Home இலங்கை இன்றைய தாய்மொழி நாளில், சூரியனைச் சுட்டும் சொற்கள்:::

இன்றைய தாய்மொழி நாளில், சூரியனைச் சுட்டும் சொற்கள்:::

by admin

வி.இ.குகநாதன்…

                                                   

இன்றைய தாய்மொழி நாளில் ( February 21st  ) பொதுவாக எல்லோரும் தமது மொழியின் செழுமை பற்றிச் சிந்திப்பார்கள். ஒரு மொழியின் செழுமையினைக் காட்டும் முதன்மையான கூறுகளில் ஒன்றாக அம் மொழியிலுள்ள சொல்வளம் காணப்படும். அந்த வகையில் பார்த்தால், எமது தாய் மொழியில் கதிரவனைக் (Sun)  குறிக்க  எத்தனை சொற்கள் உண்டு தெரியுமா? ஒன்றல்ல, பத்தல்ல, நூறுக்கும் மேல் உண்டு. வடமொழிச் சொற்கள் நீங்கலாகவே உண்டு.  அவ்வாறான எல்லாவற்றையும் ஒரே கட்டுரையில் பார்க்கமுடியாது. எனவே . உயிர் எழுத்துகளில் தொடங்கும் கதிரவனைக் குறிக்கும் சொற்களை மட்டுமே இக் கட்டுரையில் பார்ப்போம்.

  1. அலரி :

இதற்கான பொருளை `கதிரவன்` என பிங்கலநிகண்டு கூறுகின்றது. இந்த `அலரி` என்ற வேர்ச்சொல்லை அடிப்படையாகக்கொண்டு  அலர்கதிர்ஞாயிறு,  அலரியோன் ஆகிய சொற்களும் கதிரவனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

`திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த

அம் கயத் தடந் தாமரைக்கு அலரியோன் ஆகி,`

{(கம்பராமாயணம் -சுந்தர காண்டம்-12. பிணி வீட்டு படலம் (49)}

  1. அழலவன்:

தழல் என்றால் நெருப்பு என அறிந்திருப்போம். இந்த தழல் என்ற சொல் `அழல்` என்ற சொல்லிருந்தே வந்தது.

`அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை `

(குறள் எண்:1228)

இந்த குறளில்  அழல் என்ற சொல் நெருப்பு என்ற பொருளிலேயே இடம்பெற்றுள்ளது. இந்த அடிப்படையிலேயே அழலையுடையவன் (நெருப்பினையுடையவன்) என்ற பொருளிலேயே `அழலவன்`  என்ற பெயர் அமைகின்றது.

  1. அழற்கதிர்:

அழல் என்றால் நெருப்பு என முதலிலேயே பார்த்துள்ளோம். இந்த அழலை கதிர்களாக தெறிக்க விடுவதால் கதிரவன் `அழற்கதிர்` எனவும் பெயர் பெறும்.

  1. அனலி:

அனல் என்றால் சூடு ( கோடை வெயில் அனலாய்க் கொதித்தது).

அனலைக் கொண்டிருப்பதால் `அனலி` எனப்படுகின்றது. இதற்கான சான்றாக பின்வரும் தேவாரத்தைக் காண்க.

`ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்

அனலாடி ஆரமுதே என்றேன் நானே`

(அப்பர் தேவாரம்)

  1. ஆழ்வான்:

`ஆழ்வான்` என்ற இச் சொல் `ஆழி` என்ற வேர்ச்சொல்லினை அடிப்படையாகக் கொண்டது. `ஆழி` என்ற சொல்லிற்கு கடலைத்தவிர வேறு பல பொருள்களும் உண்டு { அரசனின் ஆணைச் சக்கரம் , கட்டளை , சக்கரம்  , மோதிரம், வட்டம், பொத்தான்}. இதில்  அரசனின் ஆணைச் சக்கரம் , கட்டளை  என்பன அரசனுடன் தொடர்புடையன. ஒரு வகையில் பார்த்தால், கதிரவனும் தனது ஒளியினால் உலகினை ஒரே குடையின் கீழ் அரசாட்சி செய்கின்றான். இந்த வகையில் கதிரவனும் ஒரு அரசனே. இந்த வகையிலேயே கதிரவன் ` ஆழ்வான்` எனவும் அழைக்கப்பட்டான்.

  1. இருட்பகை:

இருளைத் அகற்றுவதால் இப் பெயர் வழங்கப்பட்டது.

`ஊர்முதுவேலிப் பார்நடை வெருகின்

இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை`

(புறநானூறு 315)

இங்கு இருள்பகை என்பது கதிரவனையே குறிக்கின்றது.

  சிலர் இதே காரணத்திற்காக இருட்பகைவன் எனவும் அழைப்பார்கள்.

  1. இருள்வலி:

`வலி` என்ற சொல்லிற்கு இழு என்ற ஒரு பொருளும் உண்டு. எடுத்துக்காட்டாக படகில் துடுப்பினை இழுப்பதனை `துடுப்பு வலித்தல்`  என்கின்றோம். ஆகவே இருட்டை இழுத்தல் என்ற பொருளில் இப் பெயர் அமையும்.

