இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஊடகவியலார்களுக்கு கறுப்பு சட்டைக்கார் அச்சுறுத்தல்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தினை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்திற்கு தலைமை தாங்க அனுமதிக்கவில்லை. 

குறித்த போராட்டம் ஆரம்பமாக முன்னர் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் போராட்டம் ஆரம்பமாகும் இடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சமூகம் தந்து, போராட்டத்திற்கு வருகை தந்த ஈ.பி.ஆர்.எல்.எப், கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் உட்பட அரசியல் கட்சிகளை சார்ந்தோரை கைகொடுத்து வரவேற்று , போராட்டத்திற்கு தலைமை தாங்க முற்பட்டார்.

அவ்வேளை போராட்டத்தை ஒழுங்கமைத்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை பதாகைகளுடன் முன்னுக்கு வருமாறு அழைத்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அதனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை போராட்டத்திற்கு தலைமை தாங்கவோ , போராட்டத்தில் முன்னுக்கு நிற்கவோ ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கவில்லை.

அவ்வேளை திடீரென கறுப்பு சட்டை அணிந்து வந்த சிலர், உறவுகள் கைகளில் ஏந்தியிருந்த பதாகைகளை மறைத்தவாறும் உறவுகளின் முன்பாக தாம் நின்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தை குழப்பும் விதமாக செயற்பட்டுக்கொண்டு இருந்தனர்.

“OMP” வேண்டும் என போராட்டத்தில் குழப்பம். 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு “OMP ‘ வேண்டாம் என கோசங்களை எழுப்பிய வேளை . “OMP” வேண்டும் என கறுப்பு சேர்ட் அணிந்தவர்களை கோஷங்களை எழுப்பினார்கள். அதன் போது , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “OMP” வேண்டாம் என கூறிய போது , தமது பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் விவாதித்து கிளிநொச்சியில் அலுவலகம் திறக்க முற்படுகின்றார். நீங்கள் வேண்டாம் என கோஷம் போட வேண்டாம் என கூறினார்கள். அதனை பாதிக்கப்பட்ட உறவுகள் ஏற்காது அவர்களை “OMP வேண்டும் என கோஷம் போட விடாது தடுத்தனர்.

பின்னர் மக்கள் அங்கிருந்து ஐநா அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற போதும் மக்கள் கைகளில் ஏந்தி வந்த பதாகைகளை மறைத்தவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தினை குழப்பும் விதமாக செயற்பட்டுக்கொண்டு இருந்தனர்.

அந்நிலையில் பேரணி டிப்போ சந்தியினை அடைந்த வேளை திடீரென குழப்பத்தில் ஈடுபட்ட கறுப்பு சேர்ட் அணிந்தவர்கள் மக்களை வீதியில் உட்காருமாறு பணித்தனர். அதனால் குழப்பமடைந்த மக்கள் வீதிகளில் உட்கார்ந்தனர்.

இளைஞர்கள் மீது தாக்குதல். 
அவ்வேளை குறித்த பேரணிக்கு முன்பாக முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்கி கட்டியவாறு பேரணியை வழிநடத்தியும் கோசங்களை எழுப்பி சென்று கொண்டிருந்தவர்கள் ,திடீரென வீதியில் மக்கள் உட்கார்ந்தமையால் , மக்களை வீதியில் உட்காராது தொடர்ந்து பேரணியாக நடக்குமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தனர்.

அதனை அடுத்து குழப்பத்தில் ஈடுபட்டு வந்த கறுப்பு சேர்ட் அணிந்தவர்கள் நீங்கள் எங்களை வழிநடத்த வேண்டாம். என கூறி முச்சக்கர வண்டி சாரதி , அறிவிப்பை மேற்கொண்ட இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒலிபெருக்கி சாதனத்தின் வயர்களை அறுத்து அட்டகாசம் புரிந்தனர்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் குறித்த கறுப்பு சேர்ட் அணிந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல். 

இவ்வாறாக போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு வந்த கறுப்பு சேர்ட் அணிந்த நபர்கள் தொடர்பில் செய்தியறிக்கையிடும் நோக்குடன் ஊடகவியலாளர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டனர்.

” போராட்டம் பின்னால் நடக்கும் போது ஏன் எங்களை படம் எடுக்கிறீங்கள் ” போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படம் எடுங்கள் என மிரட்டினார்கள். அத்துடன் தொடர்ந்து ஊடகவியலார்களின் பணிக்கும் இடையூறுகளை விளைவித்து வந்தனர்.

அத்துடன் , குழப்பத்தில் ஈடுபட்டவார்களை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை தமது தொலைபேசிகளின் படங்களை எடுத்து “ஒருத்தரும் கிளிநொச்சியை தாண்டி போக மாட்டீர்கள்” என ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி , அவர்களின் புகைப்பட கருவிகளையும் தட்டிவிட்டு , ஊடகவியலாளர்களையும் தாக்க முற்பட்டார்கள்.

பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள். 
கறுப்பு சட்டையுடன் இவ்வாறாக குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் எனவும் , தம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை குழப்பும் விதமாக பல தடவைகள் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் , சுதந்திர தினத்தின் போது முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திலும் இவ்வாறான குழப்பங்களை அவர்கள் செய்தனர் என பாதிக்கப்பட்ட உறவுகள் கவலையுடன் தெரிவித்தனர்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

 • என்னைப்பற்றி வரும் தவறான செய்திகள் தொடர்பானது
  —————————————————
  இன்று கிளிநொச்சியில் நடந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் கட்சிகள் சார்பற்று நானும் உறவுகளுடன் ஒருவனாக கலந்து கொண்டேன்.உறவுகளை இழந்த வலி என்னவென்று எனக்கும் தெரியும். என்னைப்பற்றி தவறான செய்திகளை சில முகவரியற்ற ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.நானும் ஒரு ஊடகத்தை நடாத்தி வருபவன் ஊடகவியலாளர்களை மதிப்பவன்.உறவுகளின் போராட்டங்களில் பலவற்றில் கலந்துகொண்டவன்.அங்கு நடந்த பிரச்சனையை திரிவுபடுத்தி சிலரால் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது.
  உண்மை நிலவரம் இதுதான்
  இரண்டு பகுதியினர் சண்டை இட்டுக்கொண்டு இருந்தபோது நான் அவர்களை சமரசப்படுத்துவதற்காக சென்று இப் போராட்டத்தை குழப்பாமல் ஒதுங்கி நில்லுங்கள் என கதைத்துக்கொண்டு இருந்தபோது அங்கு நின்ற ஒருவர் என்னை தகாத வார்த்தைகளால் பேசினார் இவருக்கு எதிராக நான் கதைத்த வீடியோவையும் ஆக்ரோஷமாக கதைக்கும் படத்தையும் இட்டு சம்மந்தமே இல்லாத செய்திகளையும் பதிவேற்றியுள்ளனர்.இதுதான் உண்மை நிலவரம். நான் இதுவரை எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லாதவன் எனக்கு பல கட்சிகளில் பல நண்பர்கள் இருக்கின்றார்கள். கட்சிகளுக்கப்பால் செயற்பட விரும்புபவன்.நானும் ஊடக போராளியாக வேண்டும் என ஆசைப்படுபவன்.நான் ஒரு ஊடகவியலாளரை தரக்குறைவாக பேசவோ. நான் உணர்வுடன் கலந்துகொண்ட போராட்டத்தை குழப்பம் விழைவிக்கவோ ஒரு போதும் எண்ணமாட்டேன்.
  ச.பிரபாகரன்
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers