வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமான புல்மோட்டையில் தென்னமரவாடிக்கு அண்மையாகவுள்ள பகுதியில் இரண்டு புதிய சிங்கள குடியேற்றங்கள் சட்டவிரோதமான முறையில் உருவாக்கபட்டு வருகின்றமை (RTI) தகவல் அறியும் உரிமைசட்டம் மூலம் பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக உறுதிப்படுத்தபட்டுள்ளது .

PEARL action என்ற ஆய்வுநிறுவனம் கடந்தவாரம் புல்மோட்டையை அண்டிய பகுதியில் நடைபெற்றுவரும் சிங்கள மயமாக்கல் சம்மந்தமாக ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது .இந்த அறிக்கையில் வடக்கு கிழக்கின் எல்லையில் தமிழ் கிராமங்களை அபகரித்து மேற்கொள்ளபட்டுவரும் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பு தொடர்பில் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

தென்னமராவடியிலிருந்து புல்மோட்டை செல்லும் வீதியில் புல்மோட்டை போககவெவ (B60) வீதியில் உள்ள  குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் வரும் இரண்டு தமிழ் கிராமங்களை ஆக்கிரமித்து  பௌத்த பிக்குகளின் ஆதரவுடனும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்புடனும் வீடமைப்பு அதிகாரசபையால் வீடுகள்  அமைக்கப்பட்டு  குறித்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது .

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வரும் மாலனூர்(12ஆம் கட்டை)  ,மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) ஆகிய தமிழ் கிராமங்களை ஆக்கிரமித்து வீதியின் ஓரமாக பல சிங்கள குடும்பங்கள் காடுகளை வெட்டி தற்காலிக  வீடுகளை அமைத்து குடியேறியுள்ள நிலையில் அவர்களுக்கு வீடமைப்பு அதிகாரசபையால் பிரதேச செயலகத்தின் எந்தவிதமான அனுமதிகளுமின்றி வீட்டு திட்டங்களுக்கான நிதி வழங்கப்பட்டு வீடுகளை அமைக்கும் வேலைகள் நடைபெற்றுவருகின்றது .

இந்த குடியேற்றங்கள் தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது (கோரிக்கை  பதிவு இலக்கம் 069)  . அதாவது குறித்த குடியேற்றங்கள் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் இடம்பெறுகின்றதா எனவும் ,  இந்த குடியேற்றங்களுக்காக தற்போது மைக்கப்பட்டுவரும் வீடுகள் தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகத்தின் அனுமதி  பெறப்பட்டதா ? இந்த பிரதேசம் குச்சவெளி பிரதேச செயலக ஆடசி பகுதிக்குள்  வருகின்றதா எனவும் கேள்விகள் கேட்க்கப்பட்டது.

இதற்க்கு குச்சவெளி பிரத்தேச செயலகத்தால்  பதில் வழங்கப்பட்டுள்ளது ,

அதாவது குறித்த பிரதேசத்தில் குறித்த நபர்களால் அத்துமீறல் மேற்கொள்ளப்பட்டே குடியேறினர் எனவும் ,குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் அத்துமீறி ஆட்சி செய்ததன் காரணமாக வெளியேற்றல் கட்டளை  பிறப்பிக்கப்பட்டதாகவும்  காணி பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதிகள் எவையுமின்றி வீடமைப்பு அதிகாரசபையால் வீடுகள் அமைக்கப்பட்டுவருவதாகவும் குறித்த பிரதேசம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குள் வருவதனால்   எமது பிரதேச செயலாகத்தாலேயே  நிர்வகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அறியும் உரிமைசட்டம்  மூலம் பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக இங்கே அத்துமீறல் மேற்கொள்ளப்பட்டு குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுவருவது அம்பலத்துக்கு வந்துள்ளது . இந்த குடியேற்றங்களை அண்மையாக 24 மணிநேரமும் சிவில் பாதுகாப்பு திணைக்கள இராணுவத்தினர் இருவர் பாதுகாப்பு அரண் ஒன்றை அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு மாலனூர் பிரதேசத்தில் மேற்கொள்ளபட்டு வரும் குடியேற்றத்துக்கு “சாந்திபுர” எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

அத்தோடு ஒவ்வொரு குடியேற்றத்துக்கும் அண்மையாக பௌத்த விகாரை மற்றும் புத்தர் சிலை என்பன அமைக்கப்பட்டுள்ளது. நான்கு பௌத்த பிக்குகளுக்கு மேற்பட்டவர்கள் இந்த பிரதேசத்துக்கு அண்மையாக 13ஆம் கட்டை  பகுதியில் மடம்  ஒன்றை அமைத்து அங்கே தங்கியிருந்து இந்த குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாகவும் பௌத்த சின்னங்களை  புல்மோட்டையை சுற்றியுள்ள 30சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில்  அமைத்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கையும் கிழக்கியும் இணைக்கும் தமிழர் தாயக பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த குடியேற்றங்கள் தொடர்பில் எந்த தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகள் எவரும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இந்த பிரதேசங்களுக்கு வந்துகூட பார்க்கவில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். (நன்றி வீரகேசரி)