இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

யாருக்கு வெற்றி? பி.மாணிக்கவாசகம்

நியாயத்தையும் நீதியையும் நிலைக்கச் செய்வதில் ஐநாவையும் சர்வதேசத்தையும் எதிர்கொள்வது அல்லது கையாள்வதில் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களின் அணுகுமுறை மிக மிக முக்கியமானது. ஐநாவையும் சர்வதேசத்தையும் உரிய முறையில் கையாள்வதன் ஊடாக மட்டுமே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அநியாயங்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல், நான்கு பொறிமுறைகளைக் கொண்ட நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கும் இந்த அணுகுமுறை மிக மிக அவசியமாகும்.

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்று ஐநா மன்றமே வலிந்து முன்வந்து
அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தது.

யுத்தம் முடிவுக்கு வந்த உடன் இலங்கை;கு விஜயம் செய்த ஐநா செயலாளர் நாயகம் பன் கீ மூன் நிலைமைகளை நேரில் கண்டறிந்ததுடன், அன்றைய ஜனாதிபதியை உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற கடப்பாட்டில் அவரை அழுத்திப் பிடித்திருந்தார். அந்தக் கடமையில் இருந்து விடுபட முடியாதவாறு, பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை ஏற்றுச் செய்வதை உறுதிப்படுத்தி இருவரும் இணை அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தனர்.

தொடர்ந்து ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகi; அடுத்தடுத்து நிறைவேற்றி. ஊரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த பொறுப்பு கூறும் விடயத்தில் ஐநா மனித உரிமைப் பேரவையையும் அதன் உறுப்பு நாடுகளாகிய சர்வதேசத்தையும் நம்பியிருந்த தமிழர் தரப்பு, தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த காத்திரமான தகவல்களைத் திரட்டி, அவற்றை உரிய ஆவணங்களாக ஐநா மனித உரிமை ஆணையாளருக்கோ அல்லது ஐநா மனித உரிமைப் பேரவைக்கோ சமர்ப்பித்ததாகத் தெரியவில்லை.

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்பே, ஐநா மனித உர்pமைப் பேரவையில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கத்தக்க வகையில் அரசின் அனுசரணையுடன் 30-1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்றில் இருந்து கடந்த நான்கு வருடங்களாக மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்கள் சார்பில் இருந்து பதிவுகளோ அல்லது நம்பகமான ஆவணங்களோ முன்வைக்கப்படவில்லை.

ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பிலான பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களும், அறிக்கையிடுகின்ற அதிகாரிகளும் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்துத் தகவல்களைத் திரட்டிச் சென்ற போதிலும், பாதிக்கப்பட்ட மக்களால் சுயமான ஆவணத் தகவல்கள் திரட்டப்படவில்லை. அத்தகைய செயற்பாட்டை முன்னெடுத்து, தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற உரிமைக்குரலை உரிய முறையில் முன்வைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பும்சரி, வடமாகாணத்தை நிர்வாகம் செய்த மாகாணசபையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் உள்ளிட்ட சபை உறுப்பினர்களும்சரி, எந்தெந்த வகைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் என்ன, காணாமல் போயுள்ளவர்களின் சரியான எண்ணிக்கை என்ன, இராணுவத்தினரால் கையப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் பற்றிய முழமயான விபரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் என்பன திரட்டி தொகுக்கவில்லை.

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் பற்றிய முழுமையான சரியான புள்ளிவிபரங்களோ அல்லது உரிமையாளர்களாகிய பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை ஏக்கர் காணிகள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளன என்ற துல்லியமான விபரங்களும் காலத்துக்குக் காலம் திரட்டப்படவில்லை.இது பாதிக்கப்பட்டவர்களாகிய தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், ஒரு பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் இன்று உள்நாட்டில் கூர்மையடைந்துள்ளது. ஆயினும் எத்தனை பேர் உண்மையாகவே காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்ற சரியான புள்ளிவிபரத் தகவல்கள் முறைப்பாட்டாளர்கள் மத்தியில் இருந்து வெளியிடப்படவில்லை. அத்தகைய புள்ளிவிபரம் திரட்டப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை. இதனால் பலவீனமான ஒரு நிலையில் இருந்தே பாதிக்கப்பட்ட மக்கள் நீதியையும் நியாயத்தையும் கோரி நிற்கின்றார்கள்.

