இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஜெனீவா 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி? நிலாந்தன்

 

அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான குகமூர்த்தி 1990 செப்ரெம்பரில் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார். அவர் காணாமல் போனதையடுத்து அப்பொழுது வெளிவந்துகெண்டிருந்த ‘சரிநிகர்’ பத்திரிகை அதன் முன்பக்கத்தில் குகமூர்த்தி காணாமல் போய் இத்தனை நாட்களாயிற்று என்ற செய்தியைத் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தது. சில ஆண்டுகளின் பின் சரிநிகரும் நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின் குகமூர்த்தியைப் பற்றி ஆங்காங்கே யாராவது அவருடைய நண்பர்கள் அல்லது மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஏதும் எழுதுவார்கள் அல்லது பேசுவார்கள். ஆனால் குகமூர்த்தியைத் தமிழ்ச்சமூகம் மறந்து இன்றோடு 19 ஆண்டுகளாகி விட்டது. குகமூர்த்தியை நினைவு கூர ஒரு ‘சரிநிகர்’ இருந்தது.

2017இல் கேப்பாபிலவில் காணிகளை மீட்பதற்கான போராட்டமும், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டமும் மேலெழுந்த பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வரும் சில ஊடகங்கள் தமது முன்பக்கத்தில் மக்கள் இத்தனையாவது நாளாகப் போராடி வருகிறார்கள் என்பதனை ஒவ்வொரு நாளும் நாட்காட்டிச் செய்தியாகப் பிரசுரித்து வந்தன. ஆனால் கொஞ்சக் காலத்திற்குப் பின் அப்பத்திரிகைகள் சோர்ந்து விட்டன. போராட்டமும் சோர்ந்து விட்டது. எனினும் போராடும் மக்கள் தமது போராட்டக் கொட்டகையின் முகப்பில் எத்தனையாவது நாளாகப் போராட்டம் என்பதனை ஒவ்வொரு நாளும் எழுதி வைத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஜெனீவாக் கூட்டத்தொடரின் போதும் போராட்டங்கள் முடுக்கி விடப்படும். சில சமயம் அரசாங்கம் ஏதும் அரைகுறை தீர்வைத்தரும் அல்லது தீர்வைத் தரப்போவது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டும். ஆனால் மார்ச் அமளி முடிந்தவுடன் அப் போராட்டங்கள் ஊடகங்களின் முன்பக்கங்களிலிருந்து மறைந்து விடும்.

கடந்த ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்தின் பின் வவுனியாவில் தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் உரையாற்றிய கலாநிதி விஜய ஜயதிலக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார். அதாவது தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை பெருமளவிற்கு மறக்கப்பட்டுவிட்டது என்ற தொனிப்பட அவர் பேசினார்.

சில ஆண்டுகளுக்குமுன் மறைந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய சுனிலா அபயசேகர கொழும்பிலிருந்து வரும் ஒரு ஆங்கில வாரப்பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியை இங்கு சுட்டிக்காட்டலாம். அப்பேட்டி வெளிவந்த காலகட்டத்தில் 2012இல் மாத்தளை மருத்துவமனைக்கு அருகே ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதைக் குறித்துப் பேசிய சுனிலா ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். இதுவே லத்தீன் அமெரிக்காவாக இருந்திருந்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நெருங்கியவர்கள் அப்புதைகுழியை நோக்கிப் படையெடுத்திருப்பார்கள். ஆனால் நமது நாட்டிலோ ஒரு மனிதப்புதைகுழி திறக்கப்பட்டிருக்கிறது அதை நோக்கிப் பொதுமக்களின் கவனம் குவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று கூறினார்.

மாத்தளை மனிதப் புதைகுழிக்குள் சுமாராக 200 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படடன. இப்புதைகுழியைக் களணிப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இதேகுழுதான் இப்பொழுது மன்னார் புதை குழியையும் ஆய்வு செய்து வருகிறது. மாத்தளைப் புதைகுழியின் சான்று மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்பவிருப்பதாக அப்போதிருந்த போலீஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின் அந்தக் கதையை நாடு மறந்துவிட்டது. மன்னார் புதை குழியின் சான்று மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பட்டுள்ளன. ஆய்வு முடிவு இரு வாரங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்புதைகுழி தொடர்பான மர்மம் துலங்கும் போது அது தமிழ்த் தரப்பிற்குச் சில அதிர்ச்சிகளைக் கொடுக்கும் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார்.

