இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சுதந்திர தினமும் தமிழ் மக்களும் – பி.மாணிக்கவாசகம்

நாடு ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்று ஏழு தசாப்தங்களாகின்றன. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றதாக, 71 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் வெகு கோலாகலமாக கொழும்பில் கொண்டாடப்பட்டிருக்கின்றது. கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்ட பல்வகை ஊர்திகளும், படையினருடைய அணிவகுப்புக்களும், பாண்ட் வாத்திய அணி நடையும் பார்ப்போரைப் பரவசப்படுத்தியிருந்தன. ஆனால் இந்தப் பரவசம் நாடளாவிய ரீதியில் அனைத்து இலங்கையர்களுக்;கும் ஏற்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக இந்த நாட்டின் பாரம்பரிய வரலாற்றுத் தாயக உரித்துடைய தமிழ் மக்களுக்கு இந்த சுதந்திர தினமும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களும் பரவசமூட்டுவதாகவோ அல்லது மகிழ்ச்சி அளிப்பதாகவோ அமையவில்லை.

வடமாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா என பல இடங்களிலும் சுதந்திர தினம்; கரிநாளாக அல்லது துக்கதினமாக அனுட்டிக்கப்பட்டதும், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதும் இதனை எடுத்துக் காட்டியிருக்கின்றன.; துக்க உணர்வையும் எதிர்ப்பு உணர்வையும் வெளிப்படுத்தி, யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் பகிரங்கமாகவே கட்டப்பட்டிருந்தன. இவைகள், சுதந்திர தினம் குறித்த தமிழ் மக்களின்; உணர்வை பேரினவாதிகளுக்கும், அரசுக்கும், சர்வதேசத்திற்கும் பிரதிபலித்திருக்கின்றன.

ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது அனைத்து மக்களினதும் ஒருங்கிணைந்த உணர்வையும் அங்கீகாரத்தையும் பெற்றதாக இருக்க வேண்டும். ஆனால், இலங்கையின் சுதந்திர தினமானது, அத்தகைய உணர்வு நிலையில் அமையவில்லை.

சிங்கள மக்களின் பொதுவான பேரினவாத மன விருப்புக்கும், அரசியல் ரீதியான மகிழ்ச்சிக்கும் உரியதாகவே இலங்கையின் சுதந்திர தினம் திகழ்கின்றது. ஆட்சி முறையில் நிலவுகின்ற ஊழல்கள், நிர்வாகத் திறமின்மை காரணமாக, குறுகிய தனி நபர் மற்றும் கட்சி ரீதியான அதிருப்திகளுக்கு அமைய பெரும்பான்மை இன மக்களில் ஒரு சிலருக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம் அவசியமற்றதாக, மக்களுடைய பணத்தை வீணடிப்பதாக அமைந்திருக்கக் கூடும். இத்தகைய உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்க முடியாது என்று கூறுவதற்கில்லை.

ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், இலங்கையின் சுதந்திர தினம் என்பது கௌரவத்திற்குரிய ஒன்றாகவோ போற்றுதலுக்குரிய ஒன்றாகவோ அமையவில்லை. இந்த நாட்டின் பாரம்பரிய குடிமக்களாக இருந்த போதிலும், பெரும்பான்மை இன மக்களுடன் சரிசமமாக வாழ்வதற்குரிய வழிவகைகள் மறுக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.

தமிழ் மக்களுக்கு உரிய வாய்ப்புக்களும் வசதிகளும் இருக்கின்றன. அவர்கள் பேரினவாதிகளுடன் இணங்கி, இணைந்து வாழ்ந்தாலே போதும். ஆனால் அவர்கள் அதனைச் செய்கின்றார்களில்லை. இனவாத ரீதியில் பிரதேச வாதம் பேசுவதையும், இனவாத அரசியல் செய்வதையுமே அவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் நாட்டில் இனப்பிரச்சினை எழுவதற்கு அவர்களே காரணமாக இருக்கின்றார்கள் என்று பேரினவாதிகள் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தி வருகின்றார்கள்.