இத்தகைய பின்னணியில்தான், அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் 30-1 இல் தொடங்கி 34-1 ஆக மாறி இப்போது 40-1 ஆக விரிவடைந்திருக்கின்றது. ஆனால், 2015 ஆம் ஆண்டில் ஐநாவுக்கு இணை அனுசரணை வழங்கியபோது இருந்த நிலைமையில் இருந்து ஒரு சிறிய முன்னேற்றத்தையே அரசு இதுவரையில் காட்டியிருக்கின்றது. இந்த நிலையில் 40-1 அடுத்ததாக சிறப்பாகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமின்றி 52-1 ஆக மாறுமோ தெரியவில்லை

அரசாங்கத்தின் பிடிவாதமான நிலைப்பாடு

நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கி நாட்டில் நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் நிரந்தரமான அமைதியையும் நிலைநாட்டுவதற்கு அராசங்கம்கடமைப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமைப் பேரவையில் கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். ஆயினும் சர்வதேச நீதிபதிகள் விசாரணைப் பொறிமுறைகளில் உள்வாங்கப்படமாட்டார்கள். நிலைமாறுகால நீதிக்கான செயன்முறைகளைக் கண்காணிப்பதற்கு ஐநா அலுவலகம் ஒன்று இலங்கையில் அவசியமில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள்நிகழாமையை உறுதி செய்தல் என்ற நான்கு பொறிமுறைகளும் உருவாக்கப்பட்டு;, தேசிய நலன்களுக்கும், பண்புகளுக்கும் அமைவாகவே காரியங்கள் முன்னெடுக்கப்பட முடியும் என்பதையும் அவர் அழுத்தி உரைத்துள்ளார். இந்த நிலையில் வெளித் தலையீடுகள் அவசியமில்லை. உள்ளக நீதிப்பொறிமுறையின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குவது என்பது அரசியல் ரீதியாக சிக்கலான விடயம். நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு விதிகளுக்குக் கீழ் வெளியாட்களை நீதிப்பொறிமுறையில் உள்வாங்கிச் செயற்பட முடியாது. அத்தகைய வினையாற்றலுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலமே அரசியலமைப்பில் மாற்மற் செய்து அத்தகைய வினையாற்றலை முன்னெடுக்க முடியும். அது நாட்டின் அரசியல் சூழலில் சாத்தியமற்றது என்றும் வெளிவிவகார அமைச்சரின் ஊடாக இலங்கை தனது நிலைப்பாட்டை மனித உரிமைகள் பேரவையில் தெளிவுபடுத்தியுள்ளது.

மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றனவா, சர்வதேச மனிதாபிமான சட்டமுறைமைகள் மீறப்பட்டிருக்கின்றனவா, போரக்குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றனவா, என்ன நடந்திருக்கின்றது என்ற உண்மையைக் கண்டறிவதே பொறுப்பு கூறுதலின் உண்மையான நோக்கமாகும்.

ஆனால், அரசாங்கத்தைப் பொருத்தமட்டில் உண்மையைக் கண்டறிதல் என்பது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஊடாக, உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு ஒன்றின் மூலம் விசாரணைகளை நடத்துவது என்ற வகையிலேயே வரையறுத்துள்ளது.

நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான நான்கு பொறிமுறைகளில் ஒன்றாக காணாமல் போனோருக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் அதற்குரிய வளங்களுடன் ஏற்கனவே செயற்பட்டு வருவதாகவும், உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு ஒன்றை சட்ட வலு கொண்டதாக உருவாக்குவதற்கான சட்ட வரைபு ஒன்றை அமைச்சரவை பரிசீலித்து வருவதாக அரசு ஐநா மனித உரிமைப் பேரவைக்கான தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் கீழ் உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு செயற்படவுள்ளது என்பது, உண்மையிலேயே உண்மையைக் கண்டறிவதற்கான வழிவகைதானா என்பது கேள்விக்குரியது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினை என்பது உரிமை மீறல்கள், சர்வதேச சட்டமீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றின் ஓர் அம்சமே அல்லாமல் அது முழுமையானதல்ல. உண்மையைக் கண்டறிதல் என்பது விரிவானது. ஆழமானது. அதேவேளை, விசாலமான நடவடிக்கைகளை உள்ளடக்கியதுமாகும்.

நீதியை நிலைநாட்டுதல்

நீதியை நிலைநாட்டுதல் என்பது விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவது என்ற அளவிலேயே அரசு மட:;டுப்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது.

நீதியை நிலைநாட்டும் விடயத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்த்pன் கீழான வழக்குகள் மீளாய்வ செய்யப்படுவதாகவும், அந்த வழக்கு விசாரணைகள் துரிதப்பட்டிருப்பதாகவும் அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது. அதேவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக, சர்வதேச தரத்துக்கும், நடைமுறைகளுக்கும் அமைவாக ஒரு சட்டத்தை உருவாக்குவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆராயப்பட்டு வருவதாக அரசு தனது அறிக்கையில் கூறியிருக்கின்றது.

நீதி வழங்குதல் என்பது விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை அல்ல. உரிமை மீறல்கள், சர்வதேச சட்டமீறல்கள், போர்க்குற்றச் செயல்கள் என்பவற்றுக்குக் காரணமானவர்களையும், அந்தக் குற்றங்களைப் புரிந்தவர்களையும் விசாரித்தறிந்து தண்டனை வழங்குவதன் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும். இறுதிக் கட்ட யுத்தத்தி;ன்போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்காக வந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடக்கம், இறுதிச் சண்டைகளின்போது கொல்லப்பட்டதாக ஐநா குறிப்பிட்டுள்ள நாற்பதாயிரம் பேரின் மரணத்திற்கான நீதி வழங்குவதும், நீதி வழங்கும் நடவடிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.

அத்துடன், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவுடன், உயிர் தப்பியிருந்த – ஆயுதமேந்திப் போராடியவர்களுக்குப் பாதுகாப்பும் பொதுமன்னிப்பும் வழங்கப்படும் என்று உறுதியளித்து, அவர்களை இராணுவத்திடம் சரணடையச் சொன்ன அரசாங்கம், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தி அவர்களை இது வரையில் காணாமல் ஆக்கியிருந்தவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதையும்கூட நீதியை நிலைநாட்டுகின்ற நடவடிக்கை உள்ளடக்க வேண்டும். வெறுமனே அரசியல் கைதிகளின் விடுதலையை கவனத்தில் எடுக்கின்ற நடவடிக்கை மாத்திரம் நீதியை நிலைநாட்டுவதாக அமையமாட்டாது.

அளவுக்கு மீறிய சக்தியையும் வலிமையையும் பயன்படுத்தி பல்வேறு கனரக ஆயுதங்களையும் தடை செய்யப்பட்ட வெடிபொருட்களையும் பயன்படுத்தியதன் மூலம், யுத்த மோதல்களின்போது நிராயுதபாணிகளான பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது, யுத்த பி|ரதேசத்தில்; சிக்கியிருந்த பொதுமக்களை ஆபத்தான சூழலில் இருந்து வெளியேற முடியாமல் தடுத்ததுடன், யுத்த பிரதேசத்தில் காயமடைந்தவர்களுக்கும் அங்கு சிக்கியிருந்தவர்களுக்கும் உரிய உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படையிலான அத்தியாவசிய சேவைகளை மறுத்திருந்தது, வைத்தியாசலைகள் இலக்கு வைக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு பாரது10ரமான நடவடிக்கைகளும் நீதி வழங்கும் விடயத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த விடயங்கள் அரசாங்கத்தின் நன்மைக்கும் வசதிகளுக்குமாக நீதியை நிலைநாட்டும் விடயத்தில் மறக்கப்பட்டுள்ளது. மறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டின் மூலம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நீதி நிலைநிறுத்தப்படுமா என்பது சந்தேகத்துக்குரியது.

இழப்பீடும் மீள்நிகழாமையை உறுதி செய்தலும்

நீதிக்கு அடுத்ததாக இழப்பீடு வழங்கும் விடயத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இதுவரையில் ஆட்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் வழங்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதையே பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது.

இழப்பீட்டுக்கான அலுவலகம் ஒன்று சட்டரீதியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கென மூன்று ஆணையாளர்களை நியமனம் செய்வதற்கான பெயர்கள் அரசியலமைப்புச் சபைக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது என்றும் அரசாங்கம் கூறியிருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் நடவடிக்கைகள் காரணமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றார்கள். அவற்றில் மிகப் பாரதூரமானவை கணிக்கப்பட்டு அவற்றுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் அந்த அளவுக்கு இந்த விடயத்தை விரிவாக நோக்கியிருக்கவில்லை என்பது கவனத்திற்குரியது.

