இலங்கை பிரதான செய்திகள்

யாழில் பிரபல பெண்கள் கல்லூரியின், ஆரம்ப பாடசாலை அதிபரின் மிகப் பெரிய நிதி மோசடி….

யாழில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றின் ஆரம்ப பாடசாலையின் அதிபர் மிகப் பெரும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் அது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் நேற்று புதன்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு துணைபோகும் செயற்பாடு தொடர்பானது” எனக் குறிப்பிட்டு வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

குறித்த ஆரம்ப பாடசாலையின் தற்போதைய அதிபர் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் அந்தப் பாடசாலையின் உதவி அதிபர் அத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

அதுகுறித்த உதவி அதிபர் தொடர்பாக அதிபரால் ‘தனது செயற்பாடுகளுக்கு உதவி அதிபரால் ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை’ என்று கூறி யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் உதவி அதிபரிடம் யாழ். வலயக் கல்விப்பணிப்பாளரால் விளக்கம் கோரப்பட்டது. அவரால் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், பாடசாலை அதிபரின் நிதி மோசடி உள்பட19 விதமான முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்களை சமர்ப்பித்து யாழ்.வலயக் கல்விப் பணிமனையினருக்கு உதவி அதிபர் முறைப்பாடும் செய்திருந்தார். இவற்றுக்கு துணைபோகாததாலேயே தன்மேல் அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்

இந்த முறைப்பாடுகளில் பின்வருவன மிகப் பெரும் நிதி மோசடி நடைபெற்றுள்ளமைக்கான சில சான்றுகளாகும்.

1. 2018ஆம் ஆண்டு தரம் 1 மாணவர்களிடம் 15, 000 ரூபா அதிபர் பெற்றிருந்த நிலையில் சிலருக்கு மட்டுமே பற்றச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் – பற்றச்சீட்டு வழங்கப்படாத பெற்றோரை தன்னால் இனங்காட்ட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2. 2017ஆம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இறுதிக் கௌரவிப்பின்போது 100, 000 ரூபா சேர்த்து அதிபரிடம் வழங்கியுள்ளார்கள். இப்பணம் இன்றுவரை பாடசாலை கணக்கில் வைப்பிலிடப்படவில்லை.

3. ஒருவரால் பாடசாலைக்கென வழங்கப்பட்ட மடிக் கணனி மற்றும் திரையிடல் கருவிகள் (புறஜெக்டர், ஸ்கிரீன்) என்பன பொருட் பதிவேட்டில் பதியப்படவுமில்லை. பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.

4. 2018ஆம் ஆண்டு நடன விழாவில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 25, 000 ரூபா பெறுமதியான காசோலை வைப்பிலிடப்படவில்லை.

இவ்வாறான மோசடியில் ஈடுபட் அதிபரை அந்தப் பாடசாலையிலேயே தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதித்து உதவி அதிபரை ஆரம்பக்கட்ட விசாரணைக்காக இடமாற்றம் செய்யும் செயற்பாடு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உதவி அதிபரை மட்டும் இடமாற்றுவதன் மூலம் சாட்சியங்களையும், தடயங்களையும் அழிக்கக்கூடிய உதவியைப் புரிவதற்காகவே வடமாகாண கல்வி அதிகாரிகளால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதோ என நாம் சந்தேகிக்கின்றோம்.

இவ்விசாரணையின் பொருட்டு சாட்சியங்கள் மறைக்கப்படாமலும், அச்சுறுத்தப்படாமலும் காணப்படும் பொருட்டு குறித்த பாடசாலையின் அதிபரும் ஒரே நேரத்தில் இடமாற்றப்பட்டு கணக்காய்வு மேற்கொள்ளப்படவேண்டும்

யாழ்ப்பாண வலயக் கல்வி அதிகாரி ஒருவர் அதிபருக்கு எதிராக சாட்சி வழங்க தயாராயிருக்கும் அன்பளிப்பாளர் ஒருவரை அழைத்து அதிபரின் முறைகேட்டை பெரிதுபடுத்தவேண்டாம் என கேட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இவ்விதமான வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேட்டாளர்களுக்கு சாதகமாக செயற்படும் போக்கு மிகப்பெரிய முறைகேடாகும். இந்த முறைகேடுகள் தொடர்பாக நீதியான விசாரணையை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது

இவ்விடயத்தில் ஆளுநராகிய தாங்கள் அதீத கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதேவேளை, மேற்படி கடிதத்தின் பிரதிகள் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.