ஆனால் உண்மையில் சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களுக்கு எதிராக நன்கு திட்டமிடப்பட்ட மறைமுகமான ஓர் இன ஒடுக்கு முறை நடவடிக்கை சிங்களப் பேரினவாதிகளினால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த உண்மையை மேலோட்டமான பார்வையில் அறியவும் முடியாது. உணரவும் முடியாது. அத்தகையதோர் இராஜதந்திர நடவடிக்கையாகவே அது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நாட்டின் இரண்டு பெரும் தேசிய அரசியல் கட்சிகளாகக் கருதப்படுகின்ற ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சியைப் பிடித்து, நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கான அதிகாரப் போட்டியில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டுமே அவர்களுக்கிடையில் இந்தப் போட்டி நிலவுகின்றது. ஆனால்; சக குடிமக்களாகிய தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் உரிமைகளையும் மத சுதந்திரத்தையும் வழங்குவதற்கு அவர்களில் எவருமே தயாராக இல்லை. அந்த உரிமைகளை மறுத்து, அவர்களை, தமது தயவில் தங்கி வாழ்பவர்களாகவும், தங்களை மீறிச் செல்ல முடியாதவர்களாகவும் வைத்திருப்பதில் இரு தரப்பினருமே தங்களுக்குள் ஒற்றுமையாகவே செயற்பட்டு வருகின்றார்கள். இது காலம் காலமாக நடைபெற்று வருகின்றது.

ஒரே நாடு ஒரே இனம் என்பதே சிங்களப் பேரினவாதிகளின் ஒட்டுமொத்தமான அரசியல் இலக்காகும். சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றிவிட வேண்டும் என்பதில் இரண்டு தேசிய அரசியல் கட்சிகளுமே முன்னுரிமை அடிப்படையில் மறைமுகமானதோர் அரசியல் பொது நோக்கத்தைக் கொண்டு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.

அவ்வப்போது ஏற்படுகின்ற அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்சியில் உள்ள அரசியல் கட்சி சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதற்கு முயற்சிக்கும்போது, எதிர்க்கட்சியில் இருக்கின்ற மற்ற அரசியல் கட்சி அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த முயற்சியை முறியடிப்பதே வழக்கமான அரசியல் நடவடிக்கையாகும். நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இதனை மரபு ரீதியானதொரு நடவடிக்கையாகவே கைக்கொண்டிருக்கின்றன. இத்தகைய அரசியல் போக்கின் பின்னணியில் தமிழ் மக்களை இன ரீதியாகச் செயலற்றவர்களாக்குவதற்கும், அவர்களது தாயக அரசியல் உரிமை நிலைப்பாட்டைத் தகர்த்து அழிப்பதற்கும், நேர்த்தியான மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று நீண்ட காலமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் தந்திரோபாய ரீதியில் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது.

நல்லுறவுமில்லை பல்லினத் தன்மையுமில்லை

அரசியல் உரிமைக்கான தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தினால், முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. யுத்தத்தினால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகினார்கள். ஆனால், யுத்தம் மூள்வதற்குக் காரணமாகிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்குரிய பொறுப்பை அரசுகள் நிறைவேற்றத் தவறிவிட்டன. தவறிவிட்டன என்பதிலும் பார்க்க அதில் நாட்டம் கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.

அரசியல் தீர்வை இலக்காகக் கொண்டு, யுத்த மோதல்களின்போது சாதாரண மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்பேற்று, நல்லிணக்கத்தை உருவாக்கி, நீதியையும் உரிய நிவாரணத்தையும் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். யுத்தம் முடிந்த சூட்டோடு சூடாக இதனையே ஐநாவும் சர்வதேசமும் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியிருந்தன. ஆனால், அந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசுகள் முன்வரவில்லை. மாறாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த மக்களை மேலும் மேலும் இன ரீதியாக மலினப்படுத்தி, அவர்களை நெருக்குதல்களுக்கு உள்ளாக்கி ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

 

ஐநா மனித உரிமைப் பேரவையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறுவதற்கு இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் உரிய வேகத்தில் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக பின்னடிக்கின்ற செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தியபோது, அதனை ஏற்க மறுத்து கலப்புப் பொறிமுறையைப் பின்பற்றுவதற்கு இணங்கிய போதிலும், அதனை நிறைவேற்றுவதைப் புறந்தள்ளி, உள்ளக விசாரணைகளையே நடத்த முடியும் என்று அரசு அடம் பிடித்து வருகின்றது.

நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக மத, இன ரீதியான ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கே திரைமறைவில் ஆக்கமும் ஊக்கமும் வழங்கப்படுகின்றது. இன நல்லுறவை ஏற்படுத்துவதிலும். அதனை வளர்த்தெடுப்பதிலும் அக்கறையற்ற போக்கையே காண முடிகின்றது. இன ரீதியான நல்லுறவை ஏற்படுத்தி பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு என்ற அடிப்படையில் சமத்துவமுடைய பல்லின நாடாக நாட்டை முன்னேற்றிச் செல்வதில் பேரினவாதிகளுக்கும், அரச தரப்பினருக்கும் நாட்டமே கிடையாது.

தமிழ் மக்களை அரசியல் ரீதியாகச் சின்னாபின்னப்படுத்தி, அவர்களது தாயகக் கோட்பாட்டு நிலைமையைச் சீரழித்து, அடையாளமற்றவர்களாக்குவதற்கு நீண்டகால அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் கோட்பாட்டு ரீதியில் தமிழ் மக்கள் இறுக்கமாகக் கட்டிக்காத்து வந்த ஒற்றுமையைச் சிதைப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி தந்திரோபாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இன, மதவாத ஆக்கிரமிப்பு

தமிழ் மக்களின் அரசியல், வடக்கும் கிழக்கும் இணைந்த பூர்வீகத் தாயகக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சியும் பகிரப்பட்ட இறையாண்மையுமே அவர்களது அரசியல் அபிலாசை. இதன் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. இது சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. சிங்கள மக்களுடன் ஒரே நாட்டில் இணைந்து வாழ வேண்டும் என்ற அரசியல் கோட்பாட்டுக்கு எந்த வகையிலும் எதிரானதுமல்ல. இது, தங்கள் பிரதேசங்களில் தாங்களே தமது காரியங்களுக்குப் பொறுப்பாக இருந்து நிர்வகிக்க வேண்டும் என்ற சாதாரண அரசியல் நிலைப்பாடு.

ஆனால் அதனை தமிழ் மக்கள் தனிநாடு ஒன்றை உருவாக்கிக் கொள்ளவே முயற்சிக்கின்றார்கள். தனிநாடு உருவாகினால், அது சிங்கள மக்களுடைய மண்ணைப் பறிப்பதாக அமையும். அவர்களுடைய இருப்புக்கே ஆபத்தாக முடியும் என்ற பொய்ப்பிரசாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் நீண்டகாலமாக முன்னெடுத்து, அவர்களுடைய மனங்களில் இனவாத மதவாத நஞ்சூட்டப்பட்டிருக்கின்றது. இந்த நஞ்சு முளைத்து, செடியாகிக் கொடியாக வளர்ந்து சிங்கள மக்கள் மத்தியில் வியாபித்திருக்கின்றது.

இதனை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழ்ப் பிரதேசங்களில் மத ரீதியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது தமிழர்களின் பூர்வீகக் காணிகளையும் பிரதேசங்களையும் கபளீகரம் செய்கின்ற இன ரீதியான மிகவும் ஆபத்தான கைங்கரியமாக இடம்பெற்று வருகின்றது.

வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் பூர்வீக தாயகப் பிரதேசமாகும். வரலாற்று ரீதியாக இந்த மண்ணுரிமை பேணப்பட்டு வந்துள்ளது. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னணியில் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்கான வேலைத்திட்டமும் இணைத்து முன்னெடுக்கப்பட்டது.

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டம் திட்டமிடப்பட்டவகையில் கல்லோயா குடியேற்றத் திட்டம் போன்ற வேலைத் திட்டங்களின் மூலம் தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. இதனால், அங்கு பெரும்பான்மையாக இருந்த தமிழ் மக்கள் இப்போது சிறுபான்மையினராக மாற்றப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம், அம்பாறை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் தமிழ் மக்களின் இனப்பரம்பல் சிதைக்கப்பட்டு சிங்கள மக்களின் குடிப்பரம்பல் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரம் வடக்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் படிப்படியாக மாறி மாறி ஆட்சி புரிந்த அரசுகளினால்; முன்னெடுக்கப்பட்டதன் விளைவாகவே மணலாறு என்ற வெலிஓயா என்ற சிங்கள மக்களைக் கொண்ட மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள மக்களைக் கொண்ட இந்தப் பிரதேசத்தை திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லைப்பிரதேசங்களை ஊடுருவி விரிவுபடுத்துவதற்கான திரைமறைவு நடவடிக்கைகைள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் செயல் முனைப்புடைய மையமாக முல்லைத்தீவு மாவட்டமும், வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவாகிய நெடுங்கேணி பிரதேசமும் நல்லாட்சி அரசாங்கத்தினால் மாற்றப்பட்டிருக்கின்றன.

அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மிகவும் துணிகரமான முறையில் இங்கு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு இராணுவத்தை அரசு கவசமாகப் பயன்படுத்தி வருகின்றது. பொலிசாரும் அவ்வப்போது தேவைக்கு ஏற்ற வகையில் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான கட்டமைப்பு என்ற ரீதியில் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்படுகின்றனர். நெடுங்கேணி ஊற்றுக்குளம் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு நீராவியடி ஆகிய இடங்கள் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளின் முக்கிய தளங்களாக விளங்குகின்றன.

நீராவியடியும் ஊற்றுக்குளமும்

நீராவியடியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ள இடத்தில் புதிதாக புத்தர் சிலையொன்றை அமைத்து, அங்கு பௌத்த மத ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. காலம் காலமாக தமிழ் மக்கள் வழிபட்டு வந்த அந்த பிள்ளையார் கோவிலுக்குப் பொங்கல் தினத்தன்று பொங்கலிட்டு வழிபாடு செய்வதற்காகச் சென்ற தமிழ் மக்களை அங்கிருந்த பௌத்த பிக்கு ஒருவர் அவர்களின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்து, அவர்களை அச்சுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தவணை இடம்பெறவிருந்த தினத்திற்கு முதல் நாளன்று அங்கு அவசர அவசரமாக நிறுவப்பட்ட பெரிய புத்தர் சிலையொன்றை அந்த பௌத்த பிக்கு திறந்து வைத்துள்ளார்.

இந்த அத்துமீறிய செயற்பாட்டிற்கு தொல்பொருள் திணைக்களமும், பொலிசாரும் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது என அந்த நீராவியடி பிள்ளையார் கோவில் அமைந்துள்ள இடத்திற்கு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் தொல்பொருள் திணைக்களம் உரிமை கோரியிருந்ததன் அடிப்படையிலும், அதன் ஆதாரத்தையும் கொண்டு இந்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமான நடவடிக்கை என்று நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து. இந்துக்களும்சரி, பௌத்தர்களும் சரி அங்கு வழிபடுவதற்காகச் செல்லலாம். ஆனால் எந்தவிதமான நிர்மாண வேலைகளையும் செய்ய முடியாது என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கட்டளை இட்டுள்ளது.

வடபகுதியின் இராணுவ முகாம்களுக்கு பௌத்த பிக்கு ஒருவரும் வரவழைக்கப்பட்டு, புத்தர் சிலையை நிறுவி பௌத்த மத ரீதியான வழிபாடுகள் மேற்கொள்வதை இராணுவத்தினர் வழக்கமான நடவடிக்கையாகக் கொண்டிருக்கின்றார்கள். அந்த இடங்களில் அமைந்துள்ள இந்து ஆலய வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவி அடாவடித்தனமாக ஆக்கிரமிப்பு செய்கின்ற நடவடிக்கைகள் ஏற்கனவே, திருக்கேதீஸ்வரம், முருங்கன், கனகராயன்குளம் போன்ற வேறு வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஓமந்தை பிள்ளையார் கோவிலில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட புத்தமத ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, இராணுவம் அவிடத்தைவிட்டு அகன்ற பின்னர், சமாதானமான முறையில் அங்கிருந்து அந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது. ஆனால் ஏனைய இடங்களில்; அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்து ஆலயங்கள் மட்டுமல்லாமல் கத்தோலிக்க மக்களின் பிரசித்திபெற்ற புராதன வழிபாட்டு இடமாகிய மடுக்கோவில் பிரதேசத்திலும், இத்தகைய புத்தர் சிலை நிறுவுகின்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் நெடுங்கேணி ஊற்றுக்குளம் பகுதியில் அமைந்துள்ள கச்சல் சமளங்குளம் என்ற காடடர்ந்த இடத்தில் தன்னந்தனியாக நிலைகொண்டுள்ள இரண்டு பௌத்த பிக்குமார்கள் புத்தர் சிலையொன்றை நிறுவி பௌத்த மதத்தை நிலைபெறச் செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இந்த இடத்திற்கு விஜயம் செய்த நெடுங்கேணி பிரதேச சபையினரும், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும், வடமாகாணசபை உறுப்பினருமாகிய டாக்டர் ப.சத்தியலிங்கமும் அங்குள்ள நிலைமைகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர்.

ஆபத்தான நிலைமையின் அடையாளங்கள்……..

வவுனியா மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் அனுராதபுரம் கமநலசேவைத் திணைக்களத்தினர் சிங்களக் குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக டாக்டர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

‘வவுனியா வடக்கின் கிழக்கு எல்லையில் உள்ள கிராமத்திற்கு போயிருந்தேன். யுத்தம் காரணமாக பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட வவுனியாவிற்குச் சொந்தமான கச்சல் சமளன்குளம் கிராமத்தின் குளம் அனுராதபுர கமநலசேவைத் திணைக்களத்தினரால் புனரமைக்கப்பட்டு சப்புமல்தென்ன எனப்பெயரிடப்பட்டு புதிய சிங்களக் குடியேற்றத்திற்குத் தயாராவதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அயல் குடியேற்றக் கிராமமான போகஸ்வௌவில் (கொக்கச்சான்குளம்) வாழ்கிண்ற காணியற்ற குடியேற்றவாசிகளுக்காகப் புனரமைப்புச் செய்யப்பட்ட இந்த குளத்தின் கீழ் உள்ள 200 ஏக்கர் வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட இருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.

அடர்ந்த மக்கள் நடமாட்டமற்ற இக் காட்டுப்பகுதி மகாவலி-எல் வலய ஆக்கிரமிப்பிற்குள் சிக்கி நில அபகரிப்பிற்கான இன்னுமொரு உதாரணமாவதை கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது.

நெடுங்கேணி நகரத்திற்கு கிழக்கே 15 மைல் தூரத்தே உள்ள வெடிவைத்தகல் கிராமத்திற்கு தென்கிழக்கே அண்ணளவாக 5 மைல் தூரதில் அமைந்துள்ள காட்டு யானைகள் நடமாட்டமுள்ள இப்பிரதேசத்திற்கு செல்லும் வழியில் நாம் சிறுத்தைப்புலி ஒன்றையும் சந்திக்க நேரிட்டது.