நிலைமாறுகால நீதியின் இறுதி அம்சமாகிய மீள் நிகழாமையை உறுதி செய்தல் என்பது, நல்லிணக்கத்தை உருவாக்குதல் மட்டுமே என்ற வகையில் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதையும் காண முடிகின்றது. தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகப் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

.இந்த நடவடிக்கைகளின் மூலம் உருவாக்கப்படுகின்ற நல்லிணக்கத்தின் மூலம் மட்டுமே மீள்நிகழாமையை உறுதி செய்ய முடியும் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாகவும் நடவடிக்கையாகவும் வெளிப்பட்டிருக்கின்றது. உண்மையில் மீள் நிகழாமையை உறுதி செய்வதென்பது, பிரச்சினைக்கு அடித்தளமாகக் காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே தங்கியிருக்கின்றது.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதோர் அரசியல் தீர்வு காண்பதன் ஊடாக மட்டுமே நாட்டில் நல்லிணக்கத்தையும் பன்முகத்தன்மையையும் கொண்ட அமைதியானதோர் அரசியல் சூழலை உருவாக்க முடியும். அந்த நோக்கத்தில் நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைகள் செயற்படுத்தப்படும் என்ற நிலைப்பாட்டை ஐநா மனித உரிமைப் பேரவைக்கான அரசாங்கத்தின் அறிக்கை வெளிப்படுத்தவில்லை. இது துரதிஸ்டவசமானது. குவலைக்குரியதுமாகும்.

மொத்தத்தில் நிலைமாறுகால நீதிக்கான நான்கு பொறிமுறைகளையும் மேலோட்டமான நடவடிக்கைகளாகவும், மேம்போக்கான செயற்பாடாகவுமே அரசாங்கம் கருதிச் செயற்பட முற்பட்டிருக்கின்றது என்பதையே ஐநா மனித உரிமைப் பேரவைக்கான அறிக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது.

குறிப்பாக ஐநா மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கைக்குப் பதிலளிக்கின்ற அதேவேளை, நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்குரிய செயற்பாடுகளைத் தெளிவுபடுத்துவதாகவே அரசாங்கத்தின் அறிக்கை அமைந்திருக்கின்றது. அது தொழில்நுட்ப ரீதியில் அமைந்திருப்பதையே அவதானிக்க முடிகின்றது.

தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு யுத்த மோதல்கள் காரணமாக ஏற்பட்ட விளைவுகளுக்கும் பாதிப்புகளுக்கும் பொறுப்பேற்கின்ற கடப்பாட்டை உளப்பூர்வமாக நோக்கி அதனை வினைத்திறன்மிக்க நடவடிக்கைகளின் நிறைவேற்றுகின்ற பொறுப்புணர்வை அந்த அறிக்கையில் காண முடியவில்லை.

இருப்பினும் 40-1 தீர்மானத்தின் மூலம் ஐநா மனித உரிமைப் பேரவை 2015 ஆம் ஆண்டின் 30-1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் நிலைப்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கூற்றுக்கமைய மேலும் இரண்டு வருட காலம் இலங்கையை ஐநா மனித உரிமை ஆணையாளரின் கண்காணிப்பில் வைத்திருப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஐநா எதிர்பார்க்கின்ற பொறுப்பு கூறல் நடவடிக்கை நிறைவேற்றப்படுமா என்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐநா மன்றம் மற்றும் சர்வதேசத்தின் மூலம் நீதி கிடைக்குமா என்பது நிச்சயமற்ற ஒன்றாகவே தெரிகின்றது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், நீதி நியாய மறுப்புக்கள், அரசியல் மற்றும் குடிமக்கள் என்ற ரீதியிலான இருப்புக்கான உரிமை மறுப்புக்கள் என்பவற்றுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால், ஐநா மனித உரிமைப் பேரவையையும் கடந்து தமிழர் தரப்பின் நியாயத்தை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்துப் போராட வேண்டியிருக்கும்.

இத்தகைய விரிந்து பரந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு யார் முன்வரப் போகின்றார்கள் என்பதே இப்போதைய கேள்வியாகும்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.