இலங்கை பிரதான செய்திகள்

மக்கள் குடியிருப்பை அண்டிய காற்றாலை குறித்து அங்கஜன் நேரில் கண்காணிப்பு

சாவகச்சேரி தொகுதியின் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மறவன்புலோ கிழக்கு ஜே/298 கிராம அலுவலர் பிரிவில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை காலை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட கிராம மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய போது பொதுமக்கள் குறித்த காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் தமது குடிமனைகளில் இருந்து 100மீற்றருக்கும் குறைவான தூரத்தில் அமைந்திருப்பதாகவும், காற்றாலை உற்பத்திக்காக பயன்தரு கடற்கரை மரங்களை அழித்து வருவதாகவும், குறித்த நிறுவன பணிகளுக்காக நாளாந்தம் நான்கு பவுசர் தண்ணீர் விவசாயக் குளங்களில் இருந்து எடுக்கப்படுவதாகவும், இதனால் கால்நடைகள் மற்றும் விவசாயத்திற்கு நீர் இல்லாமல் போவதாகவும், தமது மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மேலும் குறித்த நிறுவனம் 17பேருக்கு யுத்த காலத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி பத்திர காணியினை சட்டத்திற்கு முரணான வகையில் கொள்வனவு செய்து, காற்றாலை மின் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை குறித்த நிறுவனம் மறவன்புலோ பகுதியில் காற்றாலை அமைப்பதற்கு, தென்மராட்சி பிரதேச செயலகம், ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மற்றும் சாவகச்சேரி பிரதேசசபையில் எந்தவொரு அனுமதியையும் பெறவில்லை என மக்கள் ஆதாரத்துடன் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது பிரதேச செயலகம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் உரிய அனுமதியைப் பெற்று ஆரம்பித்திருக்க வேண்டும்.பிரதேச மக்களுக்கோ சமூக அமைப்புக்களுக்கோ எவ்வித அதிருப்தியும் கிடையாது.ஆனால் சமூக அமைப்புக்களும் மக்களும் சமூக பொறுப்புடன் அபிவிருத்தியை வரவேற்கின்றனர். வரும் அபிவிருத்தியைத் தடுக்கக் கூடாது. ஆனால் அதே அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பு என்றால் அதனை அனுமதிக்க முடியாது. காற்றாலை உற்பத்தி நிலையங்கள் மக்கள் குடியிருப்பில் இருந்து இவ்வளவு தூரத்தில் தான் இருக்க வேண்டும் என்ற ஒரு உத்தேச அளவு விஞ்ஞான ரீதியான கணிப்பிடப்பட்டிருந்தால் அந்த அளவுப் பிரமாணத்திற்கு குறைவான தூரத்தில்,மக்கள் குடியிருப்பை அண்டிய இடங்களுக்கான காற்றாலை அமையும் தூரம் உரிய முறையில் பேணப்பட வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியிருந்தார்..

கோவில் வீதி நல்லூரில் அமைந்திருக்கும் சுதந்திர கட்சி தலைமைக்காரியாலயத்தில் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி இணைப்பாளர்களுடனான சந்திப்பின் போது பிரதேச சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற   உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் ஊடாக கண்காணிப்புடன் கூடிய மக்கள் கருத்தாய்வு சந்திப்பு இன்று நடைபெற்றிருந்தது

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் மக்கள் நலன் கருதிய கண்காணிப்பு விஜயத்தின் போது மத்திய சுற்றாடல் அதிகாரசபை பணிப்பாளர்,கமநல சேவைத்திணைக்கள உதவி ஆணையாளர்,பெரும்பாக உத்தியோகத்தர், மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக காணி அலுவலர், ஆகியோரும் இணைந்திருந்தனர்.

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.