மட்டக்களப்பு காவல்துறைப் பிரிவிலுள்ள சத்துருக்கொண்டான், சவுக்கடி கடற்கரை பகுதியில் கடந்த புதன்கிழமை மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத் திட்டத்தில் ஒருவர், தனது காணியில் கிணறு ஒன்றை அகழும் நடவடிக்கையினை மேற்கொண்டபோதே, இவ்வாறு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்றைய தினம் (07) மாலை 5 மணியளவில், சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து நீதவானின் உத்தரவுக்கமைவாக குறித்த இடம் மேலும் அகழப்பட்ட போது, மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாகவும் அத்துடன் அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மீட்கப்பட்ட மனித மண்டை ஓட்டின் பகுதிகளையும் எலும்புகளையும், நீதிபதியின் உத்தரவுக்கமைய, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி , பகுப்பாய்வு செய்வதற்காகக் கொண்டு சென்றுள்ளார் எனவும் மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Add Comment