Home இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் முழுமையாக அகற்ற வேண்டும் – கலாநிதி தீபிகா உடகம

பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் முழுமையாக அகற்ற வேண்டும் – கலாநிதி தீபிகா உடகம

by admin

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் சர்வதேச அழுத்ததால் நிலையான பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது, இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தெடர்கின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார்.


இதேவேளை, மனித உரிமைகளை அமுலாக்குவதற்கு அந்த விடயங்களை அரசியலாக்குவதே பிரதான தடையாக உள்ளதாகவும் கலாநிதி தீபிகா உடகம மேலும் தெரிவித்தார். பொறுப்புக்கூறல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கொழும்பு தமிழ் வார இதழுக்கு அளித்த நேர்காணலை நன்றியுடன் இங்கே பிரசுரிக்கின்றோம். -ஆசிரியர்

கேள்வி:- இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைகள் எவ்வாறு உள்ளன?பதில்:- 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டேன். தற்போது இரண்டாவது பதவிக்காலம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அவசரகாலச் சட்டம், பயங்கரவாதச் சட்டம், தெற்கு மற்றும் வடக்கு கிழக்கில் நிலவிய வன்முறைகள் காரணமாக பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியிருந்தனர்.

அக்காலத்தில் மனித உரிமைகள் மிகப்பயங்கரமான முறையில் மீறப்பட்டன. கடத்தல், தடுத்துவைத்தல், சித்திரவதைக்கு உட்படுத்தல் ஆகியனவே மனித உரிமைகளை மீறும் பிரதான விடயங்களாக காணப்பட்டன. அத்துடன் கருத்துக்களை வெளியிடுவதற்கான சுதந்திரம், உயிர் அச்சுறுத்தல் போன்றனவும் காணப்பட்டன.

இவற்றுடன் ஒப்பிடுகின்றபோது 2015இற்கு பின்னரான காலத்தில் பாரிய முன்னேற்றங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக பொதுமக்கள் அச்சமின்றி கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். ஊடக சுதந்திரத்திலும் கணிசமான முன்னேற்றத்தினை அவதானிக்க முடிகின்றது. தடுத்துவைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கின்றமை எமக்கு பாரிய பிரச்சினையாகவுள்ளது. அதாவது, நபரொருவரை தடுத்து வைப்பதனால் ஏற்படுகின்ற பிரச்சினையாகும். இதனடிப்படையில், சித்திரவதைக்கு உள்ளாகின்றமை நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றது.

இதனைவிடவும், நிருவாகத்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் கணிசமான முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கின்றன. காணி, வேலைவாய்ப்பு, ஓய்வூதியம் உள்ளிட்டவை தொடர்பில் அம்முறைப்பாடுகள் பதிவாகின்றன. சிறு விடயங்கள் தொடர்பிலும் பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்கின்றார்கள். இந்த நிலைமையானது ஆணைக்குழு மீதான அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

கேள்வி:- கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் எந்த அடிப்படையில் கையாளுகின்றீர்கள்?

பதில்:- எமக்கு வரையறுக்கப்பட்ட வளங்களே உள்ளன. ஆகவே மிக முக்கியமான முறைப்பாடுகளுக்கு முதன்மைத்துவம் அளித்து வருகின்றோம். தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் தான் நாம் அதிகளவு கவனம் செலுத்துகின்றோம். பொலிஸார் அதிகாரங்களைப் பயன்படுத்துவது முதல் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்படுகின்றபோது காணப்படுகின்ற நிலைமைகள் தொடர்பில் அவதானத்தினைச் செலுத்தி வருகின்றோம். அதற்காக நிருவாக ரீதியாக கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தாது இருக்கின்றோம் என்று கூறிவிடவும் முடியாது.

அத்துடன், போதைப்பொருட்களை அறிமுகப்படுத்தி அவற்றின் மூலம் நபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பிலான முறைப்பாடுகளும் கிடைக்கின்றன. நாம் ஆணைக்குழுவை பொறுப்பெடுத்ததன் பின்னர் நாட்டில் காணமல்போன சம்பவங்கள் தொடர்பாக எவ்விதமான முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. அண்மையில் ரத்கம சம்பவம் மட்டுமே பதவிவாகியிருக்கின்றது.

ஆணைக்குழு சுயாதீனமாக உள்ளதா இல்லையா என்ற சந்தேகத்தின் காரணமாக சிவில் அமைப்புக்கள் இணைந்து பணியாற்றுவதில் இடைவெளிகள் காணப்பட்டன. இருப்பினும் நாம் பொறுப்பேற்றதன் பின்னர் ஆணைக்குழுவுடன் சிவில் அமைப்புக்கள் மிக நெருக்கமாக செயற்பட்டு வருகின்றன. எமக்கு பத்து பிராந்திய காரியாலயங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஆறு காரியாலயங்கள் வடக்கு கிழக்கில் உள்ளன. அவற்றின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் அதன் செயற்பாடுகள் சிறப்பான இடத்தில் உள்ளன.

கேள்வி:- தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் சித்திரவதைகள்  துன்புறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளின் போக்கு எவ்வாறு உள்ளது?

பதில்:- நபர்கள் மீதான தாக்குதல் மிளகாய்த் தூய் வீசுதல், சிகரட் மூலம் சுடுதல் போன்ற சம்பவங்கள் பதிவாகின்றன. போலிஸாருக்கு எதிராக தடுத்து வைக்கப்பட்ட போது துன்புறுத்தல்களுக்கு உள்ளானமை தொடர்பிலும் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. எமது தலைமையகத்திற்கு மட்டும் சித்திரவதைகள் தொடர்பில் 2017ஆம் ஆண்டு 288முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 2018இல் இதில் சற்றே குறைவு காணப்படுகின்ற போதும் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் பதிவான முறைப்பாடுகளையும் ஒன்றாக பார்க்கின்றபோது கணிசமான அளவில் அதிகரிப்பு காணப்படுகின்றது. அதேநேரம் துன்புறுத்தல்கள் தொடர்பில் 2017இல் 190முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. மேலும் 2018இல் அவ்வாறான முறைப்பாடுகள் 33சதவீதம் அதிகரிப்பினையே காட்டுகின்றது.

கேள்வி:- வடக்கு கிழக்கில் படையினர் நிலைகொண்டிருக்கின்றமையாலும், சட்டம் ஒழுங்கு சரியான கட்டமைப்பினைக் கொண்டிருக்காமையின் காரணத்தாலும் சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் அது தொடர்பான முறைப்பாடுகள் எவ்வாறு உள்ளன?

பதில்:- தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலேயே துன்புறுத்தல்கள் தொடாபான முறைப்பாடுகள் அதிகளவில் கிடைக்கின்றன. வடக்கு கிழக்கில் அவ்வாறான முறைப்பாடுகள் குறைவாகவே உள்ளன. எனினும்ரூபவ் கிழக்கு மாகாணத்தினை விடவும் வடக்கில் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்ற சம்பவங்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. குறிப்பாக விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருந்தார்கள்ரூபவ் புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பு செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களின் குடும்பங்களுக்கு புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பிலேயே அம்முறைப்பாடுகள் அதிகம் பதிவாகின்றன. இச்சமயங்களில் நாம் பொலிஸ் தரப்பிற்கு எழுத்துமூலமான விளக்கங்களை கோரியிருக்கின்றோம். அச்சந்தர்ப்பங்களில் எல்லாம் புலனாய்வாளர்கள் அவ்வாறு செய்வதில்லை என்றும்ரூபவ் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதாகவே பதிலளித்திருக்கின்றார்கள். எவ்வாறாயினும் சட்டத்திற்கு உட்பட்ட வகையிலேயே அந்நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாம் நேரடியாகவே கூறியுள்ளோம்.

கேள்வி:- வடகிழக்கில் தற்போதும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் உட்பட பெண் தலைமைத்துவங்கள், பாலியல் சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றதாக சர்வதேச தரப்புக்களால் கூறப்படுகின்றதே?

பதில்:- சர்வதேச அமைப்புக்கள் அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. ஆரம்பத்தில் 2015இற்கு முன்னர் நடைபெற்றதாக தெரிவித்தார்கள். பின்னர் தற்போதும் அவ்வாறான நிலைமைகள் தொடர்வதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால் எமக்கு இதுவரையில் அவ்வாறான முறைப்பாடுகள் எவையும் கிடைக்கவில்லை. இவ்வாறான பாரதூரமான விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கின்றபோது நாம் விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பின்னிற்கப்போவதுமில்லை. மேலும் நபர்கள் தொடர்பான விபரங்களை பகிர்ந்து கொள்வதில் அச்சமான நிலைமைகள் காணப்பட்டாலும் அதற்கு அப்பாலான தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டால் அது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலகுவாக அமையும் என இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அமைப்புக்கள் உள்ளிட்ட ஐ.நா. அமைப்புக்களிடத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.

கேள்வி:- சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட ஆய்வுகளைச் செய்ததாக கூறுகின்றீர்களே, தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் சம்பந்தமாக எவ்வாறான அவதானிப்புக்களைச் செய்துள்ளீர்கள்?

பதில்:- நான் பொறுப்பேற்று சொற்பகாலத்திலேயே தமிழ் அரசியல் கைதிகள் விடயம் சம்பந்தமாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எழுத்துமூலமாக கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். குறிப்பாக, தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்ரூபவ் வழக்குகள் இன்றி இருப்பவர்கள் எத்தனை பேர் போன்ற விபரங்களையெல்லாம் கோரியிருந்தோம். எனினும் அதுசம்பந்தமான விபரங்கள் சரியாக எமக்கு கிடைத்திருக்கவில்லை. அவ்வாறான நிலையில், ஐ.நா. அதிகாரிகளின் இலங்கை விஜயங்களின் போது அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களையே எம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்கள். அந்த தகவல்களின் பிரகாரம், சாட்சி உள்ளவர்கள் மீது விரைவாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும், ஏனையவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் பகிரங்கமாகவே கோரியிருந்தோம். அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

கேள்வி:- பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கூறும் நீங்கள் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ளீர்களா?

பதில்:- ஆம், புதிய பயங்கரவாத தடைச்சட்ட மூலத்தின் பிரதியொன்றை நாம்

அரசாங்கத்திடத்தில் கோரியிருந்தோம். அத்துடன்ரூபவ் சட்டமூலத்தினை தயாரிக்கின்றபோது ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி எமது ஆலோசனைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகளை பாதிக்காதவாறும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும் நியாயமான முறையில் அச்சட்டமூலத்தினை தயாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். மேற்குலக நாடுகளில் பயங்கரவாத சட்டம் அமுலில் இருக்கின்றது. இதனை ஐ.நா. தரப்பு எதிர்க்கப்போவதில்லை.

தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் சில விடயங்களில் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், பயங்கரவாதம் என்பதற்கான வியாக்கியானம் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. அச்சொற்பதத்திற்கு பரந்தளவிலான வியாக்கியானம் வழங்கப்படுகின்றபோது அரசியல் ரீதியாக, தனிப்பட்ட ரீதியாக அச்சட்டத்தினை நபர்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கின்றது. அது மிகவும் ஆபத்தானதாகும். குறிப்பாக பல்கலை மாணவர்கள், தொழிற்சங்க வாதிகள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே பயங்கரவாதம் தொடர்பில் ஐ.நா கொண்டுள்ள வியாக்கியானத்தினை உள்வாங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று நாம் கருதுகின்றோம்.

கேள்வி:- காணாமல்போனவர்களின் உறவினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் வீதியோரமாக போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில் இவர்கள் தொடர்பில் ஆணைக்குழு எத்தகைய கவனத்தினைச் செலுத்தியுள்ளது?

பதில்:- மனித உரிமை மீறல்களில் மிகமோசமான விடயம் காணாமலாக்கப்படுதலாகும். இதனால் அவர்களின் அன்புக்குரியவர்கள் அடையும் மனவேதனைகளை இலகுவாக எடுத்துவிட முடியாது. சித்திரவதை, துன்புறத்தல்கள், போன்றவற்றுக்கு இலக்கானவர்கள் என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துவிட முடியும். அத்துடன் அதற்கு முற்றுப்புள்ளி கிடைக்கின்றது. ஆனால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது அவர்களின் அன்புக்குரியவர்கள் அடையும் மனவேதனை மிகவும் உக்கிரமடைகின்றது. அந்த உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று அறிவதற்கு விரும்புகின்றார்கள்.

அதேநேரம், நீதித்துறை ஊடாக நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். இவை அனைத்துமே அவசியமான விடயமாகும். கடந்த காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் சரியான கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் தரப்பினர் என்றவகையில் காணமல்போனவர்கள், சித்திரவதைக்குள்ளானவர்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்கு முதன்மைதானம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. இது மிகப்பாரதூரமானவிடயமாகும். நிருவாக ரீதியான பிரச்சினைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த விடயத்தினை எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடியபோது அதற்கான தனியான கட்டமைப்பினை ஏற்படுத்துமாறு கோரினோம்.

காணாமல்போனோர் பற்றிய முறைப்பாடுகளை சாதாரண மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் போன்று பார்க்க முடியாது. அதற்கு நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் ரூபவ் வளங்களும் அவசியமாகின்றன. அதனடிப்படையில் தற்போது அரசாங்கம் காணமல்போனோர் பற்றி அலுவலகத்தினை ஸ்தாபித்துள்ளது. காணாமல்போனோர் பற்றிய சர்வதேச சாசனத்தில் கையொப்பமிட்டமை, பின்னர் அலுவலகத்தினை ஸ்தாபித்தமை சிறந்த முன்னேற்றங்களாகும்.

அவ்வாறிருக்கரூபவ் எமக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை காணாமல்போனோர் அலுவலகத்துடன் பகிர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளோம். அதனடிப்படையில் அவர்களின் முறைபாடுகள் தொடர்பில் கவனச்செலுத்தப்பட்டு வருகின்றது.

கேள்வி:- இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் மனிதாபிமானச்சட்ட மீறல்கள் குறித்த அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகள் தொடர்பில் தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஆணைக்குழு பங்கேற்று விசேட அவதானிப்புக்களை வழங்கவுள்ளதா?

பதில்:- ஆணைக்குழுவிற்கு மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கான உரித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனினும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இதுவரையில் கிடைக்கவில்லை. அதன்பின்னரே அதுகுறித்து முடிவுகளை எடுக்க முடியும். ஆணைக்குழு மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்பதா இல்லையா என்பதை விடவும்ரூபவ் பொறுப்புக்கூறல் என்பது நாட்டிற்கு முக்கியமான விடயமாகும்.

ஆணைக்குழு கையாளாத பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றை தேசிய பிரச்சினைகளாக அவதானத்தில் கொள்ளும் போது நாட்டினுள் அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணப்பாடுகள் எழுகின்றன. உதாரணமாகரூபவ் தெற்கிலும், காணமலாக்கப்பட்டமை, சித்திரவதைரூபவ் துன்புறுத்தல்கள் ஆகிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வடக்கு கிழக்கிலும் இவ்வாறான பாரிய விடயங்களை அவதானிக்க முடிகின்றது. அரசியல் நோக்கமின்றி நாட்டின் எதிர்காலத்தினை மையப்படுத்தி இத்தகைய விடயங்களை தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும்.

வடக்குரூபவ் கிழக்கு, தெற்கு என்றில்லாது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அடுத்தக்கட்டத்துக்கு செல்வதே நாட்டின் எதிர்காலத்திற்கும் சமூகங்களுக்கும் சிறப்பானதாக அமையும்.

கேள்வி:- அப்படியென்றால், “மறப்போம் மன்னிப்போம்” என்ற தோரணையில் அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும் என்றா கூறுகின்றீர்கள்?

பதில்:- நான் அப்படி கூறவில்லை. தற்போது, நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தில் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான செயலணி சட்டத்தரணி மனூரி முத்தெட்டுவேகம தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலணி பொறுப்புக்கூறல் தொடர்பில் களஆய்வுகளைச் செய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து அரசியல் தரப்புக்களும் அரசியல் விருப்புக்களை கைவிட்டு நன்நம்பிக்கையின் அடிப்படையில் நாட்டினை முன்னிலைப்படுத்தி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபித்தல் பொருத்தமான விடயமாகும்.

அதனைவிடுத்து அரசியல் பின்னணியில் வெவ்வேறாக செயற்படுவதால் மிக கடினமான நிலைமைகளே நாட்டில் நீடிக்க வழிவகுக்கும்.

கேள்வி:- பொறுப்புக்கூறல் விடயமானது சர்வதேசம் வரையில் சென்று அரசாங்கத்தாலும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதல்லவா?

பதில்:- சர்வதேசத்தின் அழுத்தங்களாலும் தலையீடுகளாலும் பொறுப்புக்கூறல் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் நாட்டில் அது உண்மையானதாக நிலைபெறாது. இந்த விடயத்தில் நாட்டினுள் பொறுப்புக்கூறல் குறித்து காணப்படுகின்ற முக்கியத்துவத்தினை மக்கள் மத்தியிலிருந்து எழும் குரல்களின் பிரகாரமே அதனை நடைமுறைப்படுத்தி எதிர்காலம் நோக்கிப் பயணிக்க முடியும். இதனைவிடுத்து ஐ.நா. பிரேரணையில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம் பொறுப்புக்கூறல் விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுவதானது வெளிநாடுகளினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களாக இருப்பதால் அவை பலாத்காரமாக திணிக்கப்படுகின்றன. ஆகவே நாம் அதற்காக அர்ப்பணிக்க மாட்டோம் என்ற மனநிலையையே ஏற்படுத்துகின்றது. ஆகவே தான் சட்டத்தரணி மனூரி முத்தெட்டுவெகம தலைமையிலான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான செயலணியின் அறிக்கை மிகவும் முக்கியமானது என்று கூறுகின்றேன். அந்த அறிக்கையில் மக்களின் குரல்களே உள்ளன. அதற்கு செவிசாய்க்க வேண்டும்.

கேள்வி:- உண்மைகளைக் கண்டறியும் கட்டமைப்புக்கள் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் யோசனை பற்றிய தங்களின் பார்வை எவ்வாறுள்ளது?

பதில்:- அரசாங்கம் உண்மைகளைக் கண்டறிவதற்கு நான்கு கட்டமைப்புக்களை ஸ்தாபிக்கவுள்ளதாக கூறியுள்ளது. இந்த நிறுவனங்களால் நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மையே ஏற்படும். இந்த நிறுவனங்கள் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் காயங்கள் ஆற்றப்படுவதோடு அதன் மூலம் நாட்டிற்கு நன்மையே ஏற்படும் என்பது மக்கள் மனதில் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

தென்னாபிரிக்காவில் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு பற்றி இருவேறு கருத்துக்கள் இருந்தன. இருப்பினும் அந்த ஆணைக்குழுவின் பணிகள் பாரியளவில் மாற்றங்களை ஏற்படுத்துவற்கு காரணமாக இருந்தது. அதுபோன்றே மேற்படி நிறுவனங்கள் தொடர்பில் பல்வேறு நிலைப்பாடுகள் காணப்படலாம். அவை எப்போதுமே இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் நன்மைகளை ஏற்படுத்தும் என்ற விடயத்தினை சிவில் அமைப்புக்கள் முன்னெடுத்தாலும் அரசியல் தரப்பினாலேயே அதனை வலுவாக மக்கள் மத்தியில் ஸ்தாபிக்க முடியும். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புக்களைச் செய்ய வேண்டும்.

கேள்வி:- நீங்கள் கூறுவது போன்ற நிலைமை ஏற்படுவதற்காக சிவில் அமைப்புக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு உள்ளிட்ட பொதுமக்கள் அர்ப்பணிப்பு செய்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அரசியல் தலைமைகள் இணங்காது விட்டால் என்ன செய்வது?

பதில்:- மனித உரிமைகளை பாதுகாக்கும் விடயத்தில் தமது அரசியல் நலன்களை மட்டும் மையப்படுத்தினார்கள் என்றால் அது நாட்டிற்கு நன்மை அளிக்கப்போவதில்லை. மனித உரிமைகள் விடயத்தினை அரசியலாக்குவதே மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் காணப்படுகின்ற மிகப்பாரிய தடைகளாகின்றன. மனித உரிமைகள் பற்றிய விடயத்தினை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தான் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மனித உரிமை விடயங்களை அரசியல் நோக்கங்களுக்காகவும் நலன்களுக்காகவும் பயன்படுத்துவதாயின் அதுமிககீழ்த்தரமான அரசியல் செயற்பாடு என்பதை தவிசாளர் என்றவகையில் நான் பொறுப்புடன் கூறுகின்றேன். மனித உரிமைகள் பிரச்சினைகளை பயன்படுத்தி அரசியல் ரீதியாக பெருமைகளை சம்பாதிப்பதற்கு முயற்சிகளை எடுப்பதும் துர்ப்பாக்கிய நிலைமையாகும்.

ஆகவே நாட்டில் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவருவதற்கு அரசமட்டத்தின் அர்ப்பணிப்பே முதலில் அவசியமாகின்றது. இவற்றுடன் சிவில்ரூபவ் மற்றும் சுயாதீன நிறுவனங்கள்ரூபவ் பொதுமக்களின் அர்ப்பணிப்பும் அவசியமாகின்றது. இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள்ரூபவ் நீதித்துறைரூபவ் நிறுவனங்கள் இல்லாது விட்டால் பொறுப்புக்கூறலின் முக்கிய அங்கமான நிலைமாறு கால நீதி தொடர்பில் உருவாக்கப்படும் எந்தவொரு கட்டமைப்பாலும் பயனில்லாத நிலைமையே ஏற்படும்.

– நேர்காணல்:- ஆர்.ராம், நன்றி – வீரகேசரி வார இதழ்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More