இலங்கை பிரதான செய்திகள்

ஐ.நாவின் அறிக்கையை முழுமையாக ஏற்க முடியாது! ஒரேபார்வையில் ஜெனீவா…

Thumbnail01:22:55

ENGLISH20 MAR 2019

2009ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற போர் மற்றும் அதற்குப் பிந்தைய இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்த மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்செலெட்டின் உரை இடம்பெற்று வருகின்றது.

அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனின் உரை இடம்பெறவுள்ளது. இதன்போது, அவர் ஐ.நாவின் உரையை முழுமையாக ஏற்க முடியாது என்றும், இலங்கையில் தற்போது நிலமைகள் மாற்றமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மன்னாரின் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி பிரித்தானிய ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்றும் அதனை வேறு விதமாக சித்திரிக்க முடியாது என்றும் திலக் மாரப்பன தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக மற்றுமொரு சட்டம் உருவாக்கப்படுவதாகவும் 2017ஆம் ஆண்டின் பின்னர், இலங்கை ஐ.நா பிரேரணைகளை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐநாவின் பிரேரணை, உரிய கால எல்லைக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய உரிய காலஎல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஐ.நா. பிரேரணையை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்க பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதி பொறிமுறையை செயற்படுத்தாமை தொடர்பாக ஐ.நா. ஆணையாளர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட  கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி, வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது எனவலியுறுத்தியுள்ளார்.

“தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்”

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இதனை அறிவித்துள்ளது.

இது குறித்து கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஹல்போன் கருத்து வெளியிடுகையில், “தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு நாம் தொடர்ந்தும் போராடுவோம். இந்த விடயம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பலமாக ஒலிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையில் போர்க்காலத்தில் தமிழ்மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லை என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் போல் ஸ்கல்லி குற்றஞ்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 13ஆவது திருத்த சட்டமூலத்தை,  முழுமையாக நடைமுறைப்படுத்துவதனூடாகவே  தமிழர் பிரச்சினைகளை தீர்க்கமுடியும்..

இலங்கை தமிழர் பிரச்சினைகளை தீர்க்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தில் உள்ள விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஐ.நா. பிரேரணையை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்க பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதி பொறிமுறையை செயற்படுத்தாமை தொடர்பாக ஐ.நா. ஆணையாளர் மிச்செல் பாச்லெட் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

குறித்த அறிக்கையை தொடர்ந்து உரையாற்றியபோதே இந்தியா இதனை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தமது நட்புநாடு என்றவகையில் சகல விடயங்களிலும் இந்தியா துணை நிற்கும், குறிப்பாக தேசிய ஒற்றுமை, மனித உரிமை போன்ற விடயங்களில் அதிக கரிசனை கொண்டுள்ளதாக இந்தியா தெரிவித்தது. அத்தோடு, இலங்கையின் தமிழ் சமூகம் தொடர்பாக கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மீள்குடியேற்றம் நல்லிணக்கம் போன்ற விடயங்கள் தொடர்பாக நிலையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் எனவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.