உலகம் பிரதான செய்திகள்

சூடானில் போராட்டத்தில் 16 பேர் பலி – ராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல் :


சூடானில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்நாட்டு ராணுவ ஆட்சித்தலைவர் பதவி விலகியுள்ளார்.   சூடானில் அங்கு கடந்த 1993-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த 75 வயதான உமர் அல் பஷீர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச நீதிமன்றில் வழக்கு பதிவாகி, குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

மேலும் அங்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதனால் அவரை பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வந்தநிலையில் கடந்த 11ம் திகதி அந்த நாட்டின் ராணுவ அமைச்சராக இருந்த அவாத் இப்ன் அப், ராணுவத்தின் உதவியுடன் உமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்ததுடன் ராணுவ ஆட்சியை பொறுப்பேற்கும் வகையில் ராணுவ பேரவையின் தலைவராக பதவி ஏற்றார்.

ஆட்சியை கவிழ்த்த நிலையில், சர்வதேச நீதிமன்றில் வழக்கு இருந்தாலும், உமர் அல் பஷீர் நாடு கடத்தப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டதுடன் 2 ஆண்டுகள் ராணுவ ஆட்சி தொடரும் எனவும் அதன்பின்னர்தான் சூடானில் மக்களாட்சியை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

எனினும் ராணுவ ஆட்சியை மக்கள் ஏற்காது பெருமளவில் போராட்டங்கள் இடம்பெற்றதில் 2 நாள் போராட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் ராணுவ ஆட்சித்தலைவர் அவாத் இப்ன் அப் தான் பதவி விலகுவதாகவும் ராணுவ ஆட்சியை லெப்டினன்ட் ஜெனரல் அப்தெல் பட்டா அப்தெல் ரகுமான் புர்ஹான் தலைமை ஏற்று தொடர்ந்து நடத்துவார் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் மக்களாட்சியை ஏற்படுத்தாதவரையில், வீதிகளை விட்டு விலக மாட்டோம் என்று போராட்டம் நடத்தி வருகிறவர்கள தெரிவிக்கின்ற நிலையில் போராட்டங்களும் வலுத்து வருவதனால் சூடானில் பெரும் குழப்பம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.