புனரமைக்கப்பட்ட கச்சல் சமளன்குளத்திற்கு மேற்கே உள்ள ஊற்றுக்குளத்திற்கும் இடைப்பட்ட 3 மைல்கள் வரையான அடர்ந்த காட்டுப்பகுதியூடாகச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் காணித்துண்டுகள் துப்பரவு செய்யப்பட்டு சிறுகுடிசைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

புனரமைக்கப்பட்ட குளத்தின் கீழ்ப்பகுதியில் அழிவடைந்த பல புராதன சின்னங்கள் காணப்படுகிண்றன. அங்கே பல கருங்கல் தூண்களும் செங்கற்களால் அமைத்து அழிவடைந்த கூம்பு வடிவிலான சிதைவுகளும் காணப்படுகின்றன. அவ்விடத்தில் புத்தபிரானுடைய சீமந்தினாலான வர்ணம் பூசப்பட்ட சிலை அண்மைக்காலத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு இரு இளம் பௌத்த துறவிகளையும் காணமுடிந்தது’ என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் டாக்டர் சத்தியலிங்கம் விபரித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அத்துமீறிய இத்தகைய சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் குடாநாட்டின் கிழக்குப் பகுதிகளாகிய கட்டைக்காடு வெற்றிலைக்கேணி உள்ளிட்ட பிரதேசங்களை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் என பிரகடனப்படுத்தி எல்லைக் கற்களைப் பதித்திருக்கின்றார்கள். இதனால் இந்தப் பிரதேசத்தல் காலம் காலமாக வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள், சொந்த இடங்களில் இருந்து தங்களை வெளியேற்றுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை அரசாங்கம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக மேற்கொண்டிருக்கின்றதா என்று அச்சமடைந்திருக்கின்றார்கள்.

நாட்டின் தலைநகராகிய கொழும்பிலும் நாட்டின் வேறு பல தென்பகுதி நகரங்களிலும் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இன அழிப்புத் தாக்குதல்களினால் தமிழ் மக்களின் பொருளாதாரம் நிலைகுலைந்தது. அதன் பின்னர் தலைநகரின் வர்த்தக கேந்திர நிலையமாக விளங்கிய புறக்கோட்டையின் நாலாம் குறுக்குத்தெரு பிரதேச வர்த்தக நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் சீர்குலைக்கப்பட்டு அவற்றை சிங்களப் பிரதேசமாகிய நுகேகொடை பகுதிக்கு அரசு இடம் மாற்றியது. அதேபோன்று புறக்கோட்டையின் பாரம்பரிய மீன்சந்தையும் சிங்களப் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டது. இவை அனைத்தும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கான நடவடிக்கைள்.

அதேபோன்று முஸ்லிம்கள் மீது மதவாத இனவாத நோக்கத்தில்; தென் மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல வர்த்தக நிலையங்கள் அழிக்கப்பட்டன. இதன் மூலம் முஸ்லிம் சமூகம் கள் வர்த்தகத்துறையில் பேரழிவையும் பின்னடைவையும் சந்திக்க நேர்ந்தது.

நாட்டின் தென்பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தமிழ் மக்களின் பொருளாதார வளத்தையும் வலுவையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட – மேற்கொள்ளப்படுகின்ற அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களும், புத்தர் சிலைகளின் ஊடான ஆக்கிரமிப்புக்களும், அரசியல் உரிமைக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் தாயக மண்ணில் அவர்களுடைய இருப்பையே ஆட்டம் காணச் செய்வதாக அமைந்திருக்கின்றன.

இத்தகைய நடவடிக்கைகள் எல்லாமே தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற இன அழிப்பு நடவடிக்கையின் அடையாளங்களைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. மிகவும் ஆபத்தான இந்த நிலைமைகள் குறித்து, தமிழ் மக்களின் அரசியல் வழிகாட்டிகளாக உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் எந்த அளவுக்கு நிலைமைகளின் தீவிரத் தன்மையை உணர்ந்திருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. அத்துடன் தமிழ் மக்களின் பாதுகாப்பான எதிர்கால இருப்புக்கு, தொலைநோக்குச் சிந்தனையுடன் எத்தகைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றார்கள் என்பதும் தெரியவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap