வாள்வெட்டு வன்முறைகள் பாரதூரமானவை. அவை சமூகத்தை பீதிக்குள்ளாக்குபவை. அவற்றில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே அமையும் எனச் சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தச் சம்பவம் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி மாலை இடம்பெற்றது. வன்முறையை அடுத்து துரித விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.
சம்பவ நடைபெற்ற அன்றைய தினம், பெற்றோல் குண்டு வீசச் சென்ற இளைஞர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கங்களை கருவப்புலம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொலின் மூலம் அடையாளம் காணப்பட்டன.
அதனையடுத்து மறுநாளே சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
மல்லாகத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் துஷ்யந்தன், சுதுமலையைச் சேர்ந்த பாஸ்கரன் தனுசன், ஊரெழுவைச் சேர்ந்த சந்திரசேகரன் லதீசன், சுன்னாகத்தைச் சேர்ந்த ரதிகரன் துவாகரன் ஆகிய மூவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள்கள், கோடாரிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டன.
ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் சம்பவ இடம்பெற்ற வீட்டில் முன்னர் வசித்தார். அவர் தற்போது அங்கு இல்லை. அவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எனக் காவற்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களில் மூவரை சாட்சி அடையாளம்காட்டியிருந்தார். வழக்கில் கடந்த தவணையின் சந்தேகநபர்களில் ஒருவருக்கு மன்று பிணை வழங்கியிருந்த்தது.
யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் நால்வரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவர் சார்பிலும் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் மற்றும் சட்டத்தரணி வி.கௌதமன் பிணை விண்ணப்பம் செய்தனர். இதன்போதே பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிவான், சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்தார்.
Add Comment