இந்தியா பிரதான செய்திகள்

மகாராஷ்டிராவில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்


அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து மும்பை நோக்கிப் பேரணியாகச் செல்லும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  11 மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அந்த அமைப்பு நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் நாசிக்கில் இருந்து மும்பை நோக்கிச் செல்லும் தங்களது போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.

விவசாயக் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச பயிர் விலை, நில உரிமைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டம் 8 நாட்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அகில இந்திய விவசாயிகள் சங்கமானது, கடந்த 20ஆம் திகதி மகாராஷ்டிர நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜனுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

இதன்போது முதல்வர் பட்னாவிசுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்ததிருந்த போதும் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான வாக்குறுதிகள், அதற்கான காலக்கெடுவை மாநில அரசு அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்டிர மாநில தலைவர் அசோக் தவாலே தெரிவித்துள்ளார்.

குஜராத்துக்கு நதி நீரைத் திருப்பிவிடக் கூடாது என்ற ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது, சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது, காட்டு நிலங்களை பழங்குடியினருக்கு மாற்றுவது, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது போன்ற கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.