  1. ஈரிலை:

ஈரிலை என்பதற்கு அகராதி மூன்று வகையான பொருட்களைக் கூறும். அவையாவன ஈரமான இலை, இரண்டு இலை, ஞாயிறு என்பனவாகும். இதிலிருந்து `ஈரிலை` கதிரவனையும் குறிக்கின்றது.

  1. உடுப்பகை:

`உடு` என்பது விண்மீன் எனவும் பொருள்படும். மற்றைய விண்மீன்கள் எல்லாவற்றையும் விட கூடுதல் ஒளி எமக்கு தருவதால், மற்றைய விண்மீன்களிற்கு பொறாமை என்ற அடிப்படையில் பகை என்ற பொருள் பெற்றிருக்குமோ என எண்ணுகின்றேன். செய்யுள் பயன்பாட்டினைப் படத்தில்  காண்க.

  1. எயிறிலி:

இப் பெயரானது `எயிறு` என்ற வேர்ச்சொல்லினை அடிப்படையாகக் கொண்டது. எயிறு என்ற சொல் சங்க இலக்கியங்கள் பலவற்றில் பெண்களின் கடைக்கண் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வால் எயிற்று மடமகள் – (ஐங்கு.- 48)

வால் எயிற்று – (ஐங்கு. – 198)

வால் எயிற்று – (கலி.-56)

வால் வெள் எயிறே – (குறு.-169)

வால் எயிற்றோள் – (அக.-33)

மேற்கூறிய பாடல்களில் எல்லாம் பெண்களின் கடைக்கண் வெண்மை ஒளி மிக்கது, நீர் ஊறும் இயல்புடையது என்ற அடிப்படைகளிலேயே எயிறு எனப்படுகின்றது. இதே வெண்மையான ஒளியை கதிரவனும் தருவதனாலேயே எயிறிலி எனவும் அழைக்கப்படுகின்றது.

  1. எரிகதிர்:

கதிரவன் எரிக்கின்ற கதிர்களை உடையவன்  என்ற பொருளில் `எரிகதிர்` என்ற பெயரிலும் அழைக்கப்படும்.

கோமுகி என்னும் கொழுநீ ரிலஞ்சி

இருது இளவேளில் எரிகதிர் இடபத்து`

{மணி மேகலை, 11/39.43}

  1. எல்:

`எல்` என்பதற்கு ஒளி என்ற பொருளும் தமிழில் இருப்பதால், ஒளியைத் தரும் கதிரவனையும் `எல்` குறிக்கும்.

`எல்வளி அலைக்கும், இருள்கூர் மாலை,

வானவன் மறவன், வணங்குவில் தடக்கை`

{அகநானூறு 77:15}

இந்த `எல்` என்ற வேர்ச்சொல்லைக் கொண்டு பின்வரும் பல பெயர்களை கதிரவன் பெறும்.

எல்லவன்

எல்லி

எல்லிப்பகை

எல்லிமன்

எல்லியன்

எல்லினான்

எல்லு

எல்லோன்

  1. எற்செய்வான்:

`எற்செய்வான்` என்ற சொல் கதிரவனைக் குறிக்கின்றது என்கின்றது சிலப்பதிகாரம்.

`இளையிருள் பரந்ததுவே எற்செய்வான் மறைந்தனனே` 

(சிலப். 7, 40).

  1. என்றவன்:

கழக அகராதி, கதிரைவேற்பிள்ளை அகராதி போன்ற பல அகராதிகள் `என்றவன்` என்ற சொல்லும் கதிரவனைக் குறிக்கும் என்கின்றன.

  1. என்றூழ்:

`என்றூழ் என்பது ` கதிரவன்` என்கின்றது புறநானூறு.

`என்றூழ் வாடுவறல் போல, நன்றும் நொய்தால் அம்ம தானே-மையற்`    (புறநானூறு – 75)

இப் பாடலில் என்றூழ் என்ற சொல் கதிரவனையே குறிக்கின்றது. என்றுமே எமது ஊழைத் தீர்மானிப்வன் (கதிரவன் அழிந்தால் உலகிலுள்ள உயிரினங்கள் அழியும்) கதிரவன் என்ற பொருளில் இப் பெயர் அமையும்.

  1. ஏழ்பரியோன்:

பரி என்றால் சீரான நடை. ஆகவேதான் குதிரைக்கு அப்பெயர்.

`காலே பரிதப்பினவே கண்ணே

நோக்கி நோக்கி வாளிழந்தனவே`

{குறுந்தொகை 44. வெள்ளி வீதியார்}

ஏழு குதிரைகளை (பரி) உடையவன் என்ற பொருளில் இப் பெயர் அமையும். கதிரவன் உலகினை ஒளியால் ஆளும் அரசன் என முன்பே பார்த்தோம். ஏழு குதிரைகளை உடையவன் என்பது மற்றைய அரசர்களை விட, ஒளி வழங்கும் கதிரவனைப் பெரிதாக காட்டும் தமிழ் உவமை மரபே ஆகும்.

  1. ஒளியவன்:

ஒளியினை உடையவன் என்ற பொருளில் அமையும்.

  1. ஒற்றையாழியன்:

ஆழி என்ற சொல் அரசனுடன் தொடர்புடையது என முன்பே பார்த்தோம். இந்த வகையிலேயே உலகினை ஆளும் ஒற்றையரசன் என்ற பொருளில்  `ஒற்றையாழியன்` என்ற பெயர் கதிரவனைக் குறிக்கும்.

  1. 19. ஒற்றையாழித்தேரான்:

மேலே சொன்ன ஒரே அரசன் என்ற பொருளிலேயே இப் பெயரும் அமையும்.

                   இப்போது இந்த ` ஒற்றையாழித்தேரான்`, `        `ஏழ்பரியோன்` ஆகிய பெயர் விளக்கங்களை உற்றுக்கவனித்தால், ஏழு குதிரை பூட்டிய தேரில் சூரியப் பெருமான் வலம் வரும் `புராணக்கதை`  புரியும். தமிழில் உரிய வேர்ச்சொல் விளக்கங்களுடன் வெறும் உவமையாகவே இந்த `ஏழு குதிரைகள் பூட்டிய தேர்` இடம்பெற்றுள்ளது. இதனையே பின்னர் தமிழிலிருந்து புராணங்கள் படி(Copy) எடுத்துக்கொண்டன.

நான் மேலே குறிப்பிட்ட சொற்களிற்கான பொருள் `கதிரவன்` என அகராதிகளிலிருந்து அறிந்துகொள்ளலாம் (விளக்கங்கள் இருக்காது). இப்போது இனிப் பார்க்கப்போவது சற்று வேறுபாடானது. எனவே கவனமாக அடுத்த சொல்லினைப் பாருங்கள்.

  1. இந்திரன்:

இந்து+இரியன்= இந்திரன்.

இந்து(கருமை)+ இரியன்((அகற்றுபவன்) = இருளை அகற்றுபவன்= கதிரவன்

இந்து என்ற சொல்லுக்கு கரடி,கரி என்ற பொருட்கள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. உண்மையில் இந்து என்பதன் முதன்மைப் பொருள் ‘கருமை / இருள்’ என்பதாகும். இரியன் என்பது அகற்றுபவன் என்ற பொருளில் இடம்பெறும். இதனாலேயே இருளை அகற்றும் கதிரவனின் மற்றொரு பெயராக `இந்திரன்` அமையும். மேலும் : கிழக்குத் திசைக்கு ‘இந்திரி’, ‘ஐந்திரம்’ என்ற பெயர்களும் உண்டென்று சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. இப்போது ஒரு குறளைப் பார்ப்போம்.

`ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி`    {குறள் எண்:25}

“ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்” என்றே குறளிற்கு பலரும் பொருள் கூறுகின்றார்கள். ஆனால் இந்திரனே(Indra) பொதுவாக புலன்களை அலையவிட்டதாகப் புராணங்கள் (அகலிகை, ஆயிரங் கண்கள்…) கூறும்போது, எவ்வாறு இந்திரன் புலன்களை அடக்கியதற்குச் சான்றாக வள்ளுவர் கூறுவார். இப்போது இக் குறளில் இந்திரன் என்பதனை கதிரவன் எனப் பொருள்கொள்ளவேண்டும். இவை எல்லாவற்றையும் விட சிலப்பதிகாரம் சிறப்பாகக் கூறும் `இந்திரா விழா` கதிரவனைச் சிறப்பித்தே கொண்டாடப்பட்டது என்பது சிலப்பதிகாரத்தை அணுகிப் பார்ப்போரிற்குத் தெரியும்.

        மேற்கூறிய காரணங்களாலேயே `இந்திரன்` என்ற தமிழ்ப்பெயர் கதிரவனையே குறிக்கும் என்பதுடன் இந்த `இந்திரன்` என்பது வடமொழி இந்திரா(Indra) மற்றும் தேவேந்திரன் என்பனவற்றிலிருந்து  வேறுபட்டதுமாகும்.

கதிரவனைக் குறிக்கும் பிற தமிழ்ச்சொற்கள் இவை மட்டுமேயல்ல, இவை எல்லாம் உயிரெழுத்துகளான 12 எழுத்துகளில் தொடங்கும் பெயர்கள் மட்டுமே. இப்போது சூரியன் என்ற சொல்லும் தமிழ்ச்சொல்லே எனச் சில வேர்ச்சொல் ஆய்வுகள் கூறுகின்றன (சுள் எனச் சுடுவதால் சூரியன்) என்பது மேலதிக செய்தி.

இவ்வளவு சொல்வளத்தைக்கொண்ட எமது மொழியினை அடுத்த தலைமுறைக்கு, அதே வளத்துடன் கையளிப்போம் என உறுதிகொள்வதே இன்றைய உலகத்தாய் மொழி நாளில் நாம் எமது மொழிக்குச் செய்யும் கைமாறு ஆகும்.

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More