இலங்கை பிரதான செய்திகள்

உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்து நீதிமன்றில் தஞ்சம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று தஞ்சமடைந்தார்.

அவரை சிறைச்சாலையில் தங்க வைக்க உத்தரவிட்ட நீதிவான், தஞ்சமடைந்தவரின் மனநிலை தொடர்பில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்ப்பித்து மருத்துவ சோதனைக்குட்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

இணுவில் பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க ஒருவரே தனக்கு சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தன்னால் நடமாட முடியாது உள்ளதாகவும் தெரிவித்து யாழ்ப்பாணம் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் அலுவலகத்துக்கு நேற்றுச் சென்று நீதிமன்றில் தஞ்சமடைய தனக்கு உதவியளிக்குமாறு கோரியுள்ளார்.

அத்துடன், தன்னால் வெளியில் செல்ல முடியாது எனத் தெரிவித்து அவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் உள்ள சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார்.

இந்த நிலையில் சிரேஸ்ட காவல்துறை அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த நபர் யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

உங்களை அச்சுறுத்துபவர்கள் யார், அவர்கள் பற்றிய விவரங்களை வழங்க முடியுமா? என்று அவரிடம் மன்று கேள்வி எழுப்பிய போது அவர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த போதும் சந்தேகநபர்கள் பற்றிய விவரத்தைக் கூறவில்லை. அத்துடன், மாறுபட்ட தகவல்களையும் தெரிவித்தார்.

அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் எவரும் இருப்பதாக விசாரணைகளில் தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்ததனையடுத்து அவரை நீதிமன்றப் பாதுகாப்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தங்க வைக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.எஸ்.பி.போல், அந்த நபரின் மனநிலை தொடர்பில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.