இலங்கை பிரதான செய்திகள்

மக்களிடம் அதிகாரங்களை பகிர்ந்து கொடுப்பதற்கு அரசியல்வாதிகள் அஞ்சுகிறார்கள்….


பிரித்தானிய வெளிவிவகார பிரிவின் தெற்காசிய திணைக்களத்தின் தலைவரும் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருமான பர்கஸ் ஓல்ட் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஆகியோரை சந்தித்து கலந்துரையடினார். இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் (22.01.19) கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது தற்போது நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், 2015 ஜனவரி மற்றும் ஆகஸ்ட் தேர்தல்களில் மக்கள் கொடுத்த ஆணையை சுட்டிக்காட்டிய, அதேவேளை ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

மேலும் அண்மையில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், சட்ட விரோதமானதும் அரசியல் சாசனத்திற்கு முரணானதுமான செயற்பாடுகளை தாம் எப்போதும் அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைவாக செயற்படுகின்றபோது எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது எனவும் கொள்கையின் அடிப்படையில் தாம் சில முடிவுகளை எடுக்கின்றபோது, ஏனைய விடயங்களை குறித்து பெரிதாக கவனம் செலுத்த முடியாது எனவும் தெரிவித்தார். இதன்போது புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் விளக்கமளித்த எம்.ஏ.சுமந்திரன்,

2016 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மிக நீண்ட நடைமுறைகளும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதனை எடுத்துக்கூறிய அதேவேளை, இரண்டு பெருன்பான்மை கட்சிகளும் புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் மற்றும் நோக்கங்களை குறித்து தமது மக்களிற்கும் கட்சியினருக்கும் தெளிவுபடுத்துவதில் அசமந்த போக்கினை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிகாரபரவலாக்கம் நேர்மையாதொன்றாகவும் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரங்களை உபயோகிக்க கூடிய வகையில் இருத்தல் அவசியம் எனவும் வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், இதனை முன்னெடுத்து செல்வதில் காணப்படும் உண்மையான பிரச்சினை அரசியல்வாதிகளிடம் இது தொடர்பில் காணப்படும் அசமந்தபோக்கே ஆகும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் கைகளில் அதிகாரங்கள் செல்லுகின்றவிடத்து ஊழல் மற்றும் வளங்கள் வீண்விரயம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்களை அது குறைத்து விடும் இதன் காரணமாக ஒருசில அரசியல்வாதிகள் மக்களிடம் அதிகாரங்களை பகிர்ந்து கொடுப்பதற்கு அஞ்சுகிறார்கள் என தெரிவித்த இரா. சம்பந்தன், நீண்டகால தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத பட்சத்தில் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்பதனையும் வலியுறுத்தினார்.

மேலும் இலங்கையின் வரலாற்றில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளினதும் இயன்றளவு ஒத்துழைப்புடன் ஒரு அரசியல் யாப்பினை நிறைவேற்றிக் கொள்வதற்கான முதற் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதனை சுட்டிக்காட்டியதுடன், ஒருமித்த பிரிபடாத பிரிக்கமுடியாத நாட்டிற்குலேயே ஒரு தீர்வினை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச சமூகத்தின் வகிபாகம் குறித்து கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், இலங்கை அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதனை உறுதி செய்வது தவிர்க்க முடியாததொன்று என்றும் சர்வதேச சமூகம் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மனமானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் குறித்த கலவரையறைக்குள் நிறைவேற்றபடுவதனை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து கருமங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இச் சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு பிரதானி போல் கிறீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • “இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் மற்றும் நோக்கங்களை குறித்து தமது மக்களிற்கும் கட்சியினருக்கும் தெளிவுபடுத்துவதில் அசமந்த போக்கினை கொண்டுள்ளது.

    மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரங்களை உபயோகிக்க கூடிய வகையில் அதிகாரபரவலாக்கம் இருத்தல் அவசியம். இதனை முன்னெடுத்து செல்வதில் அரசியல்வாதிகளிடம் அசமந்தபோக்கே காணப்படுகிறது”.

    ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் குறித்த காலவரையறைக்குள் நிறைவேற்றப்படவில்லை மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வும் கொடுக்கப்படவில்லை.
    இதனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதை மாற்றி அமைக்க இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது பங்கை திறம்பட செய்து தீர்மானங்களை அமுல் படுத்தி வைக்க உதவ வேண்டும்.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers