Home இலங்கை கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பும், கல்வி சார் நடவடிக்கைகளும்..

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பும், கல்வி சார் நடவடிக்கைகளும்..

by admin

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ( Forum for Education and Economic Development – FEED) எனும் பெயருடன் இயங்குகின்ற, பதிவு செய்யப்பட்ட தொண்டரமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்,போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் தொடர் உதவிகளை வழங்கி வருகிறது.

யுத்தம் முடிவுற்ற காலத்தில் இருந்து தனிப்பட்டவர்களின் விருப்ப செயற்பாடாக இயங்கிய தன்னார்வ செயற்பாடுகள், 2016 இன் இரண்டாவது காலாண்டின் ஆரம்பப்பகுதியில் இருந்து, பதிவு செய்யப்பட்ட அமைப்பாக மாற்றடைந்து செயற்பட்டுவரும் FEED அமைப்பானது, இலங்கையிலும் கனடாவிலும் அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கமைய, இலாபநோக்கற்ற சமூக தொண்டு அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

யுத்த நடவடிக்கைகள் காரணமாக புலம்பெயர்ந்து, நீண்டகாலமாக மேலைத் தேச நாடுகளில் வாழ்ந்து வருகின்ற நல் உள்ளங்களின் கூட்டுமுயற்சி காரணமாக உருவாக்கம் பெற்ற FEED அமைப்பு, பிரதானமாக கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலும் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

சாதாரண தொண்டரமைப்பாக மாத்திரமின்றி, தான் சார்ந்த சமூகம் முகம் கொடுக்கும் நீண்டகால பிரச்சினைகளிலும் அன்றாடப் பிரச்சினைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கும் தரப்பினருக்கு, பாதுகாப்பானதும் நீண்டகால அடிப்படையில் பயனுள்ளதுமான செயற்திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது.

யுத்த நடவடிக்கைகள் காரணமாக, தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி மீண்டும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமது வாழ்விடங்களை நோக்கி வந்த மக்கள் வாழும், வறிய கிராமப் பிரதேசங்களே FEED அமைப்பின் பிரதான செயற்பாட்டுப் பிரதேசங்களாக அமைந்துள்ளன. திருக்கோவிலில் ஊறணி, வவுணதீவில் நெடுஞ்சேனை, மூதூரில் கூனித்தீவு, சூடைக்குடா, நீனாக்கேணி மற்றும் நல்லூர், திருமலையில் கன்னியா. கும்புறுபிட்டி மற்றும் சீனன்வெளி, மொரவேவாவில் முதலிக்குளம் மற்றும் நொச்சிக்குளம், திரியாயில் கல்லம்பத்தை, முல்லைத்தீவில் கருநாட்டுக்கேணி, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு மற்றும் செம்மலை, வவுனியாவில் கப்பாச்சி, கிறிஸ்தவகுளம், தட்டாங்குளம், பாவற்குளம் மற்றும் கள்ளிக்குளம், கிளிநொச்சியில் வேரவில், கிராஞ்சி மற்றும் புளியம்பொக்கனை, மன்னாரில் இலுப்பக்கடவை போன்ற கிராமங்களைத் தெரிவு செய்தமை மூலம் FEED அமைப்பின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும், இலகுவாக மீண்டுவர முடியாத இழப்புகளை சந்தித்துள்ள எம் சமூகம், தன்னை மீள் நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய ஒரே வழி, கல்வித்துறையில் இன்று முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் பின்னடைவுகளில் இருந்து வேகமாக முன்னோக்கிச் சென்று உச்ச இலக்கை அடைவதுதான்.

அந்த இலக்கை அடைவதாயின் ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர் கல்வி என அனைத்துப்பிரிவுகளிலும் காணப்படும் பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து அவற்றைக் களையக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

அதன் அடிப்படையில், பாடசாலை முன்கல்விக் கூடங்களை வலுப்படுத்தும், வளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட பிரதேசங்களில், பொது அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகள் FEED அமைப்பின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களால் பரிசோதிக்கப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்ட பின்பு நிறைவேற்றிவைக்கப்படுகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில், தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளில், மிகக் குறைந்த வருமானத்தில் கடமையாற்றுகின்ற, வறுமை நிலையில் வாழும் ஆசிரியைகளுக்கு மாதாந்த உதவித் தொகை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் முன்பள்ளிகளில் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு அவசியமான சீருடைகள், கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன. முன்பள்ளியில் இருந்து அரச பாடசாலையில் ஆண்டு 01 ற்கு செல்லும் போது, அவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் முழுமையாக ஆண்டுதோறும் வழங்கி வைக்கப்படுகின்றன. சில முன்பள்ளிகளில் அக் கிராமங்களின் வறுமை நிலையினைக் கருத்திற்கொண்டு சத்துணவும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து சிரமங்களை நீக்கும் பொருட்டு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்படுகின்றது.

முன்பள்ளிகளுக்கான உதவிகளுக்கு மேலதிகமாக, அறநெறிவகுப்புகளுக்கும், மாலைநேர வகுப்புகளுக்கும், சம்பந்தப்பட்ட கிராமங்கள் எதிர்நோக்குகின்ற சமூக, பொருளாதார பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு அனுசரணை வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக மிகவும் கடினமான பொருளாதார மற்றும் உடலியியல் நெருக்கடிக்குள் வாழ்ந்து வருகின்ற பலருக்கும், உழைப்பாளிகளை இழந்து சமூக ஆதரவு தளத்தினை இழந்து வாழும் பெற்றோர்களுக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

FEED அமைப்பின் இன்னுமோர் விசேட செயற்திட்டமாக, உயர்கல்விக்கு அனுமதி கிடைத்தும் பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் கல்வியைத் தொடர சிரமப்படுகின்ற மாணவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு மாதாந்த உதவித்தொகை தொடர்ச்சியாக வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது.

தகுதியான பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் FEED அமைப்பின் வலைத்தளங்களில் வெளிப்படுத்தப்பட்டு, விண்ணப்பங்களுக்கான உதவியை செய்யக்கூடிய கொடையாளிகள் புலம்பெயர்ந்த எமது சமூகத்திடம் இருந்து பெறப்பட்டு உதவிகள் வழங்கப்படுகின்றன. தற்போது முப்பதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில மாணவர்களுக்கு FEED அமைப்பின் மூலமாகவும் ஏனையோருக்கு கொடையாளிகளால் நேரடியாகவும் வழங்கப்படுகின்றன .

தொடர்ச்சியான உதவிகளுக்குப் புறம்பாக, கல்விச் சமூகத்தின் அன்றாடப் பிரச்சினைகள் சம்பந்தமான கோரிக்கைகளும் அவ்வப்போது நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.

காரைதீவு, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் சுமார் எழுநூறு மாணவர்கள் பயனடையக்கூடியவிதத்தில் நடாத்தப்பட்ட சாதாரண தரப் பரீட்சைக் கருத்தரங்கு, மட்டக்களப்பின் இருட்டுசோலைமடு, ஈச்சந்தீவு, தாழங்குடா, ஊரியன்கட்டு பாடசாலைகளில் நடாத்தப்பட்ட விசேட வகுப்புகள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள், கன்னியாவில் இலவச கணணி பயிற்சி நிலையத்திற்காக வழங்கப்பட்ட கணணித் தொகுதி, கும்புறுப்பிட்டி நுரைச்சோலை பாடசாலைக்கு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட குழாய்நீர்க் கிணறு, பளை மத்தியகல்லூரியில் எழுத்தறிவு குறைவான மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிப் புத்தகங்கள், புளியம்பொக்கனை பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோகத் தொகுதி, மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்து மாணவர்களின் பெயரிலான வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட பணம், சைவசமய பாடநெறி கற்க முடியாத சூழல் நிலவிய கப்பாச்சிக் கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள அறநெறிப் பாடசாலை, பூநகரி, வேரவில் பாடசாலையில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ள நீர் விநியோகத் தொகுதி, கருநாட்டுக்கேணி அரச பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலத்திற்குப் பின் வழங்கப்பட்ட கழுத்துப்பட்டி ( TIE ), திருக்கோவில் ஊறணிபாடசாலையின் நூலகத்திற்கு வழங்கப்பட்ட நூல்கள், நான்கு உயர்கல்வி / பல்கழைக்கழக மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்ட கணணிகள் போன்ற பல விடயங்கள், பல்வேறு காலகட்டங்களில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் கல்விச் சமூகம் மற்றும் பொது மக்கள் அமைப்புகளின் கோரிக்கைக்கமையவே நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், FEED அமைப்பின் தொடர்ச்சியான செயற்திட்டங்களில் உள்வாங்கப்படாத முன்பள்ளிகள், சிறுவர் இல்லங்கள்,மகளிர் இல்லங்களின் தேவைகளும் உதவி வழங்க முன்வருகின்ற புலம்பெயர்ந்த உறவுகளின் ஆதரவுடன் காலத்திற்கு காலம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.

2016 ம் ஆண்டில், நான்கரை இலட்சம் ரூபாவிற்கும் மேலான பெறுமதியான ஒன்பது செயற்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2017 ம் ஆண்டில் பத்தொன்பது இலட்சங்களுக்கு மேலான பதினைந்துக்கும் மேற்பட்ட செயற்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

2018 ம் ஆண்டில், இருபத்துநான்கு இலட்சம் ரூபாவிற்கும் மேலான பெறுமதியான முப்பத்துமூன்று செயற்திட்டங்கள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2018 ம் ஆண்டில் பதினைந்து கல்வி நிறுவனங்களும் இருபத்துஇரண்டு ஆசிரியைகளும் நானூறுக்கு மேற்பட்ட மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் நாற்பத்தியொரு கிராமங்களும் பயனடைந்துள்ளன.

FEED அமைப்பு செயற்படத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றைய நாள் வரையிலும் இருபத்தியிரண்டு கல்வி நிவனங்களுக்கு தொடர்ச்சியான உதவிகள் கிடைக்கக்கூடியவகையில், புலம் பெயர்ந்த உறவுகளிடமிருந்து நிதியுதவிகள் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செயற்பாடுகளில் வெளிப்படைத்தமை, செயற்பாடுகளுக்கான பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டு விடயங்களிலும் FEED அமைப்பு கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடும், புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து ஆதரவளித்துவரும் கொடையாளிகளுடனான தொடர்ச்சியான, ஆரோக்கியமான கலந்துரையாடல்களுமே அமைப்பின் நடவடிக்கைகளை முன்னோகிச் கொண்டு செல்ல பிரதான காரணங்களுமாகும்.

FEED அமைப்பினது அர்ப்பணிப்பான செயற்பாடுகள் கன்னியா மகளிர் அமைப்பு, கொழும்பு தமிழ் சங்கத்தின் இலங்கை சைவ மன்றத்தினர் போன்ற சகோதர அமைப்புகளினால் காலத்துக்கு காலம் கெளரவப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மின்னஞ்சல் – [email protected]

இணையத்தளம் – www.feedtamils.com

முகப்புத்தகம் – Feedtamils

ஐ. யசோதரன்

செயலாளர்

கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ( FEED)

04.03.2019

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More