Home இலங்கை திருக்கேதீஸ்வரம் வளைவுப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சர்வமதப் பேரவை

திருக்கேதீஸ்வரம் வளைவுப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சர்வமதப் பேரவை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் திருக்கேதீஸ்வரம் – மாந்தைச் சந்தி வளைவு தொடர்பாக அண்மையில் தீவிரமடைந்த பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவைக்கும் முயற்சியில் மன்னார் சர்வமதப் பேரவை ஈடுபட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் சர்வ மதப் பேரவையின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் தலைமையில் மன்னார் சிறிய குருமடத்தில் இடம் பெற்ற சர்வமதப் பேரவையின் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அதன்படி பிரச்சினையில் உள்ள இரண்டு தரப்பினரையும் தனித்தனியாக முதலில் சந்திப்பதென்றும் பின்னர் அனைத்துத் தரப்பினரையும் ஒரு தளத்திற்குக் கொண்டு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக சர்வமதப் பேரவையின் உறுப்பினர்களுக்கும் கத்தோலிக்க தரப்பினருக்குமான முதல் கட்டச் சந்திப்பு நேற்று புதன் கிழமை (06.03.2019) மாலை 4.30 மணிக்கு மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவர் தலைமையில் மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்தில் சந்திப்பு இடம் பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது ஏற்கனவே சர்வமதக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானித்திற்கு அமைவாக கத்தோலிக்க தரப்பினருடனான முதல் கட்டப் பேச்சுவார்த்தையின் போது சர்வமதப் பேரவையில் உள்ள இந்து சமய உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

கத்தோலிக்க தரப்பினரின் நிலைப்பாடு, நியாயம், வாதம் போன்றவற்றை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.முறுகல் நிலை ஏற்பட்ட அந்தக் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் உண்மையில் என்ன நடந்தது? என்பதை கத்தோலிக்க தரப்பினர் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

குறிப்பிட்ட பிரச்சினைக்கு முன்பும் பின்பும் நடைபெற்ற விடயங்கள் எதையும் கணக்கில் எடுக்காமல் தனியாக ஒருசில புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் மட்டும் வைத்துக்கொண்டு கத்தோலிக்க தரப்பினரைக் குற்றவாளிகளாக ஊடகங்கள் சித்தரித்தமை தொடர்பாக தமது கவலையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

சர்வமதத் தலைவர்கள் சார்பில் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார், இணைத்தலைவர் மௌலவி எஸ். அஸீம், இணைத்தலைவர் சங். விமலதர்ம தேரர், பாஸ்டர் எஸ். பத்திநாதன், சட்டத்தரணி ஜனாப் எம். எம். சபுறுதீன், சட்டத்தரணி திரு. அர்ஜூன் அருமைநாயகம், பொருளாளர் எஸ். எவ். செசாரியஸ், ஜனாப். எம். ஐ. ஏ. றசாக் மற்றும் சில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கத்தோலிக்க தரப்பினருடனான சந்திப்பைத் தொடர்ந்து மிக விரைவில் இந்து சமயத் தரப்பினரையும் சர்வமதப் பேரவையினர் சந்திக்க உள்ளனர்.

தேசிய ரீதியில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான ஒரு தீர்வைக் காண்பதில் மன்னார் சர்வமதப் பேரவை அர்ப்பணத்தோடு செயற்படும் எனவும், எவ்வித சவால்கள் வந்தாலும் மன்னார் மாவட்டத்தில் சமயங்கள், இனங்கள் மத்தியில் உண்மையான பரஸ்பர புரிந்துணர்வையும், சமாதானத்தையும், சகவாழ்வையும், மத நல்லிணகத்தையும் ஏற்படுத்துவதில் மன்னார் சர்வமதப் பேரவை தொடர்ந்து பாடுபட்டு உழைக்கும் எனவும் மன்னார் சர்வமதப் பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More