தென்பகுதியைக் குறித்து சுனிலா சில ஆண்டுகளுக்கு முன் சொன்னது இப்பொழுது தமிழ்ப் பகுதிகளுக்கும் பொருந்தி வருகிறதா? மன்னாரில் திறக்கப்பட்டிருக்கும் மனிதப் புதைகுழிகளை நோக்கி தமிழ் மக்களின் கவனம் எந்தளவிற்குக் குவிக்கப்பட்டிருக்கிறது? அந்த எலும்புக்கூடுகளுக்குள் தங்களுக்கு நெருக்கமானவர்களின் உக்காத எச்சம் ஏதாவது தப்பியிருக்குமா? என்று இதுவரையிலும் தேடிச்சென்றவர்கள் எத்தனை பேர்? அப்புதைகுழியை நோக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு எத்தனை சிவில் அமைப்புக்கள் அல்லது மனித உரிமை அமைப்புக்கள் முன்வந்தன? அதைவிட முக்கியமாக தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் அப்புதைகுழியைச் சென்று பார்த்திருக்கிறார்கள்? மனிதப் புதை குழிகளோடு சகஜமாக வாழும் ஒரு நாடா இது?

இப்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அவர்களது முதிய பெற்றோர்; படிப்படியாக இறந்து வருகிறார்கள.; கடைசியாகக் கிடைத்த புள்ளி விபரங்களின்படி இதுவரையிலும் 24 பெற்றோர் இறந்து விட்டார்கள்.

ஜெனீவாக் கூட்டத்தொடர் என்ற ஒன்றும் இல்லையென்றால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் பெரும்பாலும் மறக்கப்பட்டு விடுமா? கடந்த சுமார் 700 நாட்களுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு ஜெனீவாக் கூட்டத்தொடரின் போதும் தமிழ் அரசியற்பரப்பில் அவர்கள் தலைப்புச் செய்திகளாய் மாறுகிறார்கள். ஆனால் கூட்டத்தொடர் முடிய அவர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள். இம்முறையும் ஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும், காணிகளை மீட்பதற்காகவும் போராட்டங்கள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. கடந்த புதன்கிழமை வவுனியாவில் ஓர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆனால் அந்த மக்களுக்கு தீர்வு கிடைக்குமா? அல்லது ஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி போராடுவது என்பது ஒரு சடங்காக மாறிவிடுமா?

அரசியற் கைதிகளுக்காக போராடும் தேசிய அமைப்பைச் சேர்ந்த ஒரு மதகுரு என்னிடம் கேட்டார். ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யார் ஜெனீவாவிற்கு அழைத்துச் செல்கிறார்கள்? அங்கே நடக்கும் சந்திப்புக்களால் அந்த மக்களுக்கு ஏதும் பயன் கிடைக்கிறதா? அல்லது போராடியதன் விளைவாக சுவிற்சலாந்திற்கு ஒரு பயண வாய்ப்புக் கிடைத்தது மட்டுந்தானா?’ என்று. இம்முறையும் ஜெனீவாக் கூட்டத் தொடருக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஏதாவது ஓர் அரசசார்பற்ற நிறுவனம் அழைத்துச் செல்லக்கூடும். அரசசார்பற்ற நிறுவனங்களால் அதைத்தான் செய்ய முடியும். அதற்குமப்பால் அரசாங்கத்தையும், உலக சமூகத்தையும், ஐ.நாவையும் அசைக்கத்தக்க விதத்தில் போராடுவது என்று சொன்னால் அதற்கு செயற்பாட்டியக்கங்கள் வேண்டும். அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் வேண்டும்.

சுமார் பத்தாண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் பெரும்பாலான செயற்பாட்டு இயக்கங்கள் அல்லது தலைவர்கள் தத்தமக்கேயான சௌகரிய வலயத்திற்குள் (உழஅகழசவ ணழநெ)நின்றுகொண்டு போராட முற்படுகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், காணிக்காகப் போராடும் மக்களுக்கும் தீர்வு கிடைக்காமைக்கு இதுவும் ஒரு காரணம். இப் போராட்டங்கள் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டவர்களாலேயே முன்னெடுக்கப்படுகின்றன. கொள்கைத் தெளிவுடைய செயற்பாட்டியக்கங்களோ கட்சிகளோ இப்போராட்டங்களை முழுமையாக வழிநடத்துவதில்லை. தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய ஆகப்பிந்திய கட்சியாகிய விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் அவ்வாறான மக்கள் மைய செயற்பாட்டு ஒழுக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

இவ்வாறானதோர் பின்னணிக்குள்தான் 40வது ஜெனீவாக் கூட்டத்தொடர் இம்மாதம் 25ம் திகதி தொடங்குகிறது. காணாமல் போனவர்களின் விவகாரத்தில் அரசாங்கம் ஓர் அலுவலகத்தை (ஓ.எம்.பி;) திறந்திருக்கிறது. 2016ல் இதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து அதற்குரிய ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர். அதோடு அவ்வலுவலகத்தை அமைப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. அவ்வலுவலகத்தை தமிழ்ப் பகுதிகளில் திறக்குமாறு அல்லது ஓர் உப அலுவலகத்தைத் திறக்குமாறு கேட்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் அசையவில்லை. பதிலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கென்று இரண்டு வெளித்தொடர்பு அலுவலகங்களை முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும் திறந்து வைத்திருக்கிறார்கள்.

காணாமல் ஆக்கப்படடவர்களை தேடி அறிவது மற்றும் இழப்பீட்டை வழங்குவது ஆகியவற்றுடன் ஓ.எம்.பியின் செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் தொடர்பில் ஓ.எம்.பி. சரியெனக் கருதினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும். அவ்வாறு குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கென்று ஒரு விசேட வழக்குத் தொடுனரை நியமிக்குமாறு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் பரிந்துரை ஒன்றைச் செய்திருந்தது. அரசாங்கம் அப்பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ஜஸ்மின் சூகாவின் அமைப்பும் மற்றொரு அமைப்பாகிய மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக் குழுவும் காணாமல் ஆக்கப்படடவர்களின் விடயத்தில் ஈடுபாடு காட்டிய போதும் ஓ.எம்.பி.அவர்களுடன் சேர்ந்து இயங்கத் தயாராக இல்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் ஐ.நாவிற்கும் உலக சமூகத்திற்கும் எதையாவது செய்து காட்ட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு உண்டு. அதனால்தான் ஓர் அலுவலகத்தை திறக்க வேண்டி வந்தது. அப்படித் திறப்பதை மகிந்தவிற்கு ஆதரவான அஸ்கிரிய பீடம் அப்பொழுது எதிர்த்தது. அவ்வலுவலகம் போர்க்குற்றங்களை விசாரிக்காது என்று ரணில் விக்கிரமசிங்க அஸ்கிரிய பீடத்திற்கு உறுதியளித்தார். அவர்கள் குற்றவாளிகளை விசாரிப்பார்களோ இல்லையோ முதலில் பாதிக்கப்பட்ட மக்களையாவது விசாரித்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. அப்படி விசாரித்தால் காணாமல் ஆக்கியது யார்? அதற்கு உத்தரவிட்டது யார்? போன்ற தகவல்கள் ஓர் உலகளாவிய ஆவணமாக்க முறைமைக்குள் ஆவணப்படுத்தப்பட்டுவிடும். நீதி கிடைக்கிறதோ இல்லையோ ஒரு நீதி விசாரணைக்குத் தேவையான சாட்சியங்கள் ஆவணமாக்கப்பட்டுவிடும்.

இதுதான் மகிந்த நியமித்த கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவிலும் நடந்தது. மகிந்தவும், ரணிலும், மைத்திரியும் உருவாக்கிய ஆணைக் குழுக்கள், அலுவலகங்கள் கண் துடைப்பானவை. ஆனால் அவற்றின் விளைவுகள் சில அவர்களுக்கு எதிராகத் திரும்பக்கூடிய ஆபத்துக்கள் தோன்றின. ரணில் – மைத்திரி அரசாங்கம் உருவாக்கிய நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொண்டு வந்தன. எனவே காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் முழுமையாக செயற்படுவதை மகிந்தவும் விரும்ப மாட்டார். ரணிலும் விரும்ப மாட்டார்.

‘அரசாங்கத்தின் துணிச்சலில் தான் ஓ.எம்.பியின் வெற்றி தங்கியிருக்கின்றது’ என்று அதன் தலைவர் சாலிய பீரிஸ் கூறியிருக்கிறார். இதை அவர் கூறியது மைத்திரி ஏற்படுத்திய ஆட்சிக் குழப்பத்திற்கு முன். இப்பொழுதோ மைத்திரி தலை கீழாக நிற்கிறார். அவர் யாருக்குமே பொறுப்புக் கூறத் தயாரில்லை. இந்நிலையில் ஓ.எம்.பி எப்படி இயங்கும்? அது பெருமளவிற்கு இணையப் பரப்பிலேயே இயங்குவதாகத் தெரிகிறது. அதில்; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரத்தைப் பிரதிபலிக்கும் சிறிய தாக்கமான காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. அக்காணொளிகளில் ஒன்றில் பின்வருமாறு வருகிறது. ‘எங்கட கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாத சமூகத்திலா நாங்கள் வாழ்கிறோம்?’ ஆனால் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்தின் போது தமது தலைவர்கள் நீதிமன்றத்தில் வாதாடி ஜனநாயகத்தை மீட்டிருப்பதாக. ஆயின் காணாமல் ஆக்கப்பட்;டவர்களின் உறவினர்களின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாத ஒரு ஜனநாயகமா அது?

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers