இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

நானும் பீட்சாவும், துரித உணவில் சிக்கித் தவிக்கும் சமூகமும் – ந.சர்மியா…

அம்மா….

நான் இண்டைக்கு பீட்சா சாப்பிட்டே ஆகனும். பீட்சா இல்லாட்டிக்கு இண்டைக்கு சாப்பிட மாட்டன்….. என அம்மாவிடம் அடம் பிடித்து விட்டு பீட்சா சாப்பிட காசை வாங்கிக் கொண்டு சாப்பாட்டுக் கடைக்கு அவாவாடு சென்றேன்… கடைக்குள் சென்றதும் வட்ட வடிவில் மேசை கதிரை போடப்பட்டு அழகாக இருந்தது. நானும் அக் கடையின் அலங்காரங்களை ரசித்துக் கொண்டு நாற்காலியில் போய் உட்காந்தேன். ஏதோ சாதித்தது போல் ஒரு சந்தோசம் அந்த பெருமிதத்தோடு இருக்க சிவப்பு நிற மேற்சட்டையும் கறுப்பு நிற பான்ட் போட்டு அங்கு பணிபுரியும் அழகான பையன் என் அருகில் வந்தான். “மேடம் ஓடர் ஃப்ளீஸ்” என கேட்க நானும் சிறு புன்னகையோடு ஒரு பீட்சா என ஒரு பெருமிதத்தோடு சொல்லிவிட்டு காத்திருந்தேன்….. என் எதிர் பக்கத்தில் இரு வேற்று நாட்டவர் இடியப்பத்தை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்ததும் எனக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி ….. என்னை அறியாமல் என் மனம் துரித உணவின் பக்கம் தேடத்தொடங்கியது……

உலகமயமாக்கல் பெற்றெடுத்த குழந்தையே துரித உணவு ஆகும். துரித உணவு என்பது புரதம், விற்றமின், கனினச் சத்துக்கள் இல்லாத, அல்லது முற்றிலும் இல்லாத, உப்பும் கொழுப்பும் கொண்ட உணவுகளே துரித உணவாகும். ( National institutes of health )இவ் துரித உணவு கலாசாரத்திற்கு இன்று நாம் அடிமையாகி இருக்கிறோம் கலோரிகள் பல சேர்ந்து கிலோரிகளாக மாறி அதுவே துரித உணவு ஆவதால் சிறியவர்களும்,இளையவர்களும் உடல் பலம் இழந்து உணவு தேவையை விட மருந்து தேவையை அதிகம் எதிர்பார்க்கும் ஊளைச்சதையர்களாக மாறிவரும் பரிதாபங்கள் இன்று ஏராளம்.

வீரமான, ஆரோக்கியமானவர்கள் வாழ்ந்த இப் பூமியில் இன்று சக்தியற்ற, வலுவிழந்த, ஊளைச்சதையர்களாக நாம் வாழ காரணம் என்ன? நம்மீது திணிக்கப்படுகின்ற ஒரு முறையற்ற கலாசாரமே.. இவ் புதுவகை உணவுக் கலாசாரமானது வாழ்க்கை இலட்சியங்களை தொலைக்க கூடிய அளவிற்கு நம் கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் சுறுசுறுப்பற்ற சமூகத்தை உருவாக்குமளவிற்கு பிற நாட்டு நிறுவனங்கள் துரித உணவு கலாசாரத்தை திணித்து வரும் சூழல் நிலவுகிறது. எங்கு பார்த்தாலும் துரித உணவுக்கான விளம்பரங்கள், மிகைப்படுத்தல்கள் . இதனால் வளரும் வளர்ந்து வரும் சிறார்களும், இளையவர்களும் பாரம்பரிய உணவுகளை மறந்து துரித உணவுக்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியே போனால் சக்தி மிக்க சமுதாயம் எப்படி உருவாகும்…..

“மேடம் பீட்சா” என்று அந்த பையன் அழைக்கும் குரல் கேட்டது. என் சிந்தனையை நிறுத்தி விட்டு என் மனம் பீட்சாவின் பக்கம் திரும்பியது…. அன்று தான் முதல் முதலாக பீட்சாவை பார்த்தேன் பார்த்ததும் ஆசையாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். ஒரு வாய் சாப்பிட்டதும் ச்சே…… பச்சை இலைகள், அவியாத மாவு, ஒரு மொச்சை மணம் இதுவா பீட்சா …. இதுக்கு தான் ஆசைப்பட்டனா? ஜயோ காசை வீணாக்கி விட்டனே என்ற கவலை ஒரு புறம்.மறுபுறம் என்னை நினைக்க எனக்கே சிரிப்பு …. அப்போதுதான்

” இது எப்பிடிடா இருக்கு….. ச்சே….

இதுக்கு எங்க ஆயா சுட்டுத்தந்த தோசையே மேல்…..” என்ற காக்காமுட்டை திரைப்படம் நினைவுக்கு வந்தது. அப்படியே பீட்சாவை வைத்துவிட்டு எழுந்து வீடு நோக்கி புறப்பட ஆரம்பித்தேன்.

சாலையின் இருமருங்கிலும் துரித உணவகங்கள்… அழகான தோற்றத்தோடு கலர் கலராக விளம்பர பலகைகள் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளை சமாதானப்படுத்த பள்ளிக்கு போகும் வழியில் பீட்சா, பர்க்கர்களை வாங்கிக் கொடுக்கும் சில பெற்றோர்கள்…. இன்னொரு பக்கம் “இன்டைக்கு ஸ்கூலுக்கு போட்டுவா… இரவுக்கு சாண்ட்விச் வாங்கி தாறன்……” என்று பிள்ளைக்கு ஆசையூட்டி வழியனுப்பும் பெற்றோர்கள்…..என்னடா இந்த உலகம். காசை கொடுத்து நோயை வாங்குகிறார்கள்.

துரித உணவை அதிகம் நாடுபவர்கள் யார்? என பார்த்தால் அதிகமாக சிறுவர்களும் , இளைஞர்களுமே…. ஆகும்.

“எனக்கு பிடிச்ச சாப்பாடு நூடில்ஸ், பர்க்கர் அம்மா ஸ்கூலுக்கு காலைல கொண்டு போக இதுதான் தாறவா….” (அபிஷன்- 7 )

“ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நாங்கள் ஹோட்டலுக்கு போய் பிள்ளையள் சிப்ஸ், பீட்சாவும் நானும் கணவரும் ஃப்ரைட்ரைஸ் சாப்பிடுவம் .” (சிந்துஜா- 35 )

“பிறந்தநாள் கொண்டாட்டம்,மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நாங்க நண்பர்களோட பீட்சா கட் ,கே எப் சி க்கு தான் போவம்.அதான் இப்போ கெத்து” (ஆதர்ஷ் – 20)

இவற்றை எல்லாம் பார்க்கும் போது துரித உணவுக்கு எம் சமூகம் அடிமையாகி இருப்பதும் தெரிகிறது. பெற்றோர்கள் சமாதானம் செய்யவும், ஆடம்பரத்திற்காகவும் துரித உணவுகளை சாப்பிட அனுமதிக்கிறார்கள். பீட்சா, பர்க்கர், சான்ட்விச், ஃப்ரைட் ரைஸ், சமோஷா, நூடில்ஸ் என ஊட்டி வளர்க்கிறார்கள் .பெற்றோர்களே இதனால் பர்க்கர் போன்ற உருண்டை தோற்றத்தில் தான் உங்கள் குழந்தைகளையும் பார்க்கலாம். இவ் துரித உணவில் இருக்கும் அசைவ துண்டுகள் எப்போது சமைக்கப்பட்டது? என்று உறுதியாக தெரியாது, இவ் உணவுகளில் சேர்க்கப்படும் அயனமோட் போன்ற இரசாயனங்களால் எம் உடலுக்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றி அறிந்திருக்க மாட்டீர்கள்.

வேக உணவை உண்பதால் எமது உடலுக்குள் வேகமாக பல நோய்கள் வாடகையின்றி குடியிருக்கின்றது. காரணம் சரியான உடல் உழைப்பு இல்லை, உணவுத் தேர்வு இன்மை ஆகும். சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை விரட்டி விட்டு ” மினி சைஸ் சாண்ட்விச், மீடியம் சைஸ் பர்க்கர், லார்ஜ் சைஸ் பேமிலிபீட்சா , ஃப்ரைட் ரைஸ்….. ” என துரித உணவை வகை வகையாக சிறியயவர் முதல் பெரியவர்கள் வரை உண்கிறார்கள். அதே போல நோய்களும் வயது வேறுபாடின்றி ஒட்டிக் கொள்கின்றது. எடுத்துக்காட்டாக
” 25 வயது இளைஞன் மாரடைப்பால் மரணம்”
” 3 வயது சிறுமி நீரிழிவு நோயினால் பாதிப்பு”
” வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண் திடீரென மயக்கம்”
இவ்வாறு நோய்களின் தாக்கமும் வேகமாக தொடங்கிவிட்டது.

துரித உணவை உட்கொள்வதால் ஏற்படும் தாக்கங்களை பார்ப்போமானால்

“பல கலோரிகள் நிறைந்த உணவுகள் உணர்ச்சிகளுக்கு மகிழ்ச்சியூட்டி ஊளைச்சதையர்களாக உருவாக்கும்.”

“அவசரத்துக்கு ரெடிமேட் ஆக கிடைக்கும் ஆனால் ஊட்டச்சத்து குறைந்து சர்க்கரை நோய் நிரந்தரமாகிவிடும்.

தித்திக்கும் சுவைகளில் ஹோர்மோன்களை செயலிழக்க வைக்கும்.

தின்ன தின்ன தித்திக்கும்
ஞாபக சக்தி குறைந்து விடும் தின்றவுடன் பசியெடுக்கும் தலைவலி குடிகொள்ளும்

ஹோர்மோன்கள் தூண்ட வேக உணவுகள் உட் செல்ல
உம் சிந்தை மறந்து தவறான வழி சென்றிடுவீர்.”

இவ்வாறு துரித உணவை உட்கொள்வதால் துரித உணவு துன்பங்களாக மாறி ஆஸ்பத்திரியின் அலப்பறைகளாக மாறி வருகின்றது. இன்று உடல் நலம் மிக்கவர்களை விட உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் தங்கியிருப்பவரே அதிகம்.

இந்த உணவுகளை உண்பதால் பல்வேறு அபாயம் உள்ளதாக மருத்துவர்களும்,ஆராய்ச்சியாளர்களும் நிரூபித்துள்ளனர்.” இளம் தலைமுறையினர் தொடர்ந்து துரித உணவுகளை உட்கொண்டு வருவதால் ஐம்பது வயது வரும் போது புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.” எனவும் ” இலங்கையில் 65 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டின கிராம புறங்களில் 10% ஆனவர்களும் நகரப்புறங்களில் 15 வீதமானவர்களும் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்” என உலக சுகாதார ஸ்தாபன புள்ளிவிபரம் கூறுகிறது. எனவே இவ் துரித உணவுகள் ருசியை தந்து பசியை அடக்க கூடிய உணவுகளாக இருந்து எம் சக்தியை உறுஞ்சும் விஷமாக இருக்கின்றதே ஒழிய எமக்கு ஏற்ற உணவாக இல்லை.

ஆகவே இவ் விஷ உணவுகளில் இருந்து விடுதலை பெற வேண்டும் எனில் பாரம்பரிய உணவுகளை கைக்கொள்ள வேண்டும். நம் பாரம்பரிய உணவு முறைக்கு தனித் தன்மை இருந்த காலம் நிச்சயம் உண்டு. பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் போது தினை, வரகு, சாமை, பயறு, எள்ளு போன்ற தானியங்களும் கஞ்சி, களி,ஒடியல் கூழ், சோறு என உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளையே உண்டு ஆரோக்கியமான வாழ்கையை வாழ்ந்தார்கள். இதனை சொல்லும்போது எனக்கு பழைய “மதுரை வீரன்” படம் ஞாபகம் வருகின்றது. இத் திரைப்படத்தில் என்.எஸ் கிருஷ்ணன் பழைய சோற்றை சாப்பிட்டு விட்டு கஞ்சி தண்ணியை குடித்துவிட்டு ” ஏ…புள்ள…இந்த தேனாமிர்தம் தேனாமிர்தமின்னு சொல்றாங்களே ஒருவேள இந்த தண்ணியத்தான் சொல்லுவாங்களோ…” என வேடிக்கையாக கூறுவது குறிப்பிடதக்கது.

முன்னையவர்கள் பாரம்பரிய உணவை உண்டு நோய் இல்லாத ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்தார்கள். இதனால் நல்ல உணர்வுகளைப் பெற்று, உணர்வை சிந்தனையாக மாற்றி, அந்த சிந்தையை செயலாக மாற்றி நோய் நொடி அற்ற வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். எப்படி அவர்கள் மட்டும் பல குழந்தைகளை பெற்று வளர்த்து ஆரோக்கியமாக இருந்தார்கள்? எப்படி அவர்களால் மட்டும் தேவையான கடமைகளை செய்ய முடிந்தது? இன்று ஏன் நம்மால் முடியவில்லை? என்ற வினாக்கான விடைகளை தேடி ஆராய்ந்து பார்ப்பது இன்றைய நிலையில் அவசியமானதாகும்.

இன்று துரித உணவில் சிக்கிய மான்களாக அவதிப்படும் நம் சமூகத்திற்கு மாற்றம் என்பது அவசியமாகும். எம் சமூகத்தின் எண்ணங்களிலிருந்து துரித உணவுகளை அழிக்க வேண்டும். ஆகவே இத் துரித உணவுகளால்  உடையக் கூடிய நம் சந்ததியினரின் கனவுகளை மறுபடியும் மீட்டெடுப்பதற்கு நாம் பாரம்பரிய உணவுகளையே பின்பற்ற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் பாரம்பரிய உணவின் மகத்துவத்தினை உணர்ந்தால் மீண்டும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கலாம். இல்லையேல் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்கு துரித வகை உணவு பெரும் ஆபத்தையே தரும் என்பதை மறுப்பதற்கு இடமில்லை.

ந.சர்மியா
ஊடகக்கற்கைகள்
யாழ் பல்கலைக்கழகம்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers