சினிமா பிரதான செய்திகள்

மகாநதி – கமலால்தான் சாத்தியமான படம்


மேல்தட்டு மக்கள் தொடமுடியாத உயரத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். நடுத்தர மக்கள், மேல்தட்டு சிந்தனைகளுடனும் ஏக்கங்களுடனும் தவித்து மருகுகிறார்கள். பொருளாதாரத்தில் மேலிருப்பவர்களும் கீழிருப்பவர்களும் மனம் அலைபாயாமல் இருந்துவிடுகிறார்கள். இந்த நடுத்தர வர்க்கத்தினர்தான், அத்தனை அல்லாட்டங்களுடனும் இருக்கிறார்கள். அப்படியொரு நடுத்தர வர்க்க குடும்பஸ்தனின் ஆசையைப் புரிந்துகொண்டு, அவனை நம்பவைத்து கழுத்தறுக்க, அவன் படுகிற படாதபாடுகள்தான் மகாநதி.  


`மகாநதி’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் படத்தின் அனுபவங்கள் குறித்து, இயக்குநர் சந்தானபாரதி பேசியிருக்கிறார்.

“என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம், `மகாநதி’. இந்தப் படத்தை இயக்கும்போது, பல இடங்களில் கண்ணீர் விட்டிருக்கேன். படம் ரிலீஸாகி எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதேசமயம், பொண்ணுங்களைப் பெத்த சிலர் திட்டவும் செஞ்சாங்க. முக்கியமா, என் அண்ணனே என்னைத் திட்டுனார். `ஏண்டா இப்படி எடுத்த’னு… இந்த நெகிழ்வுக்கும், மகிழ்வுக்கும் காரணம் என் நண்பர் கமல்தான். அவரால்தான் இந்தப் படம் சாத்தியமாச்சு.” – `மகாநதி’ படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. அந்த நாள்களை நெகிழ்வோடு நம்மிடம் பகிர்ந்துகொள்ளத் தொடங்குகிறார், படத்தின் இயக்குநர் சந்தானபாரதி.

“ `மகாநதி’ படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் கமல் சார். இந்தப் படம் உருவாக முக்கியமான காரணமும், அவர்தான். எழுத்தாளர் ரா.கி.ரெங்கராஜன், கமல், நான் மூணு பேரும் சேர்ந்து ஒரு ஃபேமிலி டிராமா படம் எடுக்கலாம்னுதான் பல கதைகளைப் பேசிக்கிட்டு இருந்தோம். வெளிநாட்டுப் படப்பிடிப்பை முடிச்சுத் திரும்பிய கமல் சார், இந்தப் படத்தோட கருவைச் சொன்னார். எங்க எல்லோருக்குமே அது ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே, உட்கார்ந்து பேசி, இந்தப் படத்தோட கதையை முழுமையாக்கினோம்.

படத்தை நான்தான் இயக்கணும்னு கமல் சார் உறுதியா இருந்தார். அந்தச் சமயத்துல ரொம்ப பிஸியா இருந்த சுகன்யாவைப் படத்தின் ஹீரோயினா கமிட் பண்ணோம். அவங்ககூட `சின்ன மாப்பிள்ளை’ படத்துல நானும் நடிச்சிருப்பேன். அதனால, `மகாநதி’யில அவங்க நடிக்கணும்னு விருப்பப்பட்டுக் கேட்டேன்; அவங்களும் அழகா நடிச்சுக் கொடுத்தாங்க. படத்தோட வில்லனா கொச்சின் ஹனிபா நடிச்சார். `குணா’ படத்துலேயே அவர் நடிக்க வேண்டியது. கால்ஷீட் பிரச்னை. முடியாம போயிருந்தது. அது இந்தப் படம் மூலமா நிறைவேறுச்சு. படத்துல வர்ற கமல் சாரோட பொண்ணு கேரக்டருக்கான ரொம்ப மெனக்கெட்டோம். சின்ன வயசுப் பொண்ணா மகாநதி ஷோபனா நடிச்சிருப்பாங்க. அதுக்கு அப்புறம் வயதுக்கு வந்த பெண்ணா, நடிகை சங்கீதா நடிச்சிருந்தாங்க. இதுல ஷோபனாவை நாங்க முதலில் ஒரு ஸ்கூல பார்த்தோம். அவங்க ரொம்ப அழகாகப் பாடவும் செஞ்சாங்க. அதனால, இளையராஜா அவருடைய இசையில் படத்துல வரக்கூடிய `ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்’ பாடலைப் பாடவெச்சார். இந்தப் படத்துக்குப் பிறகு அவங்க ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டாங்க.

கமல் தன் பொண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கிற காட்சியைக் கொல்கத்தாவுல இருக்கிற ஒரு ரெட்லைட் ஏரியாவுல ஷூட் பண்ணினோம். இந்தக் காட்சியில நடிச்ச பெரும்பாலான பெண்கள் அந்த ரெட்லைட் ஏரியாவுல இருக்கிறவங்கதான். கமல் கதறி அழும் காட்சியைப் பார்க்கிறப்போ, நானே கண் கலங்கிட்டேன். ரொம்ப தத்ரூபமா நடிச்சார். இப்போவும் இந்தக் காட்சியை டிவியில பார்க்கிறப்போ எமோஷனல் ஆகுற ஆடியன்ஸ் அதிகம். ஆனா, இந்தக் காட்சியை ஷூட் பண்றப்போ, எங்களுக்குப் பெரிய பிரச்னை வந்துச்சு. கமலோட பொண்ணு கேரக்டர்ல நடிச்ச சங்கீதா தீடிர்னு இந்தக் காட்சியில நடிக்கப் பிடிக்காம ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரல. அதனால, அங்கே இருந்த ஒரு பொண்ணை இந்தக் காட்சியில நடிக்க வெச்சோம்.

படத்தோட பெயர் `மகாநதி’க்கு ஏத்த மாதிரி, படத்துல எல்லா கேரக்டருக்கும் கிருஷ்ணா, யமுனா,  காவேரினு நதிகள் பெயரை வெச்சோம். படத்தோட ரீ-ரெக்கார்டிங் அப்போ இளையராஜா சார் ரொம்பவே கலங்கிட்டார். இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைச்சப்போ, எங்க `மகாநதி’ டீம் ரொம்ப சந்தோஷப்பட்டோம். இதெல்லாத்தையும் சாத்தியமாக்குனது, கமல் சார்தான். நானும், கமலும் சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். ஒரே டுடோரியல்ல படிச்சோம். அவர் ஹீரோவா நடிச்சுக்கிட்டு இருந்தப்போ, நான் காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்தேன். காலேஜ் முடிஞ்சு, இயக்குநர் ஶ்ரீதர்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அந்த நேரத்துல ஶ்ரீதர் சார் படத்துல கமல் சார் ஹீரோவா கமிட் ஆனார். அப்போ, `நம்ம நண்பனா இருந்தாலும், எப்படி அவரை அணுகிப் பேசுறது’னு ஸ்பாட்ல எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. அதனால, ஷுட்டிங் ஸ்பாட்ல கமலைத் தவிர்த்தேன். ஒரு பிரேக் டைம்ல, `டேய் நில்லுடா’னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தா, கமல் சார்தான். `என்கிட்ட நல்ல நண்பனா பேசு’னு அதட்டுனார். அப்படித்தான் எங்க நட்பு. இப்போவரைக்கும் நல்லபடியா தொடருது. பிறகு அவர் தயாரிப்புல உருவான எல்லாப் படத்திலும் நானும் வொர்க் பண்ணியிருக்கேன். அவர் எப்பவும் நல்ல இருக்கணும்.” நெகிழ்வாகத் தொடங்கி, நெகிழ்வாகவே முடிக்கிறார், சந்தானபாரதி.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers