிச்சுக் கொள்ளுறன். விரும்பினால் தமிழ் படிச்ச, தமிழை வாசிக்கத் தெரிஞ்ச எல்லா ஆக்களும்  இந்த வாழ்த்தை என்னைக் கேக்காமல் எடுக்கலாம்.நான்  கோவிக்க மாட்டான். நல்லதைச் செய்யக்  கோவிச்சால் அதைப் போலக் கேடு  கெட்ட பழக்கம் வேறை ஒண்டும் இல்லை.

இப்ப இஞ்சை நல்ல பனிப்பெய்யிது. அதாலை  குளிர் கூட. காலமையிலை எழும்பக் கஷ்டமாக்கிடக்கு. வயசு போட்டுதெல்லே! ஆதாலை சனக்கிழமையிலை முழுகேலாது. கொஞ்சம் பிந்தி முந்தித்தான் குளிப்பு, முழுக்கு நடக்கிது. அதாலை சனிமுழுக்கும் எழுதக் கொஞ்சம் பிந்திது. சூழ்நிலையை அனுசரிச்சு மன்னிச்சுக் கொள்ளுங்கோ. கோடை வரட்டும் எல்லாம் ஒருவிதமான ஒழுங்குக்கு வரும்.

உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இப்ப வட மாகாணத்துக்கு ஒரு தமிழ் ஆளைக் கன காலத்துக்குப் பிறகு அரசாங்கம் ஆளுநரா நியமிச்சிருக்கு . பாக்கப் பேச நல்லவர் மாதிரித் தெரியிது. நல்ல காலம் அவர் வடக்கிலை பிறந்து வளந்தவரில்லாதது. இஞ்சை உள்ள ஒராளை நியமிச்சிருந்தால் ஆளுநர் ஒபிசிலை போய் நிண்டு நாறப்பண்ணிப் போடுவங்கள்.பிறத்தியிலை இருந்து வந்தவர் எண்ட படியாலை அவரும் கொஞ்சம் பயபக்தியோடை இருப்பர். எங்கடை சனமும் மாமன் மச்சான் எண்ட உறவு கொண்டாடாமல் நடப்பினம். அவரும் தான் வட மாகாணத்தை ஒரு மொடலான மாகாணமாச் செய்து காட்டுவன் எண்டு சொல்லுறார்.

அது சரி பொங்கல் சமான் எல்லாம் வாங்கியாச்சோ? இஞ்சை பொங்கினமாதிரி என்ன முத்தத்திலையே பொங்குறது? இல்லைத்தானே ! ஆனால் எனக்கு ஒரு ஆள் சொன்னவர் லண்டனிலை தான் முதத்திலைதான் பொங்கிறவராம். அவர் கொஞ்சம் ஓவராப் புழுகிறவர். தன்னட்டை பத்து இருந்தால் இருபதெண்டு சொல்லுறவர். அதாலை அவர் சொன்னது உண்மையோ தெரியாது. ஆள் வந்தால் இஞ்சை ஊருலகம் தெரியாத அவரின்ரை கொஞ்சச் சொந்தக் காரர் இருக்கினம். அவையளைக் கூப்பிடுவர். ஒரு முழுக் கோழியைப் பொரிச்சுக் காய்ச்சிப் போட்டுக் கொண்டு வந்த சாராயத்தை உடைச்சுப் போட்டுத் துவங்கினால் சிலவேளை கோயில் திருவிழா மாதிரி விடிய விடியச் சமா நடக்கும். அவற்றை அந்த அண்டப் புழுகைக் கேக்கச் சகிக்காமல் சிலர் நித்திரை கொண்டும் விடுவினம். கொண்டு வாற சராயமும் லண்டனிலையே வலு குறைஞ்ச விலைக்கு வாங்கினதாத்தான் இருக்கும்.

வெறி ஏறினால் அவருக்கு  என்ன கதைக்கிறம்? ஏது கதைக்கிறம் எண்டு தெரியாமை திருப்பத் திருப்ப ஒரு கதையையே கதைப்பர். சில நேரம். தான் முந்தி இஞ்சை இருக்கேக்கை தோட்டஞ் செய்துதான் சீவிச்சவர் எண்டதை மறந்துபோய் தான் பிறந்து வளந்ததெல்லாம் லண்டன் எண்டது மாதிரிச் சொல்லுற கதையளைத்தான் காது  குடுத்துக் கேக்காலாது. அவருக்குத் தெரியும் தன்ரை கதை கேக்கிறவை ஒருத்தரும் உலகப் படத்திலை கூட லண்டனைப் பாத்திருக்க மாட்டினம் எண்டு. லண்டனிலை தான் வைச்சிருக்கிற கோழி இறைச்சிப் பொரியல் கடையைப் பற்றியும் இழுத்துவிடுவர். தன்ரை கடைக்கு வாற ஆக்களைப் பற்றியும், அவை செய்யிற விளையாட்டைப் பற்றியும், அங்கை இருக்கிற கறுப்புகள் கடைக்கு வந்து காசில்லாமல் தின்னச் செய்யிற திருகுதாளத்தையும் சொல்லிச் சரிப்பர். ஆது மட்டுமல்ல கடை கடையாத் தான் தேடிப்போய் திகதி முடியக் கிடக்கிற கோழியை அரைவிலைக்கு வாங்கித் தன்ரை கடைக்கு வாற ஆக்களுக்குப் பொரிச்சுக் குடுத்துக் காசாக்கிற விளையாட்டையும் சொல்லுவர்.

ஆனால் தெரிஞ்ச சனம் அதுதான் எங்கடை ஊராக்கள் வந்தால் கொஞ்சம் ஸ்பெஷாலாக் கவனிப்பாராம். எப்பிடி எண்டு கோட்டால் அண்டைக்கு வந்த புதுக் கோழியிலை பாத்தெடுத்துப் பொரிச்சுக் குடுப்பராம். அதுக்கை எங்கடை ஊரிலை இருக்கிற கோபாலின்ரை மேன் வந்தால் இன்னும் ஸ்பெஷலாம். என்னெண்டு கேக்கிறியளே? அவன் வேலை வெட்டி இல்லாமல் கவுண்மென்ரின்ரை காசை எடுத்துக் குடிச்சு வெறிச்சிட்டுத் திரியிறவராம். வந்து ஓ சியிலை திண்டு குடிச்சிட்டுப் போக நிப்பனாம். சரி வந்தது வந்திட்டான் எண்டு ஏதாவது கூட நாட நிண்டு உதவி செய்திட்டு தின்னலாம் எண்ட யோசினை அவனுக்குக் கிடையாது. அதாலை அவருக்கு என்ன ஸ்பெஷல் எண்டால் சில மரியதையான ஆக்கள் வந்து ஓடர் பண்ணிப்போட்டு முழுதையும் தின்னாமல் போவினமெல்லே? அது தான் அவருக்குத் தான் குடுக்கிற விசேஷமாம். அவன் ஓ சியிலை திண்டு குடிச்சு வேலை வெட்டி இல்லாமல் திரிஞ்சாலும் ஊரிலை அவனுக்குக் குடுத்த சீதனக் காணி ஒரு பரப்பிலை சின்னதா ஒரு வீட்டை இணக்கிப் போட்டான். ஆனால் இண்டுவரை அவன் தன்ரை பெண்டில் பிள்ளையளை லண்டனுக்கு எடுக்கேலாமல் இருக்கிறான். தாய்க்காறிதான் உள்ள கோயில் குளம் எல்லாம் நேர்த்திக்கடன் வைச்சுக் கொண்டு திரியிறா.

கோழிப் பொரியல் கடை வைச்சிருக்கிறவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேணும். அவன் அப்பிடி இப்பிடி உழைச்சாலும் ஊரிலை சகோதரிமாருக்குச் சீதனம் குடுத்துக் கலியாணம் செய்து வைச்சிருக்கிறான். வீட்டுக்கையே இரண்டு, மூண்டு காக்கூசும் குளிக்கிற இறையும் வைச்சு ஒரு வீடு கட்டி இருக்கிறான். வாசிக சாலைக்கும் கொஞ்சக்காசு குடுத்தவன்.அதோடை கோயிலுக்கும் ஒரு பெரிய கணக்கொண்டை ஐயற்றை கையிலை குடுத்ததெண்டும் சொல்லினம். இப்ப ஒரு விசியம் என்னெண்டால் இஞ்சை நிண்டு போறவாறவை அங்கை போய் என்ன திருகுதாளம் செய்தாலும் இஞ்சை ஊருக்கு வரேக்கை வெள்ளையும்  சொள்ளையுமாத்தான் வந்திறங்குவினம். மரியாதையானவன் மரியாதையா வந்து சத்தம் போடாமல் போயிடுவன். சில்லறையள்தான் ஊரைக் கூட்டி உலகத்தைக் கூட்டிப் பெரிய திருவிளையாடலே நடத்திப்போட்டுப் போவினம்.

அப்பிடி வந்தது ஒண்டு தன்ரை தங்கைக்காரியோடை நிண்டவர். எல்லாரும் செய்யிறமாதிரித் தானும் ஒரு திருவிழாவை வீட்டிலை செய்ய வேணும் எண்டு பாத்திட்டு இரண்டு மூண்டு வருசத்துக்கு முன்னம் சாமத்தியப் பட்ட தன்ரை தங்கைக்காரியின்ரை மேளுக்கு ஒரு பூப்புனித நீராட்டு விழா நடத்திச் செலவழிச்சிட்டுப் போகிது. அந்தப் பெடிச்சியே தான் சமாத்தியப்பட்டதை மறந்து போயிருக்கேக்கை இவர் வந்து ஞாபகப்படுத்திப் போட்டுப் போயிருக்கிறார். சரி வந்தனி இப்பிடிச் சிலவழிச்சதைத் தங்கைக்காரியின்ரை கையிலை குடுத்திருந்தால் அவள் தனக்குத் தெவையான நல்லது கெட்டதுக்கு அதைப் பாவிச்சிருப்பள். இது அதைவிட்டிட்டுத் தேவை இல்லாமல் ஒண்டைச் செய்து தன்ரை விறுசா விளையாட்டைக் காட்டிப் போகுது….